எலும்புக்கூடும் எந்திர மனங்களும்!
ஒடிஸாவின்
கேந்ஜார் மாவட்டத்தில் நடந்த அந்தச் சம்பவம் ஒரு த்ரில்லர் நாவலின் க்ளைமாக்ஸ் போல
இருக்கிறது. ஆனால் இது புனைவல்ல, நிஜம்.
ஜித்து
முண்டா என்கிற சாமானியர், வங்கி மேலாளரின் முன்னால் ஒரு துணிப்பையைத் திறக்கிறான்.
உள்ளே இருப்பது அவரது அக்கா கல்ரா முண்டாவின் எலும்புக்கூடு.
இதோ
என் அக்கா. பணத்தைக் கொடு! என்கிறார் ஜித்து முண்டா வங்கி மேலாளரிடம்.
இந்தக்
காட்சியை இப்போது உங்கள் மனதில் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். சுற்றியிருந்தவர்கள்
அலறியிருப்பார்கள். வங்கி மேலாளர் மயக்கமுற்றிருக்கலாம். ஆனால், இதற்குக் காரணமான அந்த
சிவப்பு நாடா மனநிலை மட்டும் இன்னும் சாகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது.
நமது
சிஸ்டம் ஒரு விசித்திரமான பிராணி. அதற்கு உயிர் கிடையாது, ஆனால் அது உயிர்ச் சான்றிதழ்
கேட்கும். அதற்கு உணர்ச்சிகள் கிடையாது, ஆனால் அது வாரிசுச் சான்றிதழ் கேட்டு நம்மை
அழ வைக்கும்.
அந்த
வங்கி மேலாளர் சொன்னாரே ஒரு வார்த்தை, முடிந்தால்
உன் அக்காவையே கூட்டி வா. அவர் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பெற்றுக் கொள் என்று.
இது வெறும் அதிகாரத் தோரணை அல்ல, மனித நேயம் வற்றிப்போன ஒரு மென்பொருளின் எர்ரர் மெசேஜ்.
ஜித்து
முண்டா செய்த காரியம் கரடுமுரடானதுதான். ஆனால், ஒரு மனிதன் புதைக்கப்பட்ட சடலத்தைத்
தோண்டி எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான் என்றால், இந்த டிஜிட்டல் இந்தியாவின்
வேகம் எங்கே நிற்கிறது?
இப்போது
நீங்கள் இன்னும் சில உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இறந்து போன ஜித்து முண்டாவின்
அக்கா வங்கியில் சேர்த்து வைத்தது வெறும் 20,000 ரூபாய்தான். அது அவர் ஆடு மாடு மேய்த்துச்
சேர்த்த ரத்தம்.
அந்தப்
பணத்தை எடுக்க அவர் ஒரு எலும்புக்கூடாகவே வரவேண்டியிருக்கிறது.
வாரிசுதாரர்
இல்லாத வங்கிக் கணக்கு என்பது, சாவியில்லாத பூட்டைப் போன்றது. அதை உடைக்க வட்டாட்சியர்,
கிராம நிர்வாக அலுவலர் எனப் பல படிகளை ஏற வேண்டும்.
ஆனால்,
எது எதற்கோ ஆட்டோமேட்டிக்காக மாறும் இந்தச் சிஸ்டம் ஏன் இன்னும் இதற்கு ஆட்டோமேட்டிக்காக
மாறவில்லை?
ஒருவர்
இறந்துவிட்டால், அந்தத் தகவல் ஏன் தானாகவே வங்கிக்கும், மின்சார வாரியத்திற்கும் செல்வதில்லை?
ஆதார் போன்ற எண்கள் இருக்கும்போது, எதற்காக
ஒரு மனிதர் தன் வாரிசுரிமையை நிரூபிக்க எலும்புக்கூட்டைச் சுமக்க வேண்டும்?
காரணம்,
மனித நேயம் என்பது சட்டப் புத்தகத்தில் இல்லை. அது கோப்புகளுக்கு இடையில் தூங்கிக்
கொண்டிருக்கிறது.
எதார்த்தம்
என்னவென்றால், இறந்தவர்களுக்குத் தேவைப்படுவது அமைதி; இருப்பவர்களுக்குத் தேவைப்படுவது
அவர்கள் விட்டுச் சென்ற வாழ்வாதாரம்.
ஆனால்
அதிகாரிகள், அந்த வாழ்வாதாரத்தையே ஒரு போர்க்களமாக மாற்றுகிறார்கள். ஜித்து முண்டாக்கள்
உருவாகக் காரணம், சான்றிதழ்களை விடச் சட்டங்களின் பிடிவாதம் அதிகம் இருப்பதுதான்.
ஜித்து
முண்டாவின் செயல் ஒரு எச்சரிக்கை. கோப்புகள் நகரவில்லை என்றால், மக்கள் புதைகுழிகளை
நோக்கித் நகரத் தொடங்குவார்கள். அது ஒரு நாகரிக சமூகத்திற்கு அழகல்ல.
விதிமுறைகள்
மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டவை. மனிதர்களை விதிகளுக்காகப் பலி கொடுக்காதீர்கள்.
அடுத்த
முறை வங்கிக்குப் போகும்போது உங்கள் வாரிசுதாரர் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
இல்லையென்றால், உங்கள் வாரிசுகள் ஜித்து முண்டா போல் வங்கியின் ஏசி அறையில் உங்களை
எலும்பு கூடாக உட்கார வைக்க வேண்டி வரலாம்!
*****

No comments:
Post a Comment