தமிழகத்தைச் சீரழித்த சினிமாக்கள்!
தமிழர்களின் வாழ்க்கையை எத்தனையோ விசயங்கள்
சீரழித்திருக்கின்றன. கமர்ஷியலாக ஹிட்டடித்த திரைப்படங்களும் அவற்றுள் அடக்கம். அவை
தமிழர்களின் வாழ்வியலை, சிந்தனை முறையை எப்படிச் சீரழித்தன என்பது சுவாரசியமான வரலாறு.
அசல் வாழ்க்கை தெரியாதபடி கமர்ஷியல் எனும்
மாயஞாலப் பூச்சுகளால் மக்களை மேலும் முட்டாள்களாக்கிய திரைப்படங்களால் ஹீரோக்களுக்கும்,
தயாரிப்பாளர்களுக்கும், அத்திரைப்படங்களோடு தொடர்புடைய இன்னபிற பலருக்கும் மிகப்பெரிய
லாபம் கிடைத்திருக்கலாம். தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்பட்டதோ மிகப்பெரிய நட்டம்.
ஒரு மோசமான அசமன்பாட்டைத் தோற்றுவித்துவிட்ட
கமர்ஷியல் சினிமாக்களின் உள்ளடி சதித்திட்டங்களைக் கொஞ்சமேனும் அறிந்து கொள்ளாமல் அவற்றின்
மாயக் கவர்ச்சியிலிருந்து விடுபடுவது சாதாரண ஒன்றில்லை.
உலகில் பலதரப்பட்ட மக்கள் இருந்தாலும் தமிழ்
மக்கள் போல சினிமாவயப்பட்ட இனம் வேறு எங்கும் இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் சினிமாவைக்
கும்பிடுகிறார்கள், கமர்ஷியல் சினிமாவுக்குப் பாலாபிஷேகம் செய்கிறார்கள், கோயில் கட்டுகிறார்கள்,
அதை அரசியலாக்குகிறார்கள், ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கிறார்கள், சினிமாவை அந்த அளவுக்குச்
சுவாசிக்கிறார்கள், சினிமாவிலேயே வாழ்கிறார்கள். தமிழர்களைக் கமர்ஷியல் சினிமாவில்
வாழும் மாய எதார்த்தவாதிகள் என்று சொல்லலாம்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் டாஸ்மாக் மட்டும்
தமிழர்களைச் சீரழிக்கவில்லை, கமர்ஷியல் சினிமாவும் அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல்
சீரழித்திருக்கிறது. இன்று டாஸ்மாக்கும் தியேட்டரும் இல்லாத தமிழகத்தைக் கற்பனை செய்து
பார்க்க முடியாது.
டாஸ்மாக்குகள், தியேட்டர்கள் இருக்குமிடங்கள்
தெரியும் எத்தனை பேருக்கு நூலகங்கள் இருக்கும் இடம் தெரியும்?
டாஸ்மாக்குக்கும் தியேட்டருக்கும் மக்களை யாரும்
திரட்ட வேண்டியதில்லை. நூலகத்துக்கு மக்களை எவ்வளவு திரட்டினாலும் அவர்கள் தயாராவதில்லை.
ஒரு டாஸ்மாக்கையும் ஒரு சிறுதானிய கடையையும்
அருகருகே அமைத்தால் டாஸ்மாக்கை நாடிச் செல்பவர்களே அதிகம். தரமான சினிமாக்களின் நிலையும்
கிட்டதட்ட இதேதான். ஒரு தரமான படத்தையும், கமர்ஷியல் படத்தையும் அருகருகே இரு தியேட்டர்களில்
திரையிட்டால் மக்கள் கமர்ஷியல் படத்துக்கே டிக்கெட் எடுப்பார்கள். தரமான படம் காற்றாடும்.
மக்களின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது. அப்படி வார்க்கப்பட்டும் வருகிறது.
வாசிப்புக் கூட முன்னர் அப்படித்தான் இருந்தது.
தரமான எழுத்தை வாசிப்பதை விடவும், கமர்ஷியல் எழுத்தை வாசிப்போர் அதிகம். இப்போது வாசிப்பு
பெருமளவு குறைந்துவிட்ட நிலையில் அது பற்றிய கவலைகள் கூட அருகி விட்டன. அதற்காகத் தரமான
வாசிப்பு குறித்த முன்னெடுப்பைக் கைவிட்டு விட இயலாது.
மக்களின் அடிப்படை மனநிலையிலேயே அறிவார்ந்த
செயல்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளன. உணர்ச்சிகளையும் கவர்ச்சிகளையும் தூண்டக்கூடிய
செயல்பாடுகள் முதலிடம் பெறுகின்றன.
இவையெல்லாம் தேவையில்லாத ஆணிகள்தான். தேவையில்லாத
ஆணிகள் என்று தெரிந்தும் அவற்றைத் தங்கள் மீதே அறைந்து கொள்வதில் மக்களுக்குத் தனி
சந்தோசம் இருக்கிறது என்பது விநோதமாக இருக்கிறது. அதற்காக அதை அப்படியே விட்டு விட
முடியாது. அறிவார்ந்த ஒரு முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பைத் தட்டிக் கழித்து
விட முடியாது.
ஆக மொத்தத்தில், தமிழ்
கமர்ஷியல் சினிமாக்களின் மசாலா தனங்கள், தமிழர்களின் சமூகப் புத்தியை வெகுவாகப் பதம்
பார்த்திருக்கின்றன.
போலி
ஆண்மை, பின்தங்கிய பெண் சித்தரிப்பு, அறிவியலற்ற மூடநம்பிக்கைகள், வன்முறைக்குக் கொடுக்கும்
பில்டப், சாதியப் பெருமிதம் என்று ஹிட்டடித்த கமர்ஷியல் சினிமாக்கள் செய்த அநியாய அக்கிரமங்கள்
ஏராளம்.
ஒரு
சுருக்கமான பட்டியல் போட்டால்,
ஹீரோயிசம்
என்கிற பெயரில் ரவுடித்தனத்தை விதைத்தது,
காதல்
என்ற பெயரில் ஈவ் டீசிங்கை நியாயப்படுத்தியது,
சென்டிமென்ட்
என்ற பெயரில் பெண்ணியம் மற்றும் குடும்பப் பாங்கைக் கேலி செய்தது,
சாதியப்
பெருமிதம் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டியது,
ரசனை,
கவர்ச்சி என்ற பெயரில் போலித்தனத்தை வளர்த்தது என்று ஏராளமான குற்றச்சாட்டுகள் கமர்ஷியல்
படங்கள் மீது இருக்கின்றன.
இவற்றைப்
பற்றி ஒவ்வொரு படங்களாகப் பார்க்கும் போது உங்களுக்கே புரியும். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
நாளையிலிருந்து தமிழர்களைச் சீரழித்த ஒவ்வொரு
படமாகக் கூறுபோடுவோம்.
*****

No comments:
Post a Comment