சீரழித்த சினிமா – 21
படையப்பா
நீலாம்பரி சின்ட்ரோமும் ஹைபர் ஆண்மை ப்ராப்ளமும்!
படையப்பா படத்தை நீங்கள் ஒரு மாஸ் மசாலா என்று
கடந்து போயிருக்கலாம். ஆனால், ஒரு பின் நவீனத்துவ, இருத்தலியல் நோக்கில் பார்த்தால்,
அது தமிழ் சமூகத்தின் கூட்டு நனவிலி மனதைச் சீரழித்த செல்லுலாய்டு பாஸ்ட்புட் நூடுல்ஸ்.
இது உழைக்கும் வர்க்கத்திற்குத் தந்த போலி
நம்பிக்கையான திடீர் அதிர்ஷ்டம் உங்களை முதலாளி ஆக்கும் என்ற நுகர்வோர் கலாச்சாரச்
சீரழிவின் தொடக்கம் ஆகும்.
தனக்கு வேண்டியதைத் துணிச்சலாகக் கேட்கும்
பெண் வில்லி, அமைதியாகப் பவ்யமாகப் பாம்புப் புற்றுக்குக் பால் ஊற்றும் பெண் நல்லவள்
என்ற பிற்போக்குத்தனமான இருமை நிலையைத் தேவையில்லாத ஆணியாய்த் தமிழர்களின் மண்டைக்குள்
ஆழமாக இறக்கியது படையப்பா.
என் வழி, தனி வழி என்ற இப்படத்தின் வசனம் ஏதோ
தத்துவார்த்தமான வரிகளைப் போலக் கொண்டாடப்பட்டாலும், உண்மையில் இது சமூகப் பொறுப்புகளில்
இருந்து தப்பி ஓடும் ஒரு நிஹிலிச சிந்தனை.
நாயகனின் படையப்பா என்ற எதற்கும் அசையாத, எப்போதும்
அதிகாரம் பேசும் போலிப் புனித பிம்பமும், நீலாம்பரி என்கிற ஒட்டுமொத்தப் பெண் இனத்தின்
திமிராகச் சித்திரிக்கப்பட்ட பலிகடாப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின்
மூளையை எப்படி ஒரு ஜமீன்தார் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப்
பார்ப்போம்.
படையப்பா திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக்
கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த பாலினக் கல்வி என்ன தெரியுமா?
பெண்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்
கூடாது என்பதை ஓர் ஆண்தான் வகுக்க வேண்டும். ஒரு பெண் அழகாகவோ, திமிராகவோ, கோபமாகவோ
இருந்தால் அவளுக்குப் பெயர் நீலாம்பரி. அவள் அடக்கமாக, பயந்து நடுங்கிக்கொண்டு, சமையலறையில்
வேலை பார்த்தால் அவளுக்குப் பெயர் வசுந்தரா.
அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற
பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது, என்ற ஒற்றை வரி பாசிசத் தத்துவத்தின்
மூலம், பெண்ணின் சுயமரியாதையும் கோபத்தையும் அடியோடு குழிதோண்டிப் புதைத்தது படையப்பா.
ஒரு ஆண் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆசைப்படலாம், சபதம் எடுக்கலாம்; ஆனால் பெண் தன்
உரிமையைக் கேட்டால், கொஞ்சமேனும் கோபப்பட்டால் அவள் அழிந்து போவாள் என்று தமிழ் இளைஞன்
நம்பத் தொடங்கினான்.
விளைவு?
இன்றுவரை நிஜ வாழ்க்கையில் தனக்கென ஒரு சுய
சிந்தனையோ, ஆளுமையோ காட்டும் பெண்களைப் பார்த்தால், நீயென்ன பெரிய நீலாம்பரின்னு நெனப்போ?
என்று சமூக வலைத்தளங்களில் வசைபாடி, பெண்களைத் தங்களுக்குக் கீழ் வைக்கத் துடிக்கும்
ஓர் ஆபத்தான பெண் வெறுப்பு சமூகத்தின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.
படையப்பா படத்தில் ஒட்டுமொத்த நிலப்பிரபுத்துவ
கௌரவத்தை மாஸ் ஹீரோயிசம் என்று காட்டி விற்றுதான் கல்லா கட்டினார்கள். நீலாம்பரி தன்
வீட்டுக்கு வரும் படையப்பாவை அவமானப்படுத்த ஊஞ்சலை மேலே ஏற்றி வைப்பார். ஆனால், ஹீரோ
தன் சால்வையை வீசி, ஊஞ்சலைத் கீழே இழுத்து, அதில் கால் மேல் கால் போட்டு அமர்வார்.
