14 Jul 2026

சுய மோகத்தின் திரை வடிவும் நுகர்வின் சூன்யமும்

சீரழித்த சினிமா – 39

குஷி

சுய மோகத்தின் திரை வடிவும் நுகர்வின் சூன்யமும்

இரண்டாயிரமாவது ஆண்டின் மே திங்களில், கொதிக்கும் கோடையில், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச யதார்த்தக் காதலையும், மென்மையான பெண்ணின் உணர்வுப்பூர்வமான சுதந்திரத்தையும் கத்திரி வெயிலில் கருவாடு போட்டு மண்டை காய வைத்த திரைப்படம்தான் குஷி.

நவீனத் தமிழ்ச் சமூகம் தன் ஆழங்களை இழந்து, மேற்பரப்புப் பளபளப்புகளில் தன்னைத் தொலைத்துக் கொள்ளத் தொடங்கிய புள்ளியைச் சரியாக அடையாளம் காண வேண்டுமானால், குஷி திரைப்படத்தின் முன்னால் போய்தான் நிற்க வேண்டும்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "காதலர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, குடும்பத்தினரைச் சம்மதிக்க வைக்கப் போராட வேண்டும்" என்ற உன்னதமான விதியை அடியோடு மாற்றி, "கொல்கத்தாவில் வளர்ந்து சென்னையில் படிக்கும் ஒரு அரைகுறை மேதாவிப் பையனும், திருநெல்வேலி, குற்றாலத்தில் வளர்ந்து அதே காலேஜில் படிக்கும் ஒரு அகந்தை பிடித்த பெண்ணும், ஒரு தொப்புள் காட்சிக்காகத் தங்கள் ஒட்டுமொத்த சுயமரியாதையையும் அடகு வைத்துவிட்டு, படம் முழுக்க என் ஈகோ பெரிதா, உன் ஈகோ பெரிதா என்று தெருத்தெருவாகச் சண்டை போடலாம்" என்ற ஒரு புதுவிதமான மனநலப் பிறழ்வு வக்கிர அத்துமீறலைத தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, குஷி திரைப்படத்திற்கு உண்டு.

எப்போதும் தேவையில்லாமல் துள்ளிக் குதிக்கும், மற்றும் ஓவர் ஆக்டிங் செய்யும் நாயகனின் போலி வாலிப பிம்பமும், முகத்தில் அத்தனை உணர்ச்சிகளையும் ஒரே நொடியில் பிழிந்து காட்டும் நாயகியின் அலப்பறைப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு ஹார்மோன் ஆய்வக மோசடிக்குக் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு காதலர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த உளவியல் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு பெண்ணை உண்மையாகக் காதலித்தாலும், அவளது அந்தரங்கத்தைப் பார்த்ததை அகப்பொருளில் கையாண்டு, ஊடலைத் தணிக்காமல்அதையே ஒரு ஈகோ பிரச்சனையாக உருவாக்கிக் கொண்டு அதில் லாஜிக் மேஜிக் பேசி தங்களைத் தாங்களே வெறுத்துக் கொண்டு அசிங்கப்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான்.

இதனால், ஓர் இயல்பான மனிதப் பார்வையின் தற்செயல் தவறை, இருபது ரீல்கள் ஓடும் அளவிற்குப் பெரிய கௌரவப் பிரச்சினையாக மாற்றி, "நீ என் தொப்புளப் பாத்த, நீ ஒரு பொறுக்கி" என்றும், "ஆமா பாத்தேன், அதுல என்ன தப்பு?" என்றும் சண்டை போடுவதைத்தான் உன்னதமான காதல் என்றும் தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

பொதுவாகத் தமிழ் நடுத்தர வர்க்கத்தின் ஒழுக்கவியல் என்பது பெரும்பாலும் இதயத்தையும், கண்களையும், அதிகபட்சம் கைகளையும் சுற்றியே இயங்கி வந்தது. அடிப்படையில் காதல் என்பது கம்பன் காலத்திலிருந்து பாரதி காலம் வரைக்கும் கண்களில் ஆரம்பித்து இதயத்திற்குப் போய்க்கொண்டிருந்தது. ஆனால், குஷி திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் இளைய சமூகத்தின் கவனக் குவியத்தையும், வாழ்வியல் லட்சியத்தையும் சரியாக பதினெட்டு அங்குலங்கள் கீழே இறக்கியது.

