எம்.எல்.ஏக்கள் விற்பனைக்கு அல்ல!
1967 இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அதே கால கட்டத்தில் ஹரியானாவில் வேறு ஒரு மாற்றம் ஏற்பட்டது.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக வெற்றிபெற்ற கயா லால் என்ற
எம்.எல்.ஏ குரங்கை விட அதிவேகமாக வெறும் 15 நாட்களுக்குள் மூன்று முறை வெவ்வேறு
கட்சிகளுக்குத் தாவினார்.
காங்கிரஸ் தலைவரான ராவ் பிரேந்திர சிங், கயா லாலை மீண்டும் காங்கிரஸுக்கு அழைத்து
வந்து செய்தியாளர்களிடம், "கயா ராம் இப்போது ஆயா ராம் ஆகிவிட்டார்" என்று
நகைச்சுவையாக அறிமுகப்படுத்தினார்.
இதிலிருந்தே இந்திய அரசியலில் கட்சி தாவுபவர்களைக் குறிக்கும் "ஆயா ராம்,
கயா ராம்" என்ற புகழ்பெற்ற அரசியல் பழமொழி உருவானது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் ஹரியானாவில் குடியரசுத்
தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.
இது வரலாறு.
இப்போது கொஞ்சம் அறிவியல்.
இயற்பியல் விதிகளின்படி ஒரு பொருள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது.
இத்துடன் கொஞ்சம் அரசியலைச் கலந்தால், 1967 இல் இந்திய அரசியலில் ஒரு எம்.எல்.ஏ
ஒரே வாரத்தில் மூன்று வெவ்வேறு கொள்கைகளில் வாழ முடியும் என்று நிரூபிக்கப்பட்டது.
மக்களவையில் கூடிய தூய்மையான மற்றும் நேர்மையான அரசியல் தலைவர்கள் இதைப் பார்த்து
கவலைப்பட்டார்கள்.
"இதற்கு ஒரு கடிவாளம் போட வேண்டும்," என்றார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.
"கடிவாளம் குதிரைக்குத்தானே?" என்றார் மற்றொரு உறுப்பினர். "பிரதிநிதிகளும்
ஓடுகிறார்களே!" என்றார் முதலானவர்.
உடனே ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. "ஒருவர் கட்சி தாவினால், அவர்
ஓராண்டுக்கு அமைச்சராகக் கூடாது, சபாநாயகராகக் கூடாது, சம்பளம் வாங்கும் எந்தப் பதவியிலும்
இருக்கக் கூடாது" என்று அது பரிந்துரைத்தது. அதாவது, 'நீ சோறு சாப்பிடலாம், ஆனால்
தட்டில் கை வைக்கக் கூடாது' என்ற வகையான தீர்வு அது.
ஆனால் அது சட்டமாவதற்கு 1985 வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
1985 இல், 52 ஆவது சட்டத் திருத்தம் வந்தது. அரசமைப்பின் பத்தாவது அட்டவணையில்
"கட்சித் தாவல் தடைச் சட்டம்" என்று பளபளப்பான ஒரு பூட்டு தொங்கவிடப்பட்டது.
இந்திய அரசியவாதிகள் புத்திசாலிகள்.
பூட்டைப் பார்த்ததும் அவர்கள் சாவி தேடவில்லை; பூட்டின் அளவை விடப் பெரிய கதவையே
கழற்றினார்கள்.
"தனித்தனியாகத் தாவினால் தப்பு. ஆனால், நாம் அனைவரும் கூட்டமாகத் தாவினால்
அது ஜனநாயகம்!" என்று ஒரு மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏக்கள் தத்துவத்தைக் கண்டுபிடித்தார்கள்.
பிரிவு 3 அவர்களுக்குப் பாதுகாப்புக் கவசமானது. ஆடுகள் தனியாகப் போனால் ஓநாய் பிடிக்கும்;
மந்தையாகப் போனால் அதுதான் புதிய பூங்கா!
விளைவு?
மறுபடியும் பூட்டு தயாரிக்க வேண்டியதாகி விட்டது.
2003 இல், 91ஆம் சட்டத் திருத்தம் வந்து, "சரி, இனி மூன்றில் ஒரு பங்கு
செல்லாது; மூன்றில் இரண்டு பங்கு வேண்டும்!" என்றது.
அதன் விளைவு என்னவென்றால், சில்லறை வியாபாரம் மொத்த வியாபாரமாக மாறியது. முன்பு
எம்.எல்.ஏக்களை ரீடெய்ல் ஆக வாங்கினார்கள். இப்போது ஹோல்சேல் ஆகக் கொள்முதல் செய்தார்கள்.
ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்து, அதில் மூன்றில் இரண்டு பங்கு ஆட்களை ஏற்றி, ஒரு சொகுசு
விடுதிக்கு அனுப்பினால் ஆட்சி க்ளோஸ் என்ற நிலை வந்து விட்டது.
இதெல்லாம் தொகுதியில் வாக்களித்த அப்புசாமிக்கு கொஞ்சம் கூட புரியவில்லை.
பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டார் அப்புசாமி. "அண்ணே, நாம போட்ட ஓட்டுக்குத்தான்
இந்தத் தொகுதியில மதிப்பில்லை. சரி, இந்த மனசாட்சின்னு ஒண்ணு சொல்வாங்களே, அது இவங்களுக்கு
இல்லையா?"
பக்கத்தில் இருந்தவர் சிரித்துக்கொண்டே சொன்னார், "தம்பி, மனசாட்சிங்கிறது
தனிநபர் சம்பந்தப்பட்டது. சட்டத்தின் படி, மூணுல ரெண்டு பங்கு பேர் சேர்ந்துட்டா மனசாட்சியும்
தானாவே தகுதிநீக்கம் ஆகிடும்!"
"இதையெல்லாம் தடுக்க புது மசோதா கொண்டு வந்தா என்ன?" என்றார் அப்புசாமி.
"தம்பி, கடிவாளம் போடுவது குதிரையைக் கட்டுப்படுத்தத்தானே தவிர, கடிவாளத்தை
விற்கும் வியாபாரியைக் கட்டுப்படுத்த அல்ல. இருந்தாலும் புது மசோதா கொண்டு வந்தா மட்டும்
என்னவாகப் போகுது? பேருந்தில் சொகுசு விடுதிக்குப் போகும் எம்.எல்.ஏக்களுக்குக் டிக்கெட்
விலை கொஞ்சம் அதிகமாகலாம்!" என்று சொல்லி விட்டு, பக்கத்தில் இருந்தவர் முன்னை
விட இன்னும் பலமாகச் சிரித்தார். இந்தச் சிரிப்பு மட்டும் இல்லையென்றால் ஜனநாயகம் தரும்
மனஅழுத்தத்தைப் பல நேரங்களில் தாங்கவே முடியாது.
அவர் சிரிக்க சிரிக்க, அப்புசாமி தன் வாக்காளர் அடையாள அட்டையைப் பார்த்தார்.
அது அமைதியாக, எந்தக் கட்சிக்கும் தாவாமல் அவருடைய பையிலேயே இருந்தது.
*****

No comments:
Post a Comment