ஒரு சமூக விலங்கியல்
மனிதன் ஒரு சமூக விலங்கு என்று தத்துவப் புத்தகங்கள் சொல்கின்றன. ஆனால், இன்றைய
மனிதன் தன் வீட்டுச் சுவர்களுக்குள் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு பயந்தாங் கொள்ளி விலங்கு
என்பதுதான் உண்மை.
பயணங்களின் போது ஒரு க்யூட் குழந்தையைப் பார்க்கிறீர்கள். 'என்னடா செல்லம்'
என்று கொஞ்சத் தோன்றும். நம்மிடம் இருக்கும் சாக்லேட்டை நீட்ட நினைப்போம். ஆனால், அடுத்த
நொடி கை பின்வாங்கும். பெற்றோர் நம்மை ஏதோ 'சைக்கோ கடத்தல்காரன்' ரேஞ்சுக்குப் பார்ப்பார்களோ
என்ற பயம்.
அறிமுகமில்லாத இடங்களை விடுங்கள்; பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுச் சுட்டிகளைக்கூட
'எங்க வீட்டுக்கு வா, விளையாடலாம்' என்று அழைக்க முடிவதில்லை. நாம் வாழும் சமூகம் எங்கே
போய்க்கொண்டிருக்கிறது?
முன்பெல்லாம் பக்கத்து வீட்டுச் சுவர்கள் வெறும் செங்கற்களால் ஆனவை அல்ல, அவை
நம்பிக்கையால் ஆனவை. பக்கத்து வீட்டில் குழந்தையை விட்டுவிட்டு நிம்மதியாகச் சமையல்
செய்த அம்மாக்கள் அப்போது இருந்தார்கள்.
பழைய தலைமுறைக்கு ரத்த சம்பந்தம் இல்லாத ஏகப்பட்ட அத்தைகளும், சித்தப்பாக்களும்
இருந்தார்கள். வாடகை வீடு மாறினால், புது உறவுகள் தானாக 'அப்டேட்' ஆகும்.
இன்று? பிள்ளைகளை உலகச் சுற்றுப்பயணம் அனுப்பத் துணியும் பெற்றோருக்கு, அடுத்த
வீட்டுக்கு அனுப்பப் பயம். வாசலில் இரண்டு முறை ஒரு பைக் கடந்தால் நெஞ்சு படபடக்கிறது.
சிசிடிவி கேமரா என்பது போலீசுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டுக்கும் 'மஸ்ட்' ஆகிவிட்டது.
பெண்கள் பையில் லிப்ஸ்டிக்கை விட 'பெப்பர் ஸ்ப்ரே' முக்கிய கேஜெட்டாக மாறிவிட்டது.
சூடான பாலைக் குடித்து நாக்கைச் சுட்டுக் கொண்ட தெனாலிராமன் பூனை கதையாகிவிட்டது
நம் நிலைமை. சமூகம் முழுக்கவா கயவர்கள்? இல்லை. ஆனால், யார் கயவன் என்று கண்டுபிடிக்க
முடிவதில்லை. அதைத்தான் வள்ளுவர், 'மக்களே போல்வர் கயவர்' என்றார். அதாவது, வில்லனும்
நம்மைப் போல இன்ஷர்ட் பண்ணிக்கொண்டு, 'நைஸ்' ஆகத்தான் உலா வருவான்.
மிருகங்கள் தங்களின் வாரிசுகளுக்கு இரை தேடக் கற்றுக்கொடுத்தவுடன் நகர்ந்துவிடுகின்றன.
மனிதன் மட்டும்தான் வாரிசுகளுக்காகத் சொத்து சேர்க்கிறேன் என்ற பெயரில், தன் ஆயுள்
முழுவதையும் பொருளாதாரப் பந்தயத்தில் தொலைக்கிறான்.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்க நினைப்பது வங்கிக் கணக்குகளை மட்டுமே
தவிர, தங்களின் நேரத்தை அல்ல. வீட்டில் கிடைக்காத அன்பைத் தேடித்தான் இளைய தலைமுறை
சமூக வலைதளங்களின் போலி முகமூடிகளிடமும், முகம் தெரியாத் திரை நட்சத்திரங்களிடமும்,
எல்லாவற்றையும் மறந்து கற்பனை உலகத்தில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்களிடமும் தஞ்சம்
புகுகின்றது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் பெற்றோர்கள், "நாங்கள்
அவனுக்கு என்ன வசதி செய்து தரவில்லை?" என்று கேட்கிறார்கள். நீங்கள் எல்லாவற்றையும்
கொடுத்தீர்கள், நேரத்தையும் அன்பையும் தவிர.
நம் மகள்களைச் சில மகன்களிடமிருந்து பாதுகாத்தால்தான், அந்த மகன்களையுமே காப்பாற்ற
முடியும். இதுதான் பிராக்டிகலான சமூகச் சிந்தனை. வீடுகளில் இருந்து தொடங்காத எந்த ஒழுக்கமும்,
எந்தச் சட்டத்தாலும் வீதிகளில் நிலைநாட்டப்பட முடியாது.
*****

No comments:
Post a Comment