எஸ் பார் சின்
அடி அடியென அடித்து
ஏ,பி,சி,டி,...
உக்கிப் போட வைத்து
ஒன், டூ, திரி,...
மண்டையில் கொட்டி
டேபிள்ஸ்
தாய்மொழியில் பேசியதற்காக
தண்டம்
எக்சாம் பீஸ் கட்டாததற்காய்
கேட்டுக்கு வெளியே வெயிலில்
முட்டியிட வைத்து
ஒரே ஒரு மதிப்பெண் குறைந்ததற்காக
மைதானத்தைச் சுற்றி ஓட
வைத்து
கடைசி வரை
அன்பை மட்டும்
கற்றுக் கொடுக்கவில்லை
என்னைக் கொண்டு போய்
சேர்த்து விட்டப் பள்ளியில்.
*****
கோ வலம்
இதமான குளிருக்கு
நடுரோட்டில் வைத்து
எரிப்பதற்கென
கேரி பேக்குகளும்
பாலீதீன் பைகளும்
கிடைத்த பின்
எரிமூட்டி சுற்றியமர்ந்து
பாலீதீன் பையில் வாங்கி
வந்த
டீயை
ஆவி பறக்க
ப்ளாஸ்டிக் கப்பில் உறிஞ்சி
அவர்கள் தூக்கி எறியும்
பொழுதிற்காக
அதை உண்ண ஆவலாய்க் காத்திருக்கிறது
பசியோடு நகர்வலம் வரும்
வயிறு பெருத்த பசுமாடு.
*****
எஸ் பார் சின்..
ReplyDeleteஇன்றைய தனியார் பள்ளிகளுக்கு சவுக்கடி