20 May 2026

அறியாமையின் போர்வையில் ஒளிந்திருக்கும் அறிவுஜீவித்தனம்!

அறியாமையின் போர்வையில் ஒளிந்திருக்கும் அறிவுஜீவித்தனம்!

உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒன்று, எதுவும் தெரியாதவர்கள். இரண்டு, எல்லாம் தெரிந்தும் ஒன்றுமே தெரியாதது போல் நடிப்பவர்கள். இந்த இரண்டாம் வகை மனிதர்களின் மிக முக்கியமான ஆயுதம்தான்,  தெரியாமதான் கேட்கிறேன் என்பது.

உண்மையில், எதையாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர் ஒருபோதும் தெரியாமதான் கேட்கிறேன் என்று முன்னுரை கொடுக்க மாட்டார். அவர் நேரடியாகக் கேள்வியைக் கேட்டு விட்டு அடிவாங்கிவிட்டுப் போவார்.

ஆனால், இந்த வாக்கியத்தைப் பயன்படுத்துபவர் ஏற்கனவே பாதி விஷயத்தைத் தன் பையில் முடிந்து வைத்திருப்பார். மீதிப் பாதியை உங்கள் வாயாலேயே வரவழைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு அறிவுசார் தூண்டில் இது.

ஏன் இந்தப் பொய்யான தன்னடக்கம்?

எனக்கு எல்லாம் தெரியும், என்று சொன்னால் உலகம் நம்மை அகங்காரி என்கிறது. எனக்கு எதுவுமே தெரியாது, என்று சொன்னால் முட்டாள் என்கிறது. ஆகவே, தெரியாமதான் கேட்கிறேன் என்று சொல்லும்போது, அவர் ஒரே நேரத்தில் விவேகியாகவும் வினயமானவனாகவும் காட்சியளிக்கிறார்.

ஒருவேளை நாம் கேட்கும் கேள்வி அடுத்தவர் இதயத்தையோ அல்லது ஈகோவையோ புண்படுத்தினால், நான்தான் முன்னமே சொன்னேனே, தெரியாமதான் கேட்கிறேன்னு, என்று தப்பித்துக்கொள்ள இது ஒரு காப்பீடு.

தெரியாமல்தான் கேட்கிறேன் என்ற இந்தத் தொடரை நாம் வெவ்வேறு சூழல்களில் மொழிபெயர்த்தால் அதன் உண்மை முகம் விளங்கும்.

நீங்கள் சொல்வது சுத்தப் பொய் என்று எனக்குத் தெரியும், இருந்தாலும் நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று பார்க்கத்தான் கேட்கிறேன் என்பது இதன் ஒரு முகம்.

உங்க தகுதிக்கு இது ஓவர் என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்களாக ஒத்துக்க மாட்டீர்களே? என்பது இதன் மறுமுகம்.

நான் சொல்வதுதான் சரி. அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிற வரைக்கும் நான் விடமாட்டேன் என்பது இதன் வேறொரு முகம்.

தத்துவ ரீதியாகப் பார்த்தால், மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனுக்குத் தன் சக விலங்கைப் பற்றித் தெரிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வம், பிரபஞ்சத்தின் ரகசியங்களைத் தெரிந்துகொள்வதில் இல்லை.

எனவே, யாராவது உங்களிடம் வந்து, தெரியாமல்தான் கேட்கிறேன், என்று ஆரம்பித்தால், அவருக்குத் தெரியாது என்று அர்த்தமல்ல, உங்களுக்குத் தெரிந்ததை அவர் ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கிறார் என்று அர்த்தம்.

உண்மையில் எதையும் தெரிந்துகொள்ள விரும்பாதவர்களே நிம்மதியாக இருக்கிறார்கள். தெரிந்ததை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பவர்களே தெரியாமல்தான் கேட்கிறேன், என்று அலைகிறார்கள்.

ஆகவே, நான் தெரியாமல் எல்லாம் கேட்கவில்லை, தெரிந்தே கேட்கிறேன், இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

*****

No comments:

Post a Comment