சீரழித்த சினிமா – 2
சகலகலா வல்லவன்
தமிழனைப் பக்குவமாய் மடையன் ஆக்கிய மாஸ்டர் ப்ளாஸ்டர்!
ஏண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகம் தன்
பகுத்தறிவையும், கொஞ்ச நஞ்சமிருந்த பொதுப்புத்தியையும் திரையரங்கு வாசலிலேயே கழற்றி
வைத்துவிட்டு, வெறும் அலறல் மற்றும் கதறல்களோடு உள்ளே நுழையக் கற்றுக்கொண்டது. அந்த
அற்புதம் நிகழ்வதற்கு மிக முக்கியமான காரணம் 1982இல் வெளியான சகலகலா வல்லவன்.
அறிவியலும் நாகரிகமும் உலகெங்கும் வளர்ந்து
கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழனின் சிந்தனையை மாடு மேய்க்கும் ஹீரோயிஸம், மேல்தட்டுப்
பெண்ளைப் பழிவாங்கல், டிஸ்கோ டான்ஸ் என்ற ஒரு முக்கோணப் பெட்டிக்குள் அடைத்துச் சீரழித்த
பெருமை இத்திரைப்படத்துக்கு உண்டு.
இத்திரைப்படம் தமிழர்களின் மூளையில் ஏற்றிய
மிக மோசமான நச்சுச் சிந்தனை என்னவென்றால், ஒரு பெண் நன்றாகப் படித்து, நாகரிகமாக உடை
உடுத்தி, தன் உரிமைகளைப் பேசினால் அவள் திமிர் பிடித்தவள் என்று முத்திரை குத்துவதுதான்.
அவளைத் திருத்த அதாவது அடக்க வேண்டுமென்றால், கிராமத்தில் மாடு மேய்க்கும் ஒரு படிக்காத
ஆனால், பரந்த நெஞ்சமும், முறுக்கிய மீசையும் கொண்ட நாயகனால்தான் முடியும் என்ற உலகமகா
தத்துவத்தை விதைத்தது இத்திரைப்படம்.
பெண்ணின் கல்வி என்பது அவளது ஆளுமைக்கானது
அல்ல, அது ஆணின் ஈகோவை உரசிப் பார்க்கும் ஒரு வியாதி என்ற பார்வையை இன்றும் பல குடும்பங்களில்
விதைத்து வைத்திருப்பது இந்தச் சகல கலா வல்லவன் கற்றுக்கொடுத்த பாடம்தான்.
நாயகன், நாயகியைப் பழிவாங்க அவளுடைய வீட்டிற்கே
மாறுவேடத்தில் கம்பீரமான மீசையை வழித்துவிட்டு, சமையல்காரனாக நுழைவார். ஒரு பெண்ணின்
தனிப்பட்ட எல்லைக்குள் ஏமாற்று வேலை செய்து நுழைவதையும், அவளது அந்தரங்கங்களை உளவு
பார்ப்பதையும் காதல், தியாகம், வீரம் என்று உலகத்தரம் உயர்த்திக் காட்டியது இந்தத்
திரைப்படம். உலக நாயகன் நடித்தது கூட அந்த உலகமகா தத்துவம் மற்றும் உலகத்தரத்துக்குக்
காரணமாக இருக்கலாம்.
இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு
வந்த இளைஞர்கள், காதலிப்பதற்கோ அல்லது பெண்ணை அணுகுவதற்கோ நேர்மையான வழிகளைத் தேடவில்லை.
மாறாக, பொய்கள் சொல்வதையும், ஆள்மாறாட்டம் செய்வதையும், பெண்களை ஏமாற்றுவதையும் அதற்காகப்
பித்தலாட்டங்களில் இறங்குவதையும் காதலின் அத்தியாவசிய விதிகளாக மாற்றிக்கொண்டனர்.
இளமை இதோ இதோ, என்று புத்தாண்டுக்கு இன்றும்
ஒலிக்கும் இத்திரைப்பட பாடலின் பின்னணியில் இருப்பது, ஒரு நுகர்வோர் கலாச்சார சீரழிவு.
