16 Jul 2026

கஞ்சி – ரெசிபி பழையது, பாலிடிக்ஸ் புதியது!

கஞ்சி – ரெசிபி பழையது, பாலிடிக்ஸ் புதியது!

நம்மூர் சமையலறைகளில் கஞ்சி என்பது ஓர் எளிய திரவம். ஆனால், அதன் பின்னணியில் இருக்கும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச வணிக நெட்வொர்க் இருக்கிறதே, அது ஒரு சயின்ஸ் பிக்சன் நாவலை விட சுவாரஸ்யமானது.

நொந்துபோன வயிற்றில் ஊற்றப்படும் கஞ்சிக்குத் தெரியாது, அதற்கு இவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறது என்று. 1563களில் கார்சியா டி ஓர்டா என்கிற போர்த்துகீசிய டாக்டர், கோவாவில் இருந்தபடி இதை ஒரு மருந்து என்று ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

தமிழின் கஞ்சிதான் போர்த்துகீசியத்தில் Canje ஆகி, ஆங்கிலத்தில் Congee ஆக உருமாறியது. நாம் வீட்டில் சாதாரணமாகக் குடிக்கும் இந்தக் கஞ்சி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து, லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, ஐரோப்பிய மருத்துவக் குறிப்புகளில் இடம்பிடித்துவிட்டது. அதாவது, கூகுள் வருவதற்கு முன்பே கஞ்சி வைரல் ஆகிவிட்டது!

இந்த இடத்தில் தான் ஒரு ட்விஸ்ட். இந்தியாவிடம் டிரடிஷனல் நாலெட்ஜ் டிஜிட்டல் லைப்ரரி என்று ஒரு டிஜிட்டல் நூலகம் இருக்கிறது. வேம்பு, மஞ்சள், பாசுமதி அரிசி போன்றவற்றுக்கு வெளிநாட்டவன் பேடன்ட் வாங்கிவிடக்கூடாது என்று நாம் உஷாராகப் பதிவு செய்து வைத்திருக்கிறோம்.

ஆனால், அங்கே ஒரு சிக்கல். இந்த நூலகம் ஆயுர்வேதம், சித்தா போன்ற பழைய புத்தகங்களில் எழுதியிருப்பதை மட்டும்தான் கணக்கில் கொள்ளும். நம் பாட்டிமார்கள் வாய்மொழியாகச் சொல்லிக்கொடுத்த சