18 Jul 2026

சங்க காலம் முதல் டாஸ்மாக் காலம் வரை – ஒரு திரவ வரலாறு!

சங்க காலம் முதல் டாஸ்மாக் காலம் வரை – ஒரு திரவ வரலாறு!

தமிழ் பேசும் மக்களுக்குப் போதை புதிதல்ல. சங்க காலத்திலேயே கள்ளும், நறவும் அருந்திவிட்டுப் போர்க்களத்திற்குப் போய் வீரம் காட்டினார்கள் என்று புறநானூறு பெருமையோடு பேசுகிறது. ஆனால், பாவம் அவர்களுக்குக் கஞ்சாவோ, ஓபியமோ தெரிந்திருக்கவில்லை. வட இந்தியர்களும், வெளிநாட்டு வர்த்தகர்களும்தான் நம் ஆட்களுக்கு இந்த உயரிய வஸ்துக்களை அறிமுகம் செய்து வைத்தார்கள்.

மருத்துவமனைகளில் மயக்க மருந்துக்காகப் பயன்படுத்தப்பட்ட கஞ்சாவை, பிரிட்டிஷ்காரன் காலத்தில் உழைப்பாளிகள் தங்கள் வலியைக் மறக்கப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இன்று நாமோ, வேலையில்லாத வலியையும், சம்பளம் பத்தாத வலியையும் மறக்கப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

1937இல் சேலத்தில் முதன்முதலில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போர் வந்தபோது, பிரிட்டிஷ் அரசுக்கு காசு தேவைப்பட்டது; உடனே மதுவிலக்கைத் தளர்த்தினார்கள். அன்றிலிருந்து இன்று வரை அரசுக்கு எப்போதெல்லாம் காசு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் குடிமகன்களின் கல்லீரல் தான் அடகு வைக்கப்படுகிறது. போர் முடிந்துவிட்டது, ஆனால் கல்லீரல் இன்னும் மீளவில்லை.

இன்று மதுவிலக்கு ஒரு மியூசிகல் சேர் விளையாட்டாகி விட்டது. 1971இல் தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. அதற்கு முன்பு வரை திருட்டுத்தனமாகச் சாராயம் விற்றார்கள்; குடித்தவர்களைச் சமூகம் கேவலமாகப் பார்த்தது. அதன்பின் கட்சிகள் ஆட்சிக்கு வரும், மதுவிலக்கை அமல்படுத்தும், அப்புறம் மதுவிலக்கை ரத்து செய்யும்.  இப்படியே போய் நாங்கள் வந்தால் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் அளவுக்கு மதுவிலக்க தள்ளாட ஆரம்பித்தது. என்னதான் வாக்குறுதி கொடுத்தாலும், ஜெயித்த பிறகு, அந்த படிப்படியை அப்படியே மறந்துவிட்டு, வருடாந்திர டார்கெட்டை மட்டும் ஐம்பதாயிரம் கோடியாக உயர்த்துவார்கள்.

அரசியல்வாதிகள் படிப்படியாக மூடுவோம் என்று சொன்னது டாஸ்மாக் கடைகளை அல்ல; மக்களின் கண்களை! ஆண்டுக்கு ரூ.50,000 கோடி லாபம் தரும் ஒரு தங்கக் கோழியைக் கழுத்தை அறுக்க எந்த அரசுக்காவது மனசு வருமா என்ன?

மதுபானங்கள் போதாது என்று, கடந்த பத்து ஆண்டுகளில் கஞ்சா மற்றும் செயற்கை போதைப்பொருட்களின் புழக்கம் தமிழ்நாட்டில் ஜிடிபி விகிதத்தை விட வேகமாக வளர்ந்திருக்கிறது.

காவல்துறை சும்மா இருக்கவில்லை. ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடத்திச் சுமார் 75,000 கிலோ கஞ்சாவைப் பிடித்திருக்கிறார்கள். பிடிபட்டது 75,000 கிலோ என்றால், பிடிபடாமல் சந்தைக்குப் போனது எவ்வளவு இருக்கும் என்று கணக்கு போடும் அளவுக்கு இங்கே யாருக்கும் கணிதம் தெரியாது என்பது நமக்கிருக்கும் ஒரே ஆறுதல்.

முன்பெல்லாம் கஞ்சா வாங்க வேண்டுமென்றால் ரவுடிகளையோ, சந்து பொந்துகளையோ தேடிப் போக வேண்டும். இன்று நம் வீட்டுப் பிள்ளைகள் ஐடி புண்ணியத்தால் டார்க் வெப் மூலம் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்கிறார்கள். ஸ்விக்கியில் பிரியாணி வருகிறதோ இல்லையோ, போதைப்பொருள் டோர் டெலிவரி ஆகிவிடுகிறது. டிஜிட்டல் இந்தியா சாதித்ததை விட, டிஜிட்டல் போதை உலகம் சாதித்தது அதிகம்!

ஒரு புள்ளிவிவரகக் கணக்குப்படி தமிழ்நாட்டில் 37 லட்சம் பேருக்குப் போதை மீட்பு சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், அரசிடம் இருக்கும் வசதியோ சில ஆயிரம் பேருக்கு மட்டுமே. அதாவது, குடிப்பதற்கான டாஸ்மாக் உள்கட்டமைப்பை  உலகத் தரத்தில் வைத்திருக்கும் அரசு, மீட்பதற்கான உள்கட்டமைப்பை இன்னும் ஆரம்பக் கல்வி நிலைய அளவிலேயே வைத்திருக்கிறது.

ஐஸ்லாந்து, போர்ச்சுகல், நெதர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தங்கள் நாட்டுப் போதை கலாசாரத்தை வேரோடு அழித்துவிட்டனவாம். இதைப் படிக்கும்போது நமக்குச் சிரிப்புதான் வருகிறது. அந்த நாடுகளின் பட்ஜெட் டாஸ்மாக் காசை நம்பியா நடக்கிறது? இங்கே பட்ஜெட்டே குவாட்டரிலும் ஆப்பிலும் புல்லிலும்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான பெண்கள், போதைக்கு அடிமையான தங்கள் கணவனையும் மகனையும் மீட்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகாத ஒரு சூழலை இந்த அரசுகள் தராதா? என்று ஏங்குகிறார்கள்.

அரசோ, பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குகிறோம் என்கிறது. அந்த ஆயிரம் ரூபாயை வாங்கி, அப்படியே கணவனிடம் கொடுத்து, அவன் அதை டாஸ்மாக்கில் கொண்டு போய் கட்டி, மீண்டும் அரசிடமே அந்தப் பணம் போய்ச் சேரும் இந்த சர்க்குலர் எகனாமி இருக்கிறதே, அதை எந்த நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையாலும் கண்டுபிடிக்க முடியாது!

இந்த டாஸ்மாக்கை ஒழித்து கட்ட முடியுமா என்ன? முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால், போதையை விடப் பெரிய போதை, அரசாங்கத்திற்கு இந்த டாஸ்மாக் வருமானத்தின் மேல் இருக்கும் போதைதான்!

*****

No comments:

Post a Comment