1 Jun 2026

மீண்டும் மீண்டும் ரீமேக்காகும் பாசமலர்!

வெற்றுச் சொற்களின் பாராட்டும், மனிதனின் எல்லையற்ற தனிமையும்!

பாசமலர் திரையில் மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கையிலும் அடிக்கடி ரீமேக்காகும் ரீல் + ரியல் திரைப்படமாகும்.

குடும்பங்களின் பாசமலர்களைப் பார்த்து அலுத்துப் போன நமக்கு, அரசியலில் பாசமலர்களைப் பார்க்கும் போது அது ஒரு புதுமையான ட்விஸ்ட்டாக இருக்கிறது.

வாஷிங்டனில் இருந்து இந்தியாவைப் புகழ்ந்து வரும் செய்திகள், இரண்டு உலகத் தலைவர்களின் நட்புப் பாராட்டுதலைப் பற்றியது அல்ல. அது மனித இருத்தலின் ஆகப்பெரும் வெறுமையையும், அதிலிருந்து தப்பிக்க மனிதன் தேடும் போலியான அங்கீகாரங்களையும் பற்றியது.

டெல்லியின் பாரத மண்டபத்தில் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், அதிபர் டிரம்ப்பின் குரலை அங்கிருந்தவர்களுக்குக் கேட்பிக்கத் தனது அலைபேசியை மைக்ரோபோனுக்கு முன்னால் நீட்டுகிறார். இந்தத் தொழில்நுட்பக் காட்சி, நவீன மனிதனின் ஆகப்பெரும் அவலத்தைக் காட்டுகிறது. நாம் எல்லையற்ற தொடர்புச் சாதனங்களைக் கைகளில் வைத்திருக்கிறோம். ஆனால், ஒருவரிடம் நேரடியாகப் பேச முடிவதில்லை.

அதிபர் டிரம்ப்பின் குரல் ஒரு கருவியிலிருந்து இன்னொரு கருவிக்குக் கடத்தப்பட்டு, காற்றில் அதிர்வுகளாகப் பரவுகிறது. நான் மோடியின் ரசிகன், என்ற டிரம்ப்பின் சொற்கள், உண்மையின் வெளிப்பாடு அல்ல, மாறாக, பிரபஞ்சத்தின் எல்லையற்ற மௌனத்தைக் கண்டு அஞ்சி, மனிதன் எழுப்பும் வெற்று ஒலிகள் மட்டுமே.

நாம் நமது தனிமையைப் போக்கிக் கொள்ள, பிறிதொரு மனிதனின் குரலைத் தேடிக் கொண்டே இருக்கிறோம்.

மனிதனின் இருத்தலில் நிரந்தரமான உண்மை என்று எதுவுமே இல்லை என்பதை டிரம்ப்பின் முந்தைய பதிவுகள் நிரூபிக்கின்றன. சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவை நரகக் குழி என்று வர்ணித்த அதே மனிதர், இன்று இந்தியாவை நூறு சதவீதம் நம்பகமான தோழன், என்கிறார்.

ஒரு மனிதருக்கு ஒரு தேசம், ஒரு கணம் நரகமாக இருக்கிறது, அடுத்த கணமே அது சொர்க்கமாக மாறுகிறது. இந்த முரண்பாடு காட்டும் உண்மை என்னவென்றால், உலகியல் அரசியலில் விழுமியங்களுக்கு சுயமான அர்த்தங்கள் இல்லை என்பதுதான்.

அதிகாரமும் சுயநலமும் மட்டுமே அர்த்தங்களை உற்பத்தி செய்கின்றன. நேற்று நாம் தூற்றிய ஒன்றை இன்று போற்றுகிறோம், ஏனெனில் மனித மனம் நிலையற்ற தன்மையால் ஆனது.

தன் எண்ணங்களை டிரம்ப் பகிர்வது ட்ரூத் என்ற சமூக வலைதளப் பக்கத்தில். இது எவ்வளவு பெரிய முரண்நகை! ட்ரூத் என்பதற்கு உண்மை என்பது பொருள். ஆனால், அந்தப் பகிர்வு எந்த அளவுக்கு உண்மையானது?

மனிதன் தனக்குச் சாதகமான புனைவுகளை, மாயைகளை உண்மை என்று பெயரிட்டுத் தன் இருத்தலை நியாயப்படுத்திக் கொள்ள முயல்கிறான். மோடியைப் புகழ்ந்த பதிவை டிரம்ப் அங்கு மறுபகிர்வு செய்வதன் மூலம், உலகிற்குத் தான் இன்னும் முக்கியமானவனாக இருக்கிறேன் என்பதை உரக்கச் சொல்ல முயல்கிறார்.

இருத்தலியல் தத்துவத்தின்படி, மனிதன் பிறப்பால் முற்றிலும் தனியானவன். அவனுக்கு என்று பிரபஞ்சம் எந்த நோக்கத்தையும், அர்த்தத்தையும் தருவதில்லை. எனவே, அவன் புகழ்ச்சிகள், தூதரக விழாக்கள், மற்றும் ரசிகன் என்ற பட்டங்கள் மூலம் தனக்கான ஒரு தற்காலிக அர்த்தத்தை உருவாக்கிக் கொள்கிறான்.

என்னையும் அமெரிக்காவையும் இந்தியா 100 சதவீதம் நம்பலாம், என்ற டிரம்ப்பின் வார்த்தைகள் காற்றில் கரைந்து போகக்கூடியவை. ஏனெனில், மனித இருத்தலில் 100 சதவீத நம்பிக்கை என்பது சாத்தியமே இல்லாத ஒரு மாயை.

இந்தச் செய்தி, இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை விவரிப்பதாகத் தோன்றினாலும், ஆழத்தில் இது காட்டும் உண்மை ஒன்றுதான். மனிதர்கள் அனைவரும் ஒரு பெரிய நாடக மேடையில் இருக்கிறார்கள். அங்கு மைக்ரோபோன்களும், சமூக வலைதளப் பக்கங்களும் மனிதனின் உள்ளார்ந்த தனிமையையும், அர்த்தமின்மையையும் மறைக்கப் பயன்படும் வெறும் முட்டுகள் மட்டுமே.

நாளை அந்தப் பதிவுகள் மாறலாம். இன்றே கூட மாறலாம். நேற்று அப்படி இருந்ததே, இன்று இப்படி இருக்கிறதே என்று கேட்பதில் பொருள் எதுவுமில்லை. இந்த உலகில் எல்லாம் அபத்தங்களே. அதிலும் தலைவர்கள் உதிர்க்கும் முத்துகள் அபத்தங்களின் தத்துப்பிள்ளைகள். அவை பாசமலர்கள் பெற்றெடுத்த வேஷ மலர்கள்.

*****

No comments:

Post a Comment