30 May 2026

தியாகி, நிர்வாகி மற்றும் வியாபாரி – இயக்கங்களின் மரண வாக்குமூலம்!

தியாகி, நிர்வாகி மற்றும் வியாபாரி –

இயக்கங்களின்  மரண வாக்குமூலம்!

இயக்கங்கள் என்பவை ரயில்களைப் போன்றவை. தொடக்கத்தில் அவை எஞ்சின் சூடாக, கரும்புகை கக்க, லட்சியப் பாதையில் தடம் புரளாமல் ஓடப் பார்க்கும். இறுதியில் அவை ஒரு பழைய இரும்புக்கடையில் ஸ்கிராப் ஆகி, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏசி அறைகளில் அலங்காரப் பொருளாக வைக்கப்படும். இந்த மாற்றத்தை வரலாற்று ரீதியாக இப்படிப் பார்க்கலாம்.

இயக்கங்களின் தொடக்கக் கட்டத்தில் இருப்பவர்களுக்குக் கொள்கைதான் சோறு. உண்மையில் இவர்களுக்குச் சோறு கிடைக்காததால்தான் கொள்கையே சோறாகிறது. இவர்களின் அடையாளங்கள் என்பவை தாடி, அழுக்குச் சட்டை, கையில் ஒரு பை, இதயத்தில் ஒரு லட்சியம்.

இவர்கள் அதிகாரம் ஒரு சாக்கடை என்பார்கள். சாக்கடையைச் சுத்தம் செய்யப் போகிறேன் என்று சொல்லி இறங்குவார்கள்.

இவர்கள் எந்த அரசுப் பதவிக்கும் வரமாட்டார்கள். ஏனென்றால், இவர்களுக்குப் பதவி கொடுக்கும் அளவுக்கு அந்த அரசுக்குத் தைரியம் இருக்காது, இவர்களுக்குப் பதவி வாங்கும் அளவுக்குப் புத்திசாலித்தனமும் இருக்காது. இவர்கள் வரலாற்றில் தியாகிகள் என்று அழைக்கப்பட்டு, அடுத்த கட்டத் தலைவர்களால் மாலை போடப் பயன்படுத்தப்படுவார்கள்.

முதல் கட்டத் தலைவர்கள் நட்டு வைத்த மரத்தில் பழம் பழுக்கும்போது, இரண்டாம் கட்டத் தலைவர்கள் வருவார்கள். இவர்களுக்குக் கொள்கை முக்கியம்தான், ஆனா பசிக்குமே? என்று யோசிப்பவர்கள்.

இவர்களின் அடையாளங்கள் இஸ்திரி செய்த சட்டை, கையில் வாட்ச், முகத்தில் ஒரு ராஜதந்திரப் புன்னகை.

கொள்கையை நூறு சதவீதம் கடைப்பிடித்தால் மக்களால் வாழ முடியாது, எனவே அதை 40 சதவீதமாகக் குறைத்துவிட்டு, மீதி 60 சதவீதத்தை நடைமுறைச் சாத்தியங்களோடு கலப்போம் என்பார்கள் இவர்கள்.

இவர்கள் ஆட்சியில் அமர்வார்கள். ரத்தமும் சதையுமான மனிதர்களுக்குச் சில நன்மைகளைச் செய்வார்கள். ஆனால், அந்த நன்மைகளுக்கான விலையாகத் தங்கள் கொள்கையின் ஆன்மாவைச் கொஞ்சம் கொஞ்சமாக அடகு வைக்கத் தொடங்குவார்கள்.

இதற்கு அடுத்த இறுதி கட்டம்தான் சுவாரசியமானது. இப்போது இயக்கம் என்பது ஒரு மல்டி நேஷனல் கம்பெனி ஆகியிருக்கும்.. இங்கே தலைவர்கள் பிறப்பதில்லை, அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் அல்லது வாரிசு அடிப்படையில் தரவிறக்கம் செய்யப்படுகிறார்கள்.

இவர்களின் அடையாளங்கள் லேப்டாப், பவர் பாயிண்ட் பிரசன்டேஷன், ஐந்தடுக்கு பாதுகாப்பு, மற்றும் கன்சல்டன்ட் என்று சொல்லப்படும் விலை உயர்ந்த அறிவுரையாளர்கள்.

மக்களுக்கு என்ன தேவை என்பதை விட, எதைச் செய்தால் பெரிய பட்ஜெட்டில் புராஜெக்ட் போடலாம்? என்பதுதான் இவர்களின் கவலை.

இயக்கத்தின் பழைய கொள்கைகள் இப்போது டிஜிட்டல் திரைகளில் ஸ்லோகன்களாக மட்டுமே மின்னும். அடிமட்டத் தொண்டன் வாசலில் நிற்க, பினாமி நிறுவனங்களின் முதலாளிகள் ஏசி அறையில் அமர்ந்து டெண்டர் எடுப்பார்கள்.

கொள்கை என்பது இப்போது ஒரு பிராண்டிங் மட்டுமே. ஒரு காலத்தில் அதிகாரம் ஒரு சாக்கடை என்று சொன்ன இயக்கத்தின் வாரிசுகள், இப்போது அந்தச் சாக்கடையிலேயே நீச்சல் குளம் கட்டி, அதில் மினரல் வாட்டர் நிரப்பி விளையாடுவார்கள்.

இது ஒரு சுழற்சி. மதம், அரசியல், கார்ப்பரேட் என எதை எடுத்தாலும் இதுதான் விதி.

இதில் வேடிக்கை என்னவென்றால், கடைசிக் கட்டத்தில் இருப்பவர்கள் இப்போதும் முதல் கட்டத் தியாகிகளின் படத்தைப் போட்டுத்தான் லாப வேட்டையாடுவார்கள். தியாகிகள் சிலையாக இருப்பதால்தான் அமைதியாக இருக்கிறார்கள். ஒருவேளை உயிர் பெற்று வந்தால், மீண்டும் முதல் கட்டப் போராட்டத்தையே தன் இயக்கத்திற்கு எதிராகத் தொடங்க வேண்டியிருக்கும்.

ஆக ஒர் இயக்கம் எப்போது முழுமையாகச் சீரழிந்துவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால், எப்போது அந்த இயக்கத்தின் கொள்கையைப் புரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு கன்சல்டன்ட் தேவைப்படுகிறாரோ, அப்போதே அது செத்துவிட்டது என்று அர்த்தம்.

*****

No comments:

Post a Comment