சீரழித்த சினிமா – 1
முரட்டுக்காளை
மாடுகளுக்குக் கிடைத்த பெருமை, மனிதர்களுக்கு நேர்ந்த சிறுமை!
தமிழ்ச்சமூகத்திற்குச் சினிமா செய்த ஆகப்பெரும்
தொண்டுகளில் முதன்மையானது, அறிவையும் சிந்தனையையும் அப்படியே உறையவைத்து, அனிச்சைச்
செயல்களின் மூலம் மட்டுமே வாழப் பழக்கியதுதான்.
அந்தப் புனிதமானப் பணியை 1980களில் மிக நேர்த்தியாகத்
தொடங்கி வைத்த பெருமை முரட்டுக்காளை என்ற திரைப்படத்திற்கு உண்டு.
இன்றுவரை தமிழர்களின் கூட்டுமனோபாவத்தில் உறைந்து
கிடக்கும் பல விசித்திரமான சீரழிவுகளுக்கு இந்தப் படம் எப்படி பிள்ளையார் சுழி போட்டது
என்பதைப் பார்ப்போம்.
இந்தப் படம் தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்த
முதல் பாடம் என்னவென்றால், ஒரு மனிதன் நல்லவனாக, ஹீரோவாக வாழ வேண்டுமென்றால் அவனுக்குப்
படிப்போ, உலகறிவோ, சமூகப் பொறுப்போ தேவையில்லை, வெறும் முரட்டுத்தனம் மட்டும் இருந்தால்
போதும்.
மாட்டை அடக்கத் தெரிந்தவனுக்கு நாட்டைப் பற்றி
எதுவும் தெரிய வேண்டிய அவசியமில்லை என்ற தத்துவத்தைத் தமிழனின் மூளையில் ஆணி அடித்தது
முரட்டுக்காளை.
விளைவு?
அன்று முதல் இன்று வரை, பொதுவாழ்வில் விவேகம்
உள்ளவர்களை ஒதுக்கிவிட்டு, சட்டைப் பொத்தானைக் கழற்றிவிட்டுச் சண்டைக்குப் போகும் ரோசக்காரர்களை
நம் சமூகம் தலைவனாகக் கொண்டாடி வருகிறது.
இத்திரைப்படத்தில் வரும் நாயகி, ஆரம்பத்தில்
கொஞ்சம் திமிராகவும், தன் சுயமரியாதையைப் பேசுகிறவளாகவும் இருப்பாள். ஒரு முற்போக்குச்
சமூகம் அவளை எப்படிக் கையாள வேண்டும்? அவளோடு உரையாட வேண்டும். ஆனால், நம் முரட்டுக்காளையோ
அவளை அடக்குகிறார்.
பெண்ணியம் பேசும் பெண்களை அடங்காப்பிடாரிகள்
என்றும், அவர்களை ஏதோ ஒரு வகையில் வன்முறையாலோ அல்லது கற்பு என்ற ஒற்றைச் சொல்லாலோ
பணிய வைப்பதே ஆணின் வீர லட்சணம் என்ற ஆபத்தான சிந்தனையை இந்தப் படம் மிக நளினமாக விதைத்தது.
இந்த அடக்குமுறை பார்முலாதான் அடுத்த நாற்பது
வருடத் தமிழ் சினிமாவுக்குத் தீனியாக அமைந்தது. நிஜ வாழ்க்கையில் பல பெண்களின் சுதந்திரத்திற்குப்
பூட்டும் போட்டது.
ஊரில் ஒரு வில்லன் அநியாயம் செய்கிறான் என்றால்,
ஒரு நாகரிகச் சமூகம் என்ன செய்ய வேண்டும்? காவல் நிலையத்திற்குப் போக வேண்டும், சட்டத்தை
நாட வேண்டும். ஆனால் படத்தின் நாயகன் முரட்டுக்காளையோ, சட்டத்தையும் அரசாங்கத்தையும்
டம்மி ஆக்கிவிட்டு, தானே பஞ்சாயத்து செய்வார், தானே தீர்ப்பு வழங்குவார்.
இப்படி ஹீரோவே சட்டம், ஹீரோவே நீதிமன்றம் என்ற
பாசிச மனோபாவம் தமிழர்களின் சிந்தனையை எப்படிச் சீரழித்தது தெரியுமா? நிஜ வாழ்க்கையில்
நமக்கொரு பிரச்சினை என்றால், சட்டப்பூர்வமாக அணுகுவதை விடுத்து, ஏரியா தாதாவிடமோ அல்லது
அடியாட்களிடமோ தஞ்சமடையும் ஒரு வன்முறைச் சமூகமாக நம்மை மாற்றியது.
சட்டம் தன் கடமையைச் செய்வதை விட, ஒரு தனிமனிதன்
அரிவாளைத் தூக்குவதே கெத்து என்ற விபரீதப் புரிதலை இது உருவாக்கியது.
ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது வீரத்தின் அடையாளம்
என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அந்த வீரத்தை மட்டுமே ஒட்டுமொத்த வாழ்க்கையின்
தகுதியாக மாற்றியதில் இருக்கிறது இந்தத் திரைப்படம் உருவாக்கிய ஆபத்து.
மாட்டை அடக்கும் காட்சியைப் பார்த்துவிட்டுத்
திரையரங்கை விட்டு வெளியே வந்த சராசரித் தமிழன், தன் அறிவை வளர்த்துக் கொள்ளப் புத்தகங்களை
நாடவில்லை. மாறாக, தன் உடம்பில் இருக்கும்
தசைகளை முறுக்கிக் கொண்டு அலையத் தொடங்கினான்.
அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டிருந்த
ஒரு காலகட்டத்தில், ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த சிந்தனையையும் காளை, கம்பு, கத்தி என்ற
வட்டத்திற்குள்ளேயே சுருக்கி வைத்தது இந்தத் திரைப்படம்.
முரட்டுக்காளை கமர்ஷியலாக மிகப் பெரிய ஹிட்
அடித்தது என்பதில் ஐயமில்லை. தயாரிப்பாளரின் கல்லா நிறைந்தது, நடிகரின் பிம்பம் உயர்ந்தது.
ஆனால், அதை ரசித்த தமிழ்ச் சமூகமோ, சிந்தனை ரீதியாகப் பின்னோக்கி நகர்ந்தது.
விவேகத்தை விட வன்முறைக்கும், அறிவை விட அதிரடிக்கும்
முக்கியத்துவம் தரும் ஒரு முரட்டுத்தனமான சமூகமாக நாம் மாறுவதற்கு, எண்பதுகளில் போடப்பட்ட
அந்தப் பாட்டுடைத் தலைவனின் ஆவேச சத்தம் இன்றுவரை நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது
என்பதுதான் கசப்பான உண்மை!
*****

No comments:
Post a Comment