உழைத்து வாழும் நடுத்தர வர்க்கத் தமிழனை, கிளப்புகளுக்கும், மதுக் கலாச்சாரத்திற்கும்,
மேற்கத்தியப் போலி ஆடம்பரங்களுக்கும் ஏங்க வைத்தது இத்திரைப்படம்.
இத்திரைப்படத்தில் இடம் பெற்ற நேத்து ராத்திரி
யம்மா என்ற திரைப்பாடல் தமிழர்களிடையே தூக்கமின்மை வியாதியை உருவாக்கியது. அந்தப் பாடலில்
ஆடிய சில்க் ஸ்மிதாவுக்கும் உருவாக்கியது. தூக்கமின்மை முடிவில் தற்கொலையைத் தூண்டும்
என்பது மருத்துவ உளவியல். சில்க் ஸ்மிதா நிஜ வாழ்வில் நிஜமாகவே தற்கொலை செய்து கொண்டார்.
தமிழர்களும் அதுவரை அகம் – புறம் என்று வகுத்திருந்த இலக்கண மரபுகளைத் தூக்கில் தொங்க
விட்டனர். அதன்பின் பாலியல் படங்களை ஏன் தனித்துக் கொடுக்க வேண்டும் என்று யோசித்து,
அதையும் கலந்த கமர்ஷியல் காக்டெயிலாக் கொடுக்கத் தொடங்கியது தமிழ்த் திரையுலகம்.
வாழ்க்கையின் லட்சியம் என்பது அறிவை வளர்ப்பதோ
அல்லது சமூகத்திற்குப் பங்களிப்பதோ அல்ல. மாறாக, பளபளக்கும் ஆடைகளை உடுத்தி, டிஸ்கோ
விளக்குகளுக்குக் கீழே ஆடம்பரமாய் கும்மாளம் அடிப்பதுதான் வாழ்க்கை என்ற ஒரு மாயையை
இது உருவாக்கியது இத்திரைப்படம். நிஜ வாழ்க்கையின் வறுமையையும் ஏழ்மையையும் மறக்கடிக்க,
சினிமா காட்டிய இந்த வண்ணமயமான போதை, தமிழனை நிஜப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்க
விடாமல் எதையும் ஹீரோயிஸம் என்ற கோதாவால் மாற்ற முடியும் என்ற மாயையில் கொண்டு போய்
நிறுத்தியது.
கதைப்படி நாயகியின் குடும்பம் செய்த அவமானத்திற்குப்
பழிவாங்க, நாயகன் அவளது சொத்துக்களைப் பறிப்பதும், அவளைத் தன் காலடியில் விழ வைப்பதும்தான்
கிளைமாக்ஸ்.
ஒரு நாகரிகச் சமூகம் ஈகோ பிரச்சினைகளை எப்படித்
தீர்க்க வேண்டும்? சமரசப் பேச்சுகள் அல்லது சட்டபூர்வமான பிரிதல் மூலம். ஆனால், இங்கோ
அடிக்கு அடி, பழிக்குப் பழி என்பதுதான் கௌரவம் என்று போதிக்கப்பட்டது.
குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் ஈகோக்களைக்
கையாள்வதில் தமிழர்களுக்கு இன்றுவரை இருக்கும் முதிர்ச்சியற்ற தன்மைக்கு, இதுபோன்ற
பழிவாங்கல் கதைகளே ஆகச்சிறந்த ஊற்றுக்கண்.
சகலகலா வல்லவன் பாக்ஸ் ஆபீஸில் நூறு நாட்களைக்
கடந்து ஓடியிருக்கலாம். உலக நாயகனை கலையுலகக் கலைக் களஞ்சியமாக நிலைநிறுத்தியிருக்கலாம்.
ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை ஒரு முற்போக்குச் சிந்தனையாளனாக மாற்றவில்லை. மாறாக,
பெண்களைக் குறைத்து மதிப்பிடும், ஆடம்பரத்தை ஆராதிக்கும், போலிக் கௌரவங்களுக்காக வாழும்
ஒரு சகலகலா மடையனாக மாற்றிச் சீரழித்தது என்பதுதான் காலம் கடந்து இப்போதும் நெஞ்சை
நெருடிக் கொண்டிருக்கும் உண்மை!
*****

No comments:
Post a Comment