19 Jul 2026

செய்தித்தாள் விற்றவனும், செய்தியாய்ப் போனவனும்!

செய்தித்தாள் விற்றவனும், செய்தியாய்ப் போனவனும்!

சண்முகநாதனுக்கு வயது அறுபது. அறுபது என்பது வெறும் எண் அல்ல, அது அச்சிடப்பட்ட செய்தித்தாள்களை இன்னும் உலகப் பேரறிவாக நம்பிக் கொண்டிருக்கும் ஒரு பழங்காலத் தலைமுறையின் குறியீடு.

தினமும் காலை அரை கிலோமீட்டர் நடப்பார் சண்முகநாதன்.

எதற்காக?

உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள.

உலகம் எப்போதுமே ஒரே இடத்தில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறது; மனிதர்கள் தான் வீணாக அலைந்துகொண்டிருக்கிறார்கள் என்பது சண்முகநாதனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

"சண்முகம் ஐயா, நீங்கள் ஏன் தினமும் இந்த வயதில் அலைகிறீர்கள்? பக்கத்தில் இருக்கும் பூங்காவில் காற்றை மட்டும் சுவாசித்துவிட்டு வாக்கிங் போங்கள். இந்த காகிதக் குப்பைகளை நான் உங்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து போடுகிறேன்," என்றார் கடைக்காரர் தர்மலிங்கம்.

மனிதர்கள் எப்போதும் சுலபமான வழிகளை, அதிலும் இலவசமாகக் கிடைக்கும் கரிசனங்களை விரும்புபவர்கள்.

சண்முகநாதனும் ஒப்புக்கொண்டார்.

பூங்காவில் நடக்கும்போது ஆக்சிஜன் கிடைத்தது உண்மைதான், ஆனால் வாசலில் வந்து விழுந்த நாளிதழோடு சேர்த்து தர்மலிங்கத்தின் வலையும் வீட்டிற்குள் நுழைந்தது.

நெருக்கம் என்பது ஒரு மெல்லிய சிலந்தி வலை. அதில் முதலில் விழுவது ஈக்களைப் போன்ற நம்பிக்கை, பிறகுதான் காகிதப் பணம்.

"கடை அபிவிருத்தி செய்யணும் ஐயா, பையனுக்கு உடம்பு சரியில்லை..." என தர்மலிங்கம் நீட்டிய வார்த்தை நாடகங்களுக்கு இரையாகி, சண்முகநாதன் தன் சேமிப்பிலிருந்துக் கொஞ்சம் கொஞ்சமாக ஆயிரங்களை எண்ணிக் கொடுத்தார்.

காகிதப் பத்திரிகை வாங்கிய இடத்தில், காகிதப் பணத்தைக் கொடுத்தார். இரண்டுமே ஒரே மரக்கூழில் இருந்து உருவானவைதான் என்ற தத்துவம் அப்போது சண்முகநாதனுக்கு வேலை செய்யவில்லை.

ஒரு நாள் காலை, கடையின் கதவில் பூட்டு தொங்கியது. தர்மலிங்கம் ஊரை விட்டு ஓடிவிட்டார்.

விஷயம் சண்முகநாதனின் குடும்பத்தாருக்குத் தெரிந்தபோதுதான், காகிதப் பணத்தின் மதிப்பு புரிந்தது. சண்முகநாதனுக்கோ வேறொன்று புரிந்தது. செய்தித்தாள்கள் தினமும் காலாவதியாகிவிடுகின்றன; மனிதர்களின் முகமூடிகளும் அப்படித்தான்.

தர்மலிங்கம் ஓடியதில் பண நஷ்டம் ஒருபுறம், சண்முகநாதனின் மனிதநேயம் என்ற தத்துவம் நொறுங்கிப்போனதுதான் ஆகப்பெரும் சோகம்.

நம்பிக்கை துரோகம் என்பது ஒரு விசித்திரமான வைரஸ். அது உடலை விட மனதை முதலில் தின்னும்.

இப்போது சண்முகநாதன் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைகிறார். அன்று செய்திதாள் வாங்க தர்மலிங்கத்தின் கடைக்கு நடந்த அரை கிலோமீட்டரை விட, இன்று மருத்துவமனை வராண்டாக்களில் அவர் நடக்கும் தூரம் அதிகம்.

மனிதர்கள் செய்தித்தாள்களைப் போன்றவர்கள். தர்மலிங்கங்களைப் போல தினமும் ஒரு புதிய தலைப்புச் செய்தியோடு முகப்பில் நிற்பார்கள். ஆனால், நேற்று படித்த செய்திக்கும் இன்று நடக்கும் உண்மைக்கும் சம்பந்தமே இருக்காது.

திடீரென நெருங்கி வரும் மனிதர்கள், உங்களை நேசிப்பதில்லை; உங்கள் வசம் இருக்கும் ஏதோ ஒன்றை நேசிக்கிறார்கள்.

இறுதியில், ஏமாற்றியவன் செய்தியாக மாறிவிடுவான், நீங்கள் அதை வராண்டாவில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருப்பீர்கள்.

*****

No comments:

Post a Comment