5 Jun 2026

தமிழனை டேமேஜ் செய்த பஞ்ச் சீரழிவு!

சீரழித்த சினிமா – 3

திருமலை

தமிழனை டேமேஜ் செய்த பஞ்ச் சீரழிவு!

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் சினிமாவுக்குப் பிடித்த சாக்லேட் பாய் காய்ச்சலைத் துடைத்தெறிந்துவிட்டு, இருபத்தோறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரு புதிய நச்சு வித்தை அரங்கேறியது.

அதுதான் திருமலை.

அதுவரை துறுதுறுவெனக் காதலித்துக் கொண்டிருந்த ஒரு நடிகரை, கையில் சிகரெட்டையும் வாயில் பஞ்ச் வசனங்களையும் கொடுத்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் ஆகச்சிறந்த ரோல் மாடலாக மாற்றிய பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.

ஒரு மெக்கானிக் ஷாப் பையன் எப்படி ஒட்டுமொத்தச் சமூகத்தின் பொதுப்புத்தியையும் தன் பஞ்ச்களால் பழுதுபார்த்தான் என்பதுதான் இத்திரைப்படத்தின் ஒரு வரித் தத்துவம்.

வாழ்க்கை ஒரு வட்டம்டா, இங்க தோக்குறவன் ஜெயிப்பான், ஜெயிக்கிறவன் தோப்பான் என்பது இன்றுவரை தமிழ்நாட்டின் டாஸ்மாக் சுவர்களிலும், ஆட்டோக்களின் பின்னாடியும் எழுதப்பட்டிருக்கும் ஆகச் சிறந்த தத்துவ ஞானம். இப்படத்தின் ஆகச் சிறந்த பஞ்ச் போஜனம் இதுதான்.

இந்தப் படம் இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த மிக மோசமான பாடம் என்னவென்றால், நீ உருப்படாமல் ஊர் சுற்றினாலும், அடியாளாக அலைந்தாலும் கவலைப்படாதே, வாழ்க்கை ஒரு வட்டம், அதுவே உன்னை ஒரு நாள் மேலே தூக்கிவிடும் என்பதுதான்.

திட்டமிடல், கல்வி, ஒழுக்கம், உழைப்பு எதுவுமே இல்லாமல், எல்லாவற்றையும் வட்டம் என்ற விதியின் மீது போட்டுவிட்டுச் சோம்பேறியாகத் திரியும் ஒரு தலைமுறையை உருவாக்க இந்த ஒரே ஒரு வசனம் அப்போதைக்கும் இப்போதைக்கும் எப்போதைக்கும் தமிழகத்துக்குப் போதுமானதாக இருந்தது, இருக்கிறது, இருந்து வருகிறது.

படத்தில் நாயகன், நாயகியைக் காதலிக்கும் லட்சணம் அலாதியானது. அவள் பின்னால் அலைவது, அவள் போகும் இடமெல்லாம் பின்தொடர்வது, அவளது தனிப்பட்ட விருப்பங்களை மதிக்காமல் அத்துமீறுவது. இதையெல்லாம் விடக் கொடுமை, நாயகிக்கு இவனைப் பிடிக்கவில்லை என்று தெரிந்ததும், அவளது காரை வழிமறித்துத் தன் நண்பர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் ஆட்டம் போடுவது என்று ஸ்டாக்கிங்கே ஆகச் சிறந்த காதல் என்று நிறுவிய படம் இது.