இந்த உறைபனியூட்டும் சாதிய, நிலப்பிரபுத்துவ
அதிகாரப் பகட்டை, மிக விசித்திரமான பின்னணி இசையால் மூடி மறைத்து, பார்ப்பவர்களை ஸ்டைலிஷாக
ஏமாற வைத்தார் இயக்குனர்.
உழைப்பையும், மனிதநேயத்தையும் விடுத்து, போலிப்
பாரம்பரியக் கௌரவத்தை உன்னதம் என்று காட்டி, பார்ப்பவருக்குப் பகுத்தறிவின் மீதான தேவையையே
துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.
இதன் விளைவாகத்தான் கிராமங்களில் இன்னமும்
பட்டுத் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு பஞ்சாயத்து செய்து மனித உரிமைகளைப் பறிக்கும்
போலி நாட்டாமைத்தனத்தைத் தன் ஸ்டைல் என்று நினைத்து வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தான் ஹைடெக்
தமிழன்.
இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட
வேலை மிகவும் வக்கிரமானது. வசுந்தரா என்ற கதாபாத்திரம், ஏதோ ஹீரோவின் பட்டு வேட்டியைத்
துவைப்பதற்கும், நாயகன் வரும்போது குனிந்து சல்யூட் அடிப்பதற்கும் மட்டுமே பயன்படும்
ஒரு வீட்டுப் பொருளாகக் காட்டப்பட்டார். இன்னொரு புறம், பதினெட்டு வருடங்கள் ஓர் அறைக்குள்
பூட்டிக்கிடந்து பழிவாங்கத் துடிக்கும் நீலாம்பரி, தன் ஈகோ உடைந்தவுடன் தற்கொலை செய்துகொண்டார்.
பெண் என்பவள் ஒன்று ஆணுக்கு அடங்கிப் போகும்
அடிமை, இல்லை என்றால் ஆணின் கௌரவத்திற்கு முன்னால் மண்டியிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும்
அகந்தை என்ற இரு முனைகளுக்குள் பெண்களின் ஒட்டுமொத்த ஆளுமையையும் அடியோடு மழுங்கடித்தது
இத்திரைப்படம்.
பெண் என்பவள் தனக்கென ஒரு சுயமரியாதையோடு வாழக்
கூடாது; அவளை ஆட்டிப் படைப்பது ஆணின் விரல் அசைவில் தான் இருக்கிறது என்ற கொடூரமான
ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்ற லேபிளோடு நேர்த்தியாகப்
பட்டுவாடா செய்தது.
படையப்பா பாக்ஸ் ஆபீஸில் நூறு கோடிகளைக் குவித்து,
சூப்பர் ஸ்டார் பிம்பத்திற்குத் தங்கக் கிரீடம் சூட்டி இருக்கலாம். படம் ஒரு சிறந்த
கமர்ஷியல் எண்டர்டெய்னர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கேசட்டுகளும், டிக்கெட்டுகளும்
கோடிகளில் விற்றன. ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?
சமூகம் மற்றும் பாலின ரீதியாகப் பார்த்தால்,
அது பெண்களை இரண்டாம் தரமாக நடத்தும் சிந்தனைக்கும், தனிமனித வழிபாட்டுக்கும் இன்னும்
கொஞ்சம் நெய் ஊற்றி வளர்த்துவிட்டது கொழுந்து விட்டு எரியச் செய்தது என்பதுதான் நிஜம்.
பெண்ணடிமைத்தனம் மற்றும் அடக்கமே பெண்மை என்ற
கற்கால பிற்போக்குத்தனத்தைத் தற்கால நடைமுறைகளாகச் செல்லுலாய்டு பாலிஸ் தடவி, ஸ்டைலிஷ்
பெய்ண்ட் அடித்து தமிழ்ச் சமூகத்தை இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னே தள்ளியது
படையப்பா.
சுயமரியாதையை ஆணவமாகச் சித்தரித்தும், ஆணுக்கு
அடங்கும் பெண்ணடிமைத்தனத்தை விதந்தோதியும் பெரியாரிய சிந்தனைகளைப் பின்னுக்கு இழுத்து,
அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டுமாம், கற்பு நிலையென்றால் இருசாரருக்கும் பொதுவாக்குவோம்
என்ற பாரதியின் வரிகளுக்கு ரிவீட் அடித்து அச்சமும் நாணமும் பெண்களுக்கு மீண்டும் மீண்டும்
வேண்டும் என்று சுத்தி சுத்தி வந்து சுட்டு விரலால் சுட்டு எடுத்தது படையப்பா.
*****

No comments:
Post a Comment