அரசி, அரசன் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப்!
சமூகத்தில்
பெண்ணுரிமை என்ற வார்த்தை, தீபாவளிக்கு வாங்கும் மத்தாப்பு போன்றது. கொளுத்திப் பிடிக்கும்போது
வெளிச்சம் தரும்; கையில் சுட்டவுடன் அணைந்துவிடும்.
ஒரு
பெண் ராணுவத்துக்கோ, விண்வெளிக்கோ போய்விட்டால், உடனே ஒட்டுமொத்தப் பெண் குலமும் கூரையைப்
பிளந்து கொண்டு மேலே போய்விட்டதாக ஒரு பிரம்மை நமக்கு.
இந்தியத்
தேர்தல்கள் ஒரு விசித்திரமான திருவிழா. இங்கே திருவிழாவை நடத்துபவர்கள் பெண்கள்; ஆனால்,
சாமி கும்பிட்டுவிட்டுப் பிரசாதம் வாங்குவதோடு அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
வாக்குச்
சாவடிகளில் ஆண்களை விடப் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதாவது, யார் ஆள வேண்டும் என்பதைத்
தீர்மானிக்கும் சக்தி பெண்களிடம் இருக்கிறது. ஆனால், நாங்களே ஆள்கிறோம் என்று அவர்கள்
உள்ளே நுழைந்தால், "சீட் இல்லை" என்கிறார்கள்.
அரசியல்
கட்சிகளுக்குப் பெண்களை வாக்காளர்களாக மதிக்கத் தெரியும்; தலைவர்களாக மதிக்கத் தயக்கம்.
அதிகாரம்
எங்கே வெளிப்படையாக இல்லையோ, அங்கே சமத்துவம் என்பது வெறும் சுவரொட்டி விளம்பரம் மட்டுமே.
உள்ளாட்சித்
தேர்தல்களில் நாம் பார்க்கும் காட்சி இதுதான். அதாவது பதவியில் அரசி அமர்ந்திருப்பார்,
ஆனால் அதிகாரப் பிரம்பை அரசன் அதாவது, அவருடைய கணவரோ, தந்தையோ, அண்ணனோ சுழற்றிக்கொண்டிருப்பார்.
ரப்பர் ஸ்டாம்பாக இருக்கும் பெண்ணை வைத்துக் கொண்டு அதை பெண் அதிகாரம் என்று கொண்டாடுவது,
பொம்மைக்குக் கிரீடம் சூட்டி மகிழ்வதற்குச் சமம்.
பெண்களுக்குத்
தேவை வெறும் பெயரளவிலான பிரதிநிதித்துவம் அல்ல; முடிவெடுக்கும் அதிகாரம்.
தேர்தல்
செலவுகளின் பண பலமும், தாதாத்தனமும் குறைய வேண்டும்.
இல்லையெனில்,
பணக்காரப் பின்னணி கொண்ட வாரிசுப் பெண்கள் மட்டுமே உள்ளே வருவார்கள். சாதாரணக் கிராமத்துப்
பெண், என்றும் போலவே வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.
அரசியல்
அதிகாரம் வேண்டும் என்றால், முதலில் கையில் காசு வேண்டும் என்பதுதான் உலக நியதி. தன்
சொந்தச் செலவுக்கே கணவனின் பர்ஸையோ, தந்தையின் கையையோ எதிர்பார்க்கும் ஒரு பெண்ணால்,
எப்படிச் சுதந்திரமாகப் பொது வாழ்க்கையில் முடிவெடுக்க முடியும்?
பொருளாதாரச்
சுதந்திரம் இல்லாத அரசியல் அதிகாரம், பெட்ரோல் இல்லாத சொகுசு கார் போன்றது. பார்க்க
அழகாக இருக்கும், ஆனால் நகராது.
அதோடு,
பாதுகாப்பு. ஒரு பெண் இரவில் பயமின்றித் தனியாகப் பேருந்திலோ, ரயிலிலோ பயணிக்க முடிந்தால்
மட்டும்தான் அவளால் சமூகத் தொடர்புகளை உருவாக்க முடியும்; கூட்டங்களுக்குப் போக முடியும்.
தெருவிளக்கும், பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தும் இல்லாத ஒரு நாட்டில், நீங்கள் எவ்வளவு
பெரிய பெண்ணியப் புரட்சி பேசினாலும் அது வெறும் வாய்வார்த்தைதான்.
மக்கள்தொகையில்
பாதியை அதாவது, பெண்களை முடிவெடுக்கும் இடத்திற்கு வெளியே உட்கார வைத்துவிட்டு,
"நாங்கள் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம்" என்று மார்தட்டிக் கொள்வது ஒரு தார்மீகக்
கோமாளித்தனம்.
பெண்களுக்கு
அதிகாரம் வழங்குவது ஏதோ ஆண்கள் செய்யும் நலத்திட்ட உதவியோ அல்லது அரசியல் கருணையோ அல்ல.
அது இந்த சமூகத்தின் பிழைப்புக்கானத் தேவை.
பெண்கள்
தலைமைப் பொறுப்புக்கு வரும்போது, அவர்கள் வெறும் பங்கேற்பாளர்கள் அல்ல; அவர்கள் ஆட்டத்தின்
விதிகளையே மாற்றப் போகும் ஆட்டக்காரர்கள்.
சில
பெண்களின் சாதனைக் கதைகளை வாசித்துவிட்டு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதை நிறுத்துவோம்.
ஒட்டுமொத்தப் பெண்களுக்கும் சம வாய்ப்பளிக்கும் ஒரு தளத்தை உருவாக்குவதே உண்மையான ஜனநாயகம்.
*****

No comments:
Post a Comment