வீட்டிலிருந்தே வேலை அல்லது வீட்டிலிருந்தே சாவு
ஒரு
காலத்தில், அதாவது கரோனா என்றொரு பூதம் உலகை ஆட்டியபோது ஒர்க் பிரம் ஹோம் முறைதான்
ஐ.டி. ஜீவன்களின் ஆகச்சிறந்த சொர்க்கமாகப் பார்க்கப்பட்டது.
அதற்கு
முன்புவரை, ஐந்து நாள்கள் மாடாய் உழைத்துவிட்டு, வார இறுதியில் தங்களின் மன அழுத்தத்தைக்
குறைக்க பப் கலாசாரம் என்றொரு தனி உலகத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள்.
திடீரென
லாக்டவுன் வந்ததும், வீட்டிலிருந்தே லேப்டாப்பைத் திறந்து உட்கார்ந்தார்கள். பெட்ரோல்
செலவு மிச்சம், பார்மல் உடைகள் வாங்கும் செலவு மிச்சம் எனக் குஷியானார்கள்.
அம்மாவின்
கைவண்ணத்தில் சூடான சாப்பாடு, குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகளைக் கவனிப்பது என ஆரம்பத்தில்
எல்லாமே ஹனிமூன் காலம் போலத்தான் இனித்தது. நிறுவனங்களுக்கும் பில்டிங் வாடகை, ஏசி,
கரண்ட் பில் மிச்சம்.
உண்மை
என்னவென்றால், அப்போது பப் கலாசாரம் காணாமல் போனதே தவிர, மன அழுத்தம் போகவில்லை. மன
அழுத்தம் மெல்ல மெல்ல வீட்டின் சமையலறைக்கே ஷிப்ட் ஆனது.
கொரோனாவிலிருந்து
நிலைமை சீரானதும் சில நிறுவனங்கள் ஒழுங்காக ஆபீஸுக்கு வாருங்கள் என்றன. சில நிறுவனங்கள்
பாதி நாள் வா, பாதி நாள் வீட்டிலிரு என்றன. ஆனால், இந்த வீட்டிலிருந்து வேலை என்பதில்
ஒளிந்திருக்கும் ஆபத்தை நிறுவனங்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டன.
அலுவலக
நேரம், சொந்த வாழ்க்கை என்ற இரண்டுக்கும் நடுவே இருந்த மெல்லிய கோடு அப்போது அழிக்கப்பட்டுவிட்டது.
இப்போது அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளின் மீது சவாரி செய்யும் வித்தைக் காரர்கள்.
விளைவு?
வீட்டில்
நிசப்தம் என்பதே ஒரு பகற்கனவு ஆகி விட்டது. முக்கியமான கிளையண்ட் மீட்டிங்கில் இருக்கும்போதுதான்
பக்கத்து வீட்டு மிக்ஸி அலறும், மோட்டார் சத்தம் போடும், தெரு நாய் குரைக்கும், குழந்தை
அழுதே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும்.
காலையில்
புத்துணர்ச்சியோடு கிளம்பி, சக மனிதர்களைப் பார்த்து, டீ பிரேக்குகளில் அரட்டையடித்து,
மதிய உணவை நண்பர்களுடன் பகிர்ந்துண்ட அந்தப் பொற்காலம் தலைமறைவாகி விட்டது.
பூனை
தன் குட்டியை எப்படிக் கவ்விக்கொண்டு போகுமோ, அதைப்போல ஐ.டி ஊழியர்கள் மடிக்கணினியைத்
தூக்கிக்கொண்டு சமையல் மேடைக்கும், சாப்பாட்டு மேசைக்கும் அலைகிறார்கள்.
சக ஊழியர்களுடனான
தொடர்பு வெறும் அலுவல் சார்ந்தது மட்டுமாகச் சுருங்கிவிட்டது. மனிதன் வெளியுலகத் தொடர்பு
இல்லாமல் வாழ முடியாது என்கிற அடிப்படை விதியே இங்கே அவுட் ஆப் டேட்டாகி விட்டது!
இதில்
மிகவும் கொடுமையான விஷயம், இந்தியாவிலிருந்து கொண்டு வெளிநாட்டு நேரத்துக்கு வேலை செய்வது.
மனித உடல் பகலில் உழைக்கவும், இரவில் தூங்கவும் டிசைன் செய்யப்பட்டது. ஆனால், நம் ஐ.டி
சிங்கங்களோ நடுநிசி வரை லேப்டாப்புடன் மல்லுக்கட்டுகிறார்கள். பகலில் தூங்கலாம் என்றால்
வீட்டு வேலைகள் கழுத்தை நெரிக்கும்.
குறிப்பாகப்
பெண்களின் நிலை இந்த வீட்டிலிருந்தே வேலை என்பதால் மிகவும் மோசமாகி நரகமாகி விட்டது.
ஐ.டி.
வேலைகளால் பெண்கள் இந்த நூற்றாண்டில்தான் கொஞ்சம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்தார்கள்.
அழகாக ஆடை உடுத்தி, தோளில் கைப்பையை மாட்டிக்கொண்டு கிளம்பும்போதே அவர்களுக்குள் ஒரு
தனித் தன்னம்பிக்கை பிறந்தது. ஆபீஸில் நடக்கும் கொண்டாட்டங்கள் அவர்களின் திறமைகளுக்கு
அங்கீகாரம் தந்தன.
ஆனால்,
இந்த வீட்டிலிருந்து வேலை முறை அவர்களை மீண்டும் கூண்டுக்கிளி ஆக்கிவிட்டது. தூக்கிக்
கட்டிய கொண்டையுடனும், நைட்டியுடனும் லேப்டாப் முன் அமர்ந்து பொழுதைக் கழிக்க எந்தப்
பெண்ணுக்குத்தான் பிடிக்கும்? சிறகடித்துப் பறக்க நினைக்கும் பட்டாம்பூச்சிகளை ஒரு
அறைக்குள் அடைத்து வைத்தால் என்னவாகும்?
அவர்களின்
சிரிப்புக்கும், உதட்டுச் சாயத்துக்கும் பின்னால் ஓராயிரம் அல்லல்களும், மன உளைச்சல்களும்
ஒளிந்துள்ளன.
மேலை
நாட்டுக்கு ஒப்பான, சுத்தமான, ஏசி பொருத்திய ஐ.டி நிறுவனங்கள் பலருக்கு இரண்டாவது வீடு
போலத்தான் இருந்தது. அங்கே தேங்கி நிற்கும் குட்டை போல இல்லாமல், புதிய விஷயங்களை நண்பர்களுடன்
சேர்ந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பாவது கிடைத்தது.
ஆனால்,
தற்போதைய நிலைமை?
ஆபீஸுக்குப்
போனால் அலைச்சல் என்று நினைத்தவர்கள், இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்து பைத்தியம்
பிடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். சுருக்கமாகச் சொன்னால், வீட்டிலிருந்து வேலை
என்பது சுதந்திரம் என்ற பெயரில் கொடுக்கப்பட்ட ஒரு சொகுசான ஆயுள் தண்டனை!
Work
while you work, Play while you play என்பது போல வீட்டு வேலைகளை வீட்டிலும், அலுவலக
வேலைகளை அலுவலகத்திலும் செய்வதே நல்லது.
*****

No comments:
Post a Comment