21 May 2026

வாழ்வின் எஞ்சிய கால்வாசியும், மீதமுள்ள முக்கால்வாசியும்!

வாழ்வின் எஞ்சிய கால்வாசியும், மீதமுள்ள முக்கால்வாசியும்!

பிறரைத் திருப்திப்படுத்துவது என்பது ஒரு முழுநேர வேலை. இதற்குச் சம்பளம் கிடையாது, விடுமுறை கிடையாது, மிக முக்கியமாக ரிடையர்மென்ட் கிடையாது. நாம் பிறந்தவுடன் அழுகிறோம். அது நமக்கு வலிப்பதால் அல்ல, குழந்தை பிறந்த உடனே அழ வேண்டுமே, இல்லையென்றால் மருத்துவர் பயந்துவிடுவாரே, என்று அவரைத் திருப்திப்படுத்துவதன் தொடக்கம்.

முக்கால்வாசி என்பது ஒரு கணக்கு அல்ல, அது ஒரு சாபம் . வாழ்க்கையை நூறு சதவீதமாகப் பிரித்தால், அதில் முக்கால்வாசி அதாவது 75 சதவீதம் அடுத்தவர்களுக்காகவே செலவாகிறது.

அதில், முதல் கால்வாசி பெற்றோரைத் திருப்திப்படுத்தப் படிக்கிறோம்.

இரண்டாம் கால்வாசி, முதலாளியைத் திருப்திப்படுத்த வேலை செய்கிறோம்.

மூன்றாம் கால்வாசி, வாழ்க்கைத் துணையை, பிள்ளைகளைத் திருப்திப்படுத்த வாழ்கிறோம்.

மீதமுள்ள அந்தக் கால்வாசி எங்கே? அதுதான் நாம் தூங்கும் நேரம். அங்கேயும் கூட, சிலருக்கு குறட்டை விட்டு அடுத்தவர்களைத் தொந்தரவு செய்துவிடுவோமோ? என்ற பயம் வந்துவிட்டால், அந்தப் பங்கும் பிறருக்கே தாரை வார்க்கப்படுகிறது.

உலகிலேயே மிகவும் கடினமான காரியம் எதுவென்றால், ஒருவரைத் திருப்திப்படுத்துவதுதான். ஏனென்றால், மனிதர்களுக்கு எதில் திருப்தி வரும் என்று அவர்களுக்கே தெரியாது.

நீங்கள் மென்மையாகப் பேசினால், என்ன இவன் பயந்தாங்கொள்ளி? என்பார்கள். அதிகாரமாகப் பேசினால், என்ன இவன் அகங்காரி? என்பார்கள். கடைசியில் நீங்கள் பேசாமல் மௌனமாக இருந்தால், என்ன இவன் திமிர் பிடித்தவன்? என்பார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், அடுத்தவர்களைத் திருப்திப்படுத்த முயற்சிப்பது என்பது, ஓட்டைப் பானையில் கடல் நீரை நிரப்ப முயல்வதற்குச் சமம்.

இங்கே நாம் வாழ்வது நமக்காக அல்ல, பிறர் நம்மைப் பற்றி வைத்திருக்கும் அபிப்ராயத்திற்காக மற்றும் பிம்பத்திற்காக.

நமக்குச் பிடிக்காத சட்டையை உடுத்துகிறோம், ஏனெனில் அது நான்கு பேருக்குப் பிடிக்கும். நமக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தத்துவத்தைப் பேசுகிறோம், ஏனெனில் அது நான்கு பேருக்கு நம்மை அறிவாளியாகக் காட்டும்.

அந்த நான்கு பேர் யார் என்று யாரிடமாவது கேட்டால், இன்றுவரை ஒருவரிடமும் பதில் இல்லை. அந்த மர்மமான நாலு பேரைத் திருப்திப்படுத்துவதிலேயே நம் வாழ்நாள் முடிகிறது.

மற்றவர்களைத் திருப்திப்படுத்த முனைபவர் ஒரு சிறந்த நடிகர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கைதட்ட வேண்டிய ரசிகர்களும் அதே மேடையில் வேறு ஒருவரைத் திருப்திப்படுத்தும் முயற்சியில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். யாருமே யாரையும் பார்ப்பதில்லை. ஆனால், எல்லோரும் நடித்துக் கொண்டிருக்கிறோம். ஷேக்ஸ்பியர் உலகமே நாடகமேடை என்று சொன்னதில் உண்மை இருக்கிறது.

வாழ்க்கையின் முக்கால்வாசி பிறரைத் திருப்திப்படுத்தவே முடிகிறது என்பது சோகமல்ல. மீதமுள்ள கால்வாசியிலாவது நம்மை நாம் திருப்திப்படுத்திக் கொள்கிறோமா என்பதுதான் கேள்வி. ஒருவேளை நீங்கள் உங்களைச் சரியாகத் திருப்திப்படுத்திக் கொண்டால், அதைப் பார்த்து இன்னும் ஒரு முக்கால்வாசிப் பேர் அதிருப்தி அடைவார்கள் என்பது கூடுதல் போனஸ்.

அடுத்தவர்களைத் திருப்திப்படுத்துவதை விட மிக எளிதான காரியம் ஒன்று இருக்கிறது. அது அடுத்தவர்களை அதிருப்திப்படுத்துவது. இதற்கு நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை, நீங்கள் நீங்களாக இருந்தாலே போதும்.

*****

No comments:

Post a Comment