தூக்கி எறிதலின் தத்துவம்!
உலகம்
ஒரு பெரிய குப்பைத் தொட்டி. நாம் அதன் கௌரவமிக்க விநியோகஸ்தர்கள்.
முன்பெல்லாம்
எழுதுகோலில் மை தீர்ந்தால், பத்து காசுக்கு மை வாங்கி ஊற்றி, விரல் முழுக்க நீல நிறத்தை
அப்பிக்கொண்டு அலைவதில் ஒரு கலை அம்சம் இருந்தது. இன்று பத்து ரூபாய் பேனாவில் மை தீர்ந்தால்,
அதை ஒரு கணம் கூடத் திரும்பிப் பார்க்காமல் அதை யூஸ் அன்ட் த்ரோ பார்ட்டியாக்கி விட்டார்கள்.
ஏன்?
நேரமில்லையாம்.
ஒரு
பேனாவைத் திறந்து ரீபிள் மாற்ற நேரமில்லாத மக்கள், அடுத்த ஒரு மணி நேரத்தை ரீல்ஸ் பார்த்து
நேரத்தைத் தொலைக்கக் காத்திருக்கிறார்கள் என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் நகை முரண்.
கடைக்குச்
செல்லும்போது துணிப்பையை எடுத்துச் செல்வது கௌரவக் குறைச்சல் என்று நாம் நினைக்கத்
தொடங்கியதிலிருந்து, நம் வீடுகள் நெகிழிப் பைகளின் குடோன்களாக மாறிவிட்டன.
அடுக்குமாடி
குடியிருப்புகள் இன்று குப்பை உற்பத்திக் கூடங்கள். ஒரு வாரத்தில் ஒரு டன் குப்பை.
நாம்
எதைச் சேமிக்கிறோமோ இல்லையோ, கழிவுகளை மிகச் சரியாகச் சேமித்து இயற்கைக்குத் தானம்
செய்கிறோம்.
அந்தக்
காலத்தில் ஒரு மேஜை வாங்கினால், அது மூன்று தலைமுறைகளுக்குத் தாங்கும். இன்று வாங்கும்
பிளாஸ்டிக் நாற்காலி, உட்காருபவரின் எடையைப் பொறுத்து எப்போது உடையலாம்? என்று தவம்
இருக்கிறது. உடைந்தால் என்ன? தூக்கி எறிவோம். புதியது வாங்குவோம். இதுவே இன்றைய தத்துவமாக
இருக்கிறது.
கைப்பேசிகளும்
அப்படித்தான். ஒரு சின்னக் கீறல் விழுந்தால், அதைச் சரி செய்யத் தோன்றுவதில்லை. பழுது
நீக்குபவரைத் தேடுவதை விட, புதிய மாடல் வாங்குவது சுலபம் என்கிறது சந்தை.
பண்டிகை
வந்தால் துணி எடுக்கிறோமோ இல்லையோ, புதிய மொபைல் போன் எடுத்து பழையதை மின் கழிவாக மாற்றுகிறோம்.
பழுது
நீக்கும் கடைகள் குறைந்து வருவது தற்செயலானது அல்ல. எதையும் சரி செய்யாதீர்கள், புதிதாக
வாங்குங்கள் என்று நம் காதுக்குள் ஓயாமல் ஓதிக் கொண்டிருக்கிறார்கள் சந்தை நுகர்வு
கலாச்சாரவாதிகள்.
மக்களின்
வாங்கும் திறன் அதிகரித்துவிட்டது என்பது எவ்வளவு அழகான பொய்! உண்மையில் நம்மை நுகர்வுப்
பசிகொண்ட இயந்திரங்களாக மாற்றியிருக்கிறார்கள்.
ஒரு
பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் விதையை மண்ணில் வீசுவது நன்றிக்கடன். ஆனால், நாம் அதையும்
குப்பைத் தொட்டியில் வீசுகிறோம். ஏனெனில், தூக்கி எறிதல் என்பது இப்போது நம் தசை நார்களில்
ஊறிப்போன ஒரு கருத்தியல்.
பொருட்களைத்
தூக்கி எறியும் இதே மனநிலை மெல்ல மெல்ல உறவுகளிலும் ஊடுருவுகிறது. ஒரு சின்ன விரிசல்
விழுந்தால், ஒரு சின்னப் புரிதல் குறைந்தால், உறவுகளைச் சரி செய்ய யாருக்கும் பொறுமையில்லை.
அடுத்தது
யார்? என்று தேடும் யூஸ் அண்ட் த்ரோ கலாசாரம் மனிதர்களையும் விட்டு வைக்கவில்லை.
தத்துவம்
என்ன சொல்கிறது?
பூமியில்
நாம் எதையும் புதிதாகப் படைக்கவில்லை. ஒன்று இன்னொன்றாக மாறுகிறது, அவ்வளவுதான். இந்தச்
சுழற்சியை உடைத்து, எல்லாவற்றையும் கழிவாக மாற்றுவது தற்கொலைக்குச் சமம்.
மறுசுழற்சி
என்பது ஏதோ ஒரு சட்டம் அல்ல. அது ஒரு மனநிலை. எதையும் தூக்கி எறியும் முன் யோசியுங்கள்.
ஒருவேளை நீங்கள் எறிவது ஒரு பொருளை மட்டுமல்ல, உங்கள் மனிதத்தையுமாக இருக்கலாம்.
*****

No comments:
Post a Comment