மானுட பரிணாம வளர்ச்சியில், தாய்க்கும் சேய்க்குமான உறவை அறுக்கும் வெறும் தழும்பு என்று கருதப்பட்ட ஓர் உறுப்பு, தமிழ் சினிமாவின் கமர்ஷியல் வரலாற்றை மாற்றியமைக்கும் அதிர்வு மையமாக மாறும் என்று டார்வின் கூட கணித்திருக்க மாட்டார்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் சிறுசிறு தவறுகளையும், தவறான புரிதல்களையும் பேசித் தீர்ப்பதை விடுத்து, தங்களது போலி ஈகோவிற்காகப் பல வருடக் காதலை ஒரே நிமிடத்தில் பிரேக் அப் செய்து கொள்ளும் முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

குஷி திரைப்படத்துக்கு முன்பு வரை, தமிழ் சினிமாவில் காதலர்கள் பிரிவதற்கு சாதி, மதம், ஏழை பணக்கார வர்க்கப் போராட்டம், அல்லது வில்லனின் துப்பாக்கிச் சூடு போன்ற வலுவான சமூகக் காரணங்கள் தேவைப்பட்டன. ஆனால், அவற்றையெல்லாம் மாற்றி குஷி நுகர்வோர் கலாச்சாரத்தின் உச்சகட்ட உளவியல் சீரழிவை அறிமுகப்படுத்தியது. அதுதான் காரணமே இல்லாத பிடிவாதம்.

இருபாலினத்தவரிடமும் இந்தத் திரைப்படம் அசுரத்தனமான ஈகோவை ஒரு கௌரவச் சின்னமாக மாற்றியது. நியாயமான காரணங்களே இன்றி சண்டை போடுவதும், அதை காதலின் ஆழம் என்று அதில் உளவியல் சுயஇன்பம் காண்பதும் இந்தத் திரைப்படத்திற்குப் பின்பே சமூக ஒழுங்காக மாறியது.

காதலன் படத்தில் பிரேக் டான்ஸைக் கொண்டாடினார்கள் என்றால், குஷி படத்தில் காலேஜுக்குப் படிக்கப் போகும் அத்தனை பேரையுமே லவ் மேட்ச் மேக்கர் வேலையைப் பார்க்கும் தரகர்களாக மாற்றி கமர்ஷியலாக விற்றார்கள். ஹீரோவும் ஹீரோயினும் தங்களுக்குள் காதலிப்பதை விடுத்து, தங்களது நண்பர்களான ஜோடியைச் சேர்த்து வைக்கப் படம் முழுக்கக் கொரியர் பாய் போல அலைந்து கொண்டிருப்பார்கள், தங்களுக்கிடையே சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

இந்த உறைபனியூட்டும் வெட்டி வேலையை, மிக வண்ணமயமான உடைகளாலும், ஆபாசக் குத்துப் பாடல்களாலும் மூடி மறைத்து, இவங்க எவ்ளோ பெரிய காதலின் தியாகிகள் என்று பார்ப்பவனை ஏமாற்றினார் இயக்குனர்.

