இமயமலைப் பூஞ்சையும் இலக்கியப் புனைவுகளும்!
ஜெயமோகன்
எழுதி இருக்கும் மூளை எனும் அரிய சாதனம்
பற்றிய அத்தியாயத்தைப் படித்தபோது, எனக்கு முதலில் எழுந்த உணர்வு ஒரு மெல்லிய சிரிப்புதான்.
பிறகு, வழக்கம்போல அவரிடம் பொங்கி வழியும் அந்த மகா எக்ஸ்பிரஷனிச உரைநடையைக் கண்டு
உருவான அலுப்பு.
ஜெயமோகன்
எப்போதும் தன் அனுபவங்களை உலகை உலுக்கும் பேரனுபவங்களாக மாற்றிவிடும் வித்தை தெரிந்தவர்.
இமையமலையில் அவர் சாப்பிட்ட ஏதோ ஒரு காளான், கூஃப் என்று அவரே பெயரிட்டுக்கொள்ளும்
அந்தப் போதைப்பொருள் அவருக்குக் கொடுத்தது வெறும் ஒரு மோசமான மற்றும் அருவருப்பான அனுபவம்.
அவ்வளவுதான். மலத்திலும் சிறுநீரிலும் புரண்டு, கொசுக்கடி வாங்கி, மூளையின் நியூரான்கள்
குழம்பிப்போய் அவர் அடைந்த அந்த அவஸ்தை, நரம்பியல் ரீதியாக எந்தப் போதைக்காளான் சாப்பிடும்
ஒருவனுக்கும் நடப்பதுதான்.
ஆனால்,
ஜெயமோகன் அதை சாதாரணமாகக் கடந்துபோக மாட்டேன் என்கிறார். அதை உபநிடதத்துடனும், அகம்
ஏவ இதம் சர்வோஸ்மி என்ற வேதாந்த மெய்யனுபவத்துடனும் முடிச்சுப்போட்டு ஒரு பெரிய தத்துவார்த்த
வடிவத்தைக் கொடுக்க முயல்கிறார்.
காளான்
சாப்பிட்டு வாந்தி எடுத்ததையும், கட்டிலுக்குக் கீழே கிடந்து அலறியதையும் வேதாந்தத்தின்
மெய்யனுபவ விரிவோடு ஒப்பிடுவது, ஒருவன் கால் தடுமாறிச் சாக்கடையில் விழுந்ததை நான்
பூமியின் ஆழத்தை நோக்கிப் பயணித்தேன் என்று கவிதை எழுதுவதைப் போன்றது.
இங்கு
சில விஷயங்களை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.
தன்
மூளையைத் தினமும் தூசுதட்டித் துலக்கி வைக்கும் அரிய சாதனம் என்கிறார். உலகம் முழுதும்
உள்ள மனிதர்கள் ரீல்ஸ் பார்த்தும், பாக்குப்போட்டும் மூளையை மழுங்கடிக்கிறார்களாம்;
இவர் மட்டும்தான் லட்சத்தில் ஒருவராக மூளையைக் கூர்தீட்டிக்கொண்டே இருக்கிறாராம்.
இந்தச்
சுயமோகமும், தன்னை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மேதையாகக் காட்டிக்கொள்ளும் அவசரமும் ஜெயமோகனின்
பிரத்யேக அடையாளம். மூளையைப் பேணுவது நல்லதுதான், ஆனால் அதை மற்றவர்களை இழிவாகப் பார்ப்பதற்கான
தராசாக மாற்றுவது அறிவாளித்தனத்தின் அடையாளம் அல்ல.
ஒரு
பூஞ்சையை வெண்ணெயில் வேகவைத்துச் சாப்பிட்டுவிட்டு, சுவரும் நானே, கொசுவும் நானே என்று
உளறுவது உடைந்து சிதறிய விரிவு என்றால், தீவிரமான காய்ச்சலில் பிதற்றுவதும் வேதாந்த
அனுபவம்தானா? ஆலிவர் சாக்ஸையும் உபநிடதத்தையும் ஒரே மூச்சில் இழுத்துப்பிடித்துத் தன்
போதை மயக்கத்திற்கு ஒரு அறிவுஜீவி முத்திரை குத்தப் பார்க்கிறார் ஜெமோ.
தத்துவம்
சொல்லும் மலர்ச்சி என்பது உணர்வுகளின் குழப்பத்தால் வருவதல்ல; தெளிவின் உச்சத்தால்
வருவது. ஜெயமோகனோ தன் பயத்தையும், மாயத்தோற்றங்களையும் தத்துவத்தின் உச்சக் கணங்களாகப்
புனைவு செய்கிறார்.
ஜெயமோகனின்
இந்தக் கட்டுரை, ஒரு நரம்பியல் கோளாறு அனுபவத்திற்குத் தரப்பட்ட மிகையான தத்துவச் சாயம்.
போதையில்
தடுமாறியதை உடைந்து சிதறிய பிரம்ம அனுபவம் என்று எழுதுவது இலக்கிய ரசனைக்குரிய புனைவாக
இருக்கலாம்; ஆனால், அதை மெய்யியல் தேடலாக எடுத்துக்கொண்டால் சிரிப்புதான் எஞ்சும்.
கூஃப்
காளான் தந்த போதையை விட, தன் சொந்த உரைநடை மற்றும் ஆளுமை மீது ஜெயமோகனுக்கு இருக்கும்
போதை மிகவும் தீவிரமானது!
*****

No comments:
Post a Comment