6 Jun 2026

தல தீபாவளி கொண்டாடிய தமிழனும், தாதாயிசத்தின் நச்சுப் பிள்ளையார் சுழியும்!

சீரழித்த சினிமா – 4

தீனா

தல தீபாவளி கொண்டாடிய தமிழனும், 

தாதாயிசத்தின் நச்சுப் பிள்ளையார் சுழியும்!

இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கம். தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு விசித்திரமான வியாதி ஏற்பட்டது. தம்பி, தம்பி என்று அழைக்கப்பட்ட ஒரு நடிகரை, தமிழ்நாட்டு இளைய சமூகம் ஒட்டுமொத்தமாய்த் தல என்று தங்களின் உச்சந்தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடத் தொடங்கியது.

அதுவரை தமிழ் சினிமாவில் இருந்த ரவுடியிச பார்முலாவை இன்னும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து ஸ்டைலிஷ் ஆக மாற்றி, தமிழர்களின் பொதுப்புத்தியை வக்கிரப்புத்தியாக மாற்றி கூசாமல் பதம் பார்த்தது தீனா என்ற திரைப்படம்.

இத்திரைப்படம் தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடும்பத் தத்துவம் என்னவென்றால், அண்ணன் ஒரு பெரிய நிழல் உலக தாதாவாக இருந்தால், தம்பி அவனுக்குப் பக்கபலமாக நின்று ஊரிலிருக்கும் மற்ற ரவுடிகளை வெட்டிச் சாய்க்க வேண்டும் என்பதுதான்.

ஒரு குடும்பத்தின் கௌரவம் என்பது அவர்கள் செய்யும் தாதாயிசத்திலும், அவர்கள் பின்னால் இருக்கும் அடியாட்களின் எண்ணிக்கையிலும்தான் இருக்கிறது என்பது தீனா தந்த தீராத தத்துவம்.

சட்டவிரோதச் செயல்களையும், கட்டப்பஞ்சாயத்துகளையும் அண்ணன் தம்பி பாசம் என்ற பாசிசப் போர்வைக்குள் மூடி, அதற்குப் புனிதத்தன்மை கற்பித்ததுதான் இத்திரைப்படத்தினால் ஏற்பட்ட ஆகப்பெரும் சீரழிவு.

இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வெளியே வந்த சராசரித் தமிழன், தர்மத்தையும் நியாயத்தையும் தேடுவதை விடுத்து, என் அண்ணன் யாரு தெரியுமா? என்று உள்ளூர் ரவுடிகளுக்குப் பின்னால் குடைபிடித்து ஓடத் தொடங்கினான்.

தீனா திரைப்படத்தின் ஆகச்சிறந்த கலாச்சாரப் பங்களிப்பு என்னவென்றால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒரு புதிய ஆட்டுக்குட்டி மனோபாவத்தை உருவாக்கியதுதான்.

படத்தில் நாயகன் செய்யும் காரியங்கள் என்னவென்றால், கையில் காப்பு மாட்டிக் கொண்டு அடியாட்களுடன் சுற்றுவது, வம்பு சண்டைக்குப் போவது, சட்டத்தை மதிக்காமல் தன் சொந்த நீதிமன்றத்தை நடத்துவது.

அறிவையும், சுயசிந்தனையையும் வளர்த்துக்கொண்டு சமூகத்திற்குப் பயன்பட வேண்டிய வயதில், தமிழ்நாட்டு இளைஞர்கள் பலரும் தங்களை ஒரு டான் ஆகக் கற்பனை செய்துகொண்டு, வழுக்கைத் தலையும் தாடியுமாக முச்சந்திகளில் நின்று கொண்டு வம்பு வளர்ப்பதை கெத்து என்று நம்பத் தொடங்கினர்.

ஒரு தனிமனிதனின் மாஸ் பிம்பத்திற்காக, ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த சிந்தனையும் வன்முறையை நோக்கித் திசைதிருப்பப்பட்டது ஒரு வரலாற்றுச் சோகம்.

படத்தில் நாயகி ஒரு கடையில் வேலை செய்யும் சாதாரணப் பெண். நாயகனோ அவளைக் கண்டதும் காதல் வயப்பட்டு, அவளது சம்மதம் இல்லாமலேயே அவளது வாழ்க்கைக்குள் அத்துமீறி நுழைவார். அவளைத் துரத்தித் துரத்திக் காதலிப்பதும், ஒரு ரவுடியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவளைப் பணிய வைப்பதும்தான் இங்குக் காதல் என்று போதிக்கப்பட்டது.

ஒரு பெண் தன் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு முன்பே, அவளது தனிப்பட்ட எல்லைகளை ஓர் ஆண் தன் அடியாட்களின் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிப்பதை நியாயப்படுத்தியது இந்தச் சினிமா. இதன் விளைவாக, நிஜ வாழ்க்கையிலும் பெண்கள் தங்களின் மறுப்பைச் சொல்வதற்கே அஞ்சும் ஒரு பயமுறுத்தும் சூழலை இந்த வீணா போன தீனா பாணி காதல் கலாச்சாரம் உருவாக்கியது.

வழக்கமான தமிழ் சினிமாக்களைப் போலவே, இத்திரைப்படத்திலும் காவல்துறை என்பது ரவுடிகளின் காலடியில் கிடக்கும் ஒரு வெறும் டம்மி அமைப்பாகவே சித்தரிக்கப்பட்டது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய போலீஸ், அண்ணன் தம்பி தாதாக்களின் உத்தரவுக்காகக் காத்திருந்தது உலக மகா திரை அனுபவம்.

சட்டம் என்பது பலவீனமானவர்களுக்கானது, பலமுள்ளவர்கள் சட்டத்திற்கு மேலே இருக்கிறார்கள் என்ற ஆபத்தான சிந்தனையைத் தமிழர்களின் மூளையில் ஆழமாக ஆணியடித்து விதைத்தது தீனா.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் நமக்கொரு அநீதி நடந்தால், காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிப்பதை விட, உள்ளூர் தாதாக்களின் காலடியில் விழுந்து பஞ்சாயத்து செய்வதே சிறந்தது என்ற அடிமை மனோபாவம் தமிழர்களிடம் இன்னும் தீவிரமடைந்தது.

தீனா பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கலாம். அதன் முலம் தல என்ற ஒரு பெரும் மாஸ் ஹீரோவாக உருவாகியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

விவேகத்தை விட வன்முறைக்கும், சட்டத்தை விடச் சொந்த அராஜகத்திற்கும் முக்கியத்துவம் தரும் ஒரு முரட்டுத்தனமான சமூகமாக நாம் மாறுவதற்கு, புது மில்லினியத்தின் தொடக்கத்தில் வைக்கப்பட்ட அந்த தல வெடி, இன்றுவரை தமிழ்ச் சமூகத்தின் முற்போக்குச் சிந்தனைகளைச் சிதறடித்துக் கொண்டே இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை!

*****

No comments:

Post a Comment