முறையான கல்வியையும், எதிர்கால லட்சியங்களையும் விடுத்து, அடுத்தவன் காதலுக்குத் தூது போவதையும், கட்டிப்புடி கட்டிப்புடிடா என குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதையும் மாஸ் என்று காட்டி, பகுத்தறிவு மற்றும் காதலின் மென்மை மீதான தேவையையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

அந்நியன் படத்தில் மனநோயைக் கொண்டாடினார்கள் என்றால், குஷி படத்தில் ஆணாதிக்க ஈகோவையும் இளைஞர்களின் அத்தனை முட்டாள்தனங்களையும் நியாயப்படுத்தினார்கள். படத்திலிருக்கும் ஹீரோவும் ஹீரோயினும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்பது தியேட்டரில் இருக்கும் டிக்கெட் கிழிப்பவருக்குக் கூடத் தெரியும். ஆனால், அதை அந்த இரு முட்டாள்களும் கடைசி ஐந்து நிமிடம் வரை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

ஒரு காதலைச் சொல்வதற்கு இத்தனை போலி பந்தாக்களும், பிடிவாதங்களும் தேவை என்று காட்டி, பின்னணியில் ஓ வெண்ணிலா என்று உருகி உருகிப் பாடினால் நீங்கள் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசிக்க வேண்டும் என்பதுதான் இத்திரைப்படம் தமிழக இளைஞர்களுக்குச் சொல்லித் தந்த திரைப்பாடம்.

நேர்மையாகக் காதலை வெளிப்படுத்துவதை விடுத்து, அதை ஒரு செஸ் விளையாட்டு போல விளையாடி மனித உணர்வுகளைச் சிதைப்பதைக் க்யூட் காதல் என்று சிரித்துக் கடந்து போகும் ஒரு மரத்துப்போன பொதுப்புத்தியைத் தமிழனிடம் வளர்த்தெடுத்தது இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த சினிமாட்டிக் தந்திரம்.

7ஜி ரெயின்போ காலனி மற்றும் மின்னலே போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் வக்கிரமானது. நாயகி  கதாபாத்திரம், திருநெல்வேலியில் பிறந்த, பெரிய ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த, சுயமரியாதை உள்ள பெண்ணாகக் காட்டப்படுவார். ஆனால், அவருக்கும் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் குறைந்தபட்சப் பகுத்தறிவு கூட இருக்காது. ஹீரோவின் ஒரு பார்வைக்காகத் தன் ஒட்டுமொத்த முகத்தையும் கோணலாக்கி, கைகளைக் காற்றில் வீசி, கத்தி சண்ட பிரசண்டம் செய்வார்.

பெண் என்பவள் சின்ன விஷயத்திற்கெல்லாம் ஈகோ பார்த்துத் தூக்கில் தொங்குபவள்; அவளிடம் காதலைச் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டாள், ஆனால் அவளை விட்டு விலகினால், ரயில் நிலையத்திற்குப் பின்னால் ஓடிவந்து கதறுவாள் என்ற ஒரு விசித்திரமான, முதிர்ச்சியற்ற பெண்மைப் பிம்பத்தை இத்திரைப்படம் யூத் ட்ரெண்ட் செட்டர் என்ற லேபிளோடு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

சுருக்கமாகச் சொன்னால், குஷி என்பது ஒரு காதல் கதையல்ல; அது தமிழ் இளைஞர்களின் மூளையை மழுங்கடித்து, அவர்களைத் தங்களின் சுயமரியாதையையும், சமூகப் பொறுப்பையும் மறந்து, ஒரு பெண்ணின் இடுப்பு மடிப்புக்குள்ளும், ஆண் மற்றும் பெண்ணின் பிடிவாதத்திற்குள்ளும் சிறை வைத்த ஒரு மென்மையான உளவியல் பயங்கரவாதம்.

இன்று நாம் பார்க்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கலாச்சாரத்திற்கும், டாஸ்க்குகளை விட ஆட்டிடியூட் முக்கியம் என நினைக்கும் தலைமுறைக்கும் சீரழிவின் விதையாகப் போடப்பட்ட திரைப்படம் குஷிதான்.

குஷி பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, நாயகனின் லவ்வர் பாய் பிம்பத்திற்குத் தங்கக் கிரீடம் சூட்டி, அதன் இயக்குநரை ஹிட் இயக்குனர் நாற்காலியில் அமர வைத்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

அதுவரைக்கும் தமிழ் சினிமாவில் காதல் என்பது ஏதோ ஒரு தெய்வீகமான, தியாகம் நிறைந்த விஷயமாகப் பிம்பப்படுத்தப்பட்டிருந்தது. குஷி அதை அப்படியே உடைத்து, காதலை மிக சாதாரணமான, ஹார்மோன் சார்ந்த, உடல் சார்ந்த ஒரு கவர்ச்சியாக மாற்றியது. இளைஞர்கள் மனதில் காதல் என்றால் இவ்வளவுதானா? என்கிற ஓர் அரைகுறை மதிப்பீடு இத்திரைப்படத்திலிருந்துதான் ஆரம்பித்தது.

விஞ்ஞான பூர்வமாகப் பார்த்தால், மனித மூளைக்கு ஒரு குணம் உண்டு. எதை நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கிறோமோ, அதுதான் உலகத்திலேயே பெரிய விஷயம் என்று நினைத்துக்கொள்ளும். குஷியில் ஒரு சின்ன தவறான புரிதல் பெரிய இமாலயப் பிரச்னையாகக் காட்டப்படும். ஒர் இடுப்புப் பார்வைக்காக, இரண்டு படித்த, முதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள் உலகமகா யுத்தம் நடத்துகிறார்கள் என்பதைக் காட்டியே தமிழகத்தில் கோடி கணக்கில் கல்லா கட்ட முடியும் என்றால், நம் சமூகத்தின் முதிர்ச்சி இத்திரைப்படத்தால் எந்த அளவுக்கு இடறி விழுந்தது என்பதை நீங்களே கணித்துக் கொள்ள வேண்டியதுதான்.

பொறுப்புணர்ச்சி, சமூகப் பார்வை, சக மனிதன் மீதான பரிவு என இவை எல்லாவற்றையும் உதறிவிட்டு, தன் ஆடைகள், தன் சிகை அலங்காரம், தன் ஆட்டிடியூட் மட்டுமே முக்கியம் என்ற சுயமோகத்தில் ஒட்டுமொத்தத் தலைமுறையும் ஆழ்த்தப்பட இத்திரைப்படம் பிரதான காரணமாகியது. அதுமட்டுமல்ல, தீவிரமான சிந்தனைகள் எள்ளலுக்குள்ளாக்கப்பட்டன; அசட்டுத்தனங்கள் அற்புதங்கள் என்று கொண்டாடப்பட்டன.

குஷி ஏற்படுத்திய உளவியல் பாதிப்பு என்பது, அது தமிழ் இளைஞர்களின் அக உலகைக் காலி செய்துவிட்டு, அங்கே ஒரு பெரும் சூன்யத்தை நிரப்பியதுதான். ஒரு திரைப்பார்வையாளனுக்கு அந்தத் திரைப்படம் திரையில் காட்டிய வண்ணமயமான உலகம், உண்மையில் ஒரு சமூகத்தின் சிந்தனை வறட்சியின், அதன் உளவியல் வீழ்ச்சியின் தொடக்கப் புள்ளியாகவே இன்று வரை காட்சியளிக்கிறது.

குஷி காட்டும் காதல் என்பது காதலே அல்ல; அது காதலைப் போலப் பாசாங்கு செய்யும் இரு பிம்பங்களின் போலி விளையாட்டு.

காதல் என்றால் ஒருவரையொருவர் டார்ச்சர் செய்து கொள்வதுதான் வாலிபம் என்றும், மக்கரீனா என்றும் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடினால் அத்தனை அநாகரிகங்களையும் ரசிக்கலாம் என்றும், தேவையற்ற ஈகோ பாராட்டிப் பிரியப் பார்ப்பதே காதலின் ஆகச்சிறந்த உத்தி என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற ஈகோ சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

No comments:

Post a Comment