காய்ச்சலின் அனுதாபமும், கடனின் தனிமையும்!
ஒருவனுக்கு
104 டிகிரி காய்ச்சல் அடித்தால், சுற்றியிருப்பவர்களுக்கு அவன் மீது சட்டென்று ஓர்
ஆன்மீகக் கருணை பிறந்துவிடுகிறது. நெற்றியில் ஈரத்துணி போடு, கஞ்சி காய்ச்சித் தா.
என்று ஆளாளுக்கு ஓடி வருவார்கள்.
ஏன்
தெரியுமா?
காய்ச்சல்
என்பது இலவச அனுதாபத்தை முதலீடு செய்யக்கூடிய ஒரு தளம். அதற்கு யாரும் பையிலிருந்து
காசு எடுக்கத் தேவையில்லை.
ஆனால்,
கடன் அப்படியல்ல.
காய்ச்சல்
வந்தவன் படுக்கையில் படுத்திருப்பான், உலகம் அவனைத் தேடி வரும். கடன் வாங்கியவன் தேடிப்
போனாலும், உலகம் படுக்கைக்கு அடியில் போய் ஒளிந்துகொள்ளும்.
கடன்
வாங்கிய கணமே, ஒரு மனிதனைச் சுற்றி ஒரு தீண்டாமைச் சுவர் உருவாகிவிடுகிறது. அதுவரை
மிக நெருக்கமாக இருந்த நண்பர்கள் கூட, போன் கால்களைத் தவிர்ப்பதற்கும், தூரத்தில் கண்டால்
டூவீலரைத் திருப்பி ஓட்டுவதற்கும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள்.
வாங்கும்
கடன் என்பது வெறும் பணம் அல்ல, அது எதிர்கால உழைப்பு. இன்று சொகுசாகச் செலவழிக்கும் ஒவ்வொரு கடன் பணமும், அடுத்த
ஐந்தாண்டுகளுக்கு சிந்தப்போகும் வேர்வையை இன்றே அடகு வைப்பதற்குச் சமம்.
இயற்கையின்
விதியின்படி காலம் முன்னோக்கி மட்டுமே நகரும்.
வட்டியின்
விதியின்படி காலம் தூங்கினாலும், புயல் அடித்தாலும், உலகம் அழிந்தாலும் வட்டி மட்டும்
நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும். அது விநாடி முள்ளை விட அதிவேகமாக வளரக்கூடிய ஒரு
விசித்திரச் செடி.
நீதிமன்றக்
கூண்டில் ஏறும் குற்றவாளிக்குக் கூட வாதாட வக்கீல் வருவார். ஆனால், மாதக் கடைசியில்
இஎம்ஐ கட்ட முடியாமல் தவிக்கும் நடுத்தர வர்க்கத்து மனிதனின் கூண்டில், அவனும் அவனது
கால்குலேட்டரும் மட்டுமே இருக்கும்.
இன்றைய
நுகர்வோர் உலகம் மனிதர்களை எந்நேரமும் வேட்டையாடிக்கொண்டே இருக்கிறது. உன்னிடம் பணம்
இல்லை என்றால் என்ன, இதோ கிரெடிட் கார்டு, இதோ பர்சனல் லோன், என்று ஆசைகாட்டி கழுத்தில்
கயிற்றை மாட்டுகிறது.
இப்போதைக்கு
எங்களிடம் எதுவும் இல்லை, என்று சொல்வதில் இருக்கும் பேரானந்தத்தை இந்த உலகம் நமக்கு
மறக்கடித்துவிட்டது.
நம்மிடம்
கார் இல்லை, என்ற ஏக்கம் தரும் வலியை விட, காருக்கான தவணைப் பணத்தை இன்னும் கட்டவில்லை,
என்று வங்கி ஊழியர் வாசலில் வந்து நிற்கும்போது ஏற்படும் அவமானம் பல மடங்கு கொடியது.
மனிதன்
பிறக்கும்போது அம்மணமாகப் பிறக்கிறான். இறக்கும்போதும் எதையும் கொண்டு போவதில்லை. இடையில்
இருக்கும் சில பத்தாண்டுகளில், இல்லாத ஒன்றுக்காக, அடுத்தவன் காசில் எதற்கு இத்தனை
பந்தா?
காய்ச்சல்
வந்தால் உடல் உருகும், சில நாட்களில் சரியாகிவிடும். ஆனால் கடன் வாங்கினால் ஆன்மாவே
உருகிவிடும். எனவே, வயிற்றுப் பசிக்கு பழைய கஞ்சி குடித்தாலும், மன அமைதிக்கு சொந்தக்
காசையே செலவழிப்போம், என்ற தத்துவத்தோடு வாழப் பழகுவதே புத்திசாலித்தனம்.
ஏனெனில்,
கடனே இல்லாத மனிதன்தான் இந்த உலகத்தின் ஆகச்சிறந்த கோடீஸ்வரன்!
*****

No comments:
Post a Comment