டாலரின் அகங்காரமும், ரூபாயின் துறவறமும்!
கச்சா
எண்ணெய், தங்கம், எலெக்ட்ரானிக்ஸ் என நாம் ஆசைப்படும் அத்தனைக்கும் அமெரிக்க டாலரில்தான்
பிச்சை கேட்க வேண்டியிருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 96 ரூபாயைத் தாண்டி,
100 ரூபாயை நோக்கித் தியான நிலையில் சரிந்து கொண்டிருக்கிறது.
பொருள்
இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை, என்றார் வள்ளுவர். டாலர் இல்லார்க்கு எந்த உலகமும் இல்லை,
என்கிறது அமெரிக்கா.
டாலர்
வெளியேற வெளியேற, நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்னும் ஆன்மீக வறுமை நம்மைத்
தொற்றிக் கொள்கிறது. இந்த வறுமையைத் துடைக்க, பிரதமர் மக்களின் தங்கப் பசியைக் கட்டுப்படுத்த
நினைக்கிறார். ஆனால், மனித மனம் விசித்திரமானது.
ஒரு
குழந்தையிடம் அந்தப் பொம்மையைத் தொடாதே, என்று சொன்னால், அக்குழந்தை அழுது புரண்டாவது
அந்தப் பொம்மையைத்தான் முதலில் தொடும். அதுபோலவே, தங்கம் வாங்காதீர்கள், வரி 15% ஆகப்
போகிறது என்றதும், இந்தியப் பிரஜைகள் அனைவரும் நாளைக்கே தங்கம் அழியப் போகிறது என்ற
பதற்றத்தில் நகைக் கடைகளை நோக்கிப் படையெடுக்கிறார்கள். தடையை விடப் பெரிய விளம்பரம்
வேறென்ன இருக்க முடியும்?
இந்தியாவைப்
பொருத்த வரையில் தங்கம் என்பது வெறும் உலோகமல்ல, அது மக்களின் கலாசாரம்.
இங்கு
பிறப்பு முதல் இறப்பு வரை, அழுகை முதல் புன்னகை வரை அனைத்தும் தங்கத்தால் மட்டுமே அளவிடப்படுகிறது.
அதை திடீரென ஆடம்பரப் பொருள் என்று முத்திரை குத்தினால், நடுத்தர வர்க்கத்தின் கதி
என்னாவது?
அரசுகள்
எப்போதுமே பிரச்சினையின் வேரைத் தேடாமல், கிளையை வெட்டப் பார்க்கும்.
இந்தியக்
குடும்பங்களிலும் கோயில்களிலும் ஏறத்தாழ 40,000 டன் தங்கம் சும்மா உறங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தத் தங்கம், மோட்சம் அடைந்த ஆன்மாக்களைப் போல எந்தச் சலனமும் இல்லாமல் லாக்கர்களில்
தூங்குகிறது. இதை மீண்டும் சந்தைச் சுழற்சிக்குக் கொண்டு வருவதுதான் புத்திசாலித்தனம்.
தற்போது
நமது தங்கத்தின் தேவை 60% இறக்குமதியையும், 40% மறுசுழற்சியையும் நம்பி இருக்கிறது.
இந்த விகிதத்தை மாற்றி, வீட்டிலிருக்கும் தங்கத்திற்கு வட்டி தந்து, அதை அரசே சுழற்சிக்கு
விட்டால் டாலர் ஏன் வெளியேறப் போகிறது?
அதை
விடுத்து, வரியை உயர்த்தினால் நடப்பது என்ன? தங்கம் கடத்தல்காரர்களின் கைகளில் தவழத்
தொடங்கும். நேர்மையாக வாங்க நினைப்பவர் திருமணத்தையே தள்ளி வைக்க வேண்டிய சூழல் வரும்.
தங்கம்
வாங்காதீர்கள், என்று ஒரு தடையை விதிப்பதற்குப் பதிலாக, பிரதமர் மக்களிடம் ஒரு தத்துவார்த்தக்
கேள்வியை முன்வைத்திருக்கலாம். மக்களே, தங்கம் என்பது உங்களை அழகூட்டும் நகையல்ல, அது
உங்களைச் சிறைப்பிடிக்கும் ஒரு மஞ்சள் நிற விலங்கு. உங்கள் லாக்கர்களில் தூங்கும் தங்கத்தை
தேசத்தின் ரத்த ஓட்டத்திற்குத் தாருங்கள். பழைய தங்கத்தைக் கொடுத்துப் புதிய தங்கம்
வாங்கும்போது உங்களுக்கு வரியே கிடையாது! என்று அறிவித்திருக்கலாம்.
மனிதர்களை
அச்சுறுத்துவதை விட, அவர்களின் பேராசையையோ அல்லது தேசபக்தியையோ லேசாகத் தட்டி எழுப்புவதுதான்
ஆகச்சிறந்த அரசியல் தத்துவம். அதை விடுத்து, பயத்தை விதைத்தால் மக்கள் தங்கத்தை இன்னும்
ஆழமாகப் பூமிக்குள் புதைத்து வைக்கவே நினைப்பார்கள்.
ஏனெனில்,
பொருளாதாரம் என்பது எண்களால் ஆனது மட்டுமல்ல. அது மனிதர்களின் விசித்திரமான மனோபாவங்களால்
ஆனது!
*****

No comments:
Post a Comment