ஒரு பெண் இல்லை என்று சொன்னால், அவளை இன்னும் தீவிரமாகத் துரத்த வேண்டும், ஒரு கட்டத்தில் அவள் தானாகவே மண்டியிடுவாள் என்ற ஆபத்தான வக்கிரத்தை காதல் என்ற பெயரில் தமிழர்களின் நெஞ்சில் பதிய வைத்தது திருமலை. இதன் விளைவை, இன்றுவரை பேருந்து நிலையங்களிலும் கல்லூரி வாசல்களிலும் பெண்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இத்திரைப்படத்தின் ஆகப்பெரும் கலாச்சாரப் பங்களிப்பு சிகரெட் பிடிக்கும் ஸ்டைல். சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயால் பிடிப்பதையும், தீக்குச்சியைத் தொடையில் கீறிப் பற்றவைப்பதையும் வீரம் என்று காட்டியது. விளைவு, அறிவையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய வயதில், தமிழ்நாட்டு இளைஞர்கள் பலரும் கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டு தீக்குச்சியோடு விளையாடத் தொடங்கினர். இப்படம் வெளியாகிக் கால் நூற்றாண்டைக் கடக்க இருக்கும் நிலையிலும் தமிழ் இளைஞர்களின் அந்த தீராத விளையாட்டுத்தனம் இன்றும் நின்றபாடில்லை.

உடம்பை முறுக்கிக் கொண்டு, சட்டைப் பொத்தான்களைக் கழற்றிவிட்டு, முச்சந்திகளில் நின்று கொண்டு வம்பு வளர்ப்பதே கெத்து என்ற போலியான ஆண்மை மனோபாவம் இந்தத் திரைப்படத்திற்குப் பின் மிகத் தீவிரமாகப் பரவியது. தையல் கலைஞர்களுக்கு இதனால் தமிழ்நாட்டில் பொத்தான் தைக்கும் வேலை குறைந்தாலும், சமூகத்தில் காவலர்களுக்கும் பள்ளியில் ஆசிரியர்களுக்கும் இந்த உடல் முறுக்கிகளை நெளிவெடுக்கும் வேலை அதிகமாகி விட்டது.

இத்திரைப்படத்தில் ஊரில் பெரிய டானாக இருக்கும் ஒருவன், இந்த மெக்கானிக் பையனின் தைரியத்தைப் பார்த்து வியந்து, அவனுக்குப் பக்கபலமாக நிற்பார். அதாவது, சமுதாயத்தில் பெரிய ஆளாக வர வேண்டுமென்றால், உங்களுக்குச் சட்டத்தின் துணையோ அல்லது நல்லவர்களின் நட்போ தேவையில்லை. ஒரு பெரிய ரவுடியின் ஆசி இருந்தால் போதும் என்ற நச்சுப் புத்தியை இதன் மூலம் ஏற்படுத்தியது இத்திரைப்படம். ரவுடிகளும் தங்கள் பிறந்த நாள்களை அரிவாளால் கேக் வெட்டிக் கொண்டாடும் புதிய வெப்பன் கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

காவல்துறையை வழக்கம் போல் கோமாளிகளாகக் காட்டிவிட்டு, நிழல் உலக தாதாக்களின் அராஜகங்களுக்குப் புனிதப் போர்வை போர்த்தும் அதே பழைய பார்முலாவை, புது மில்லினியத்தின் இளைஞர்களுக்குத் தகுந்தாற்போல் அப்டேட் செய்து கொடுத்தது இந்தச் சினிமா.

திருமலை திரைப்படம் அந்தப் படத்தில் நடித்த கதாநாயகனின் திரையுலகப் பாதையை மாற்றியிருக்கலாம், விநியோகஸ்தர்களுக்குப் லாபத்தைத் தந்திருக்கலாம். ஆனால், சராசரித் தமிழனை அது எங்கு கொண்டு போய் நிறுத்தியது? என்பதுதான் முக்கியமான கேள்வி.

காதல் என்ற பெயரில் பெண்களைத் துன்புறுத்துவதையும், பஞ்ச் வசனங்கள் பேசுவதையே ஆகச்சிறந்த அறிவாற்றல் என்று நம்புவதையும், வன்முறையைக் கௌரவமாகக் கருதுவதையும் ஒரு ட்ரெண்ட் ஆக மாற்றியதுதான் இந்தத் திருமலை செய்த ஆகப்பெரும் பழுது!

*****

No comments:

Post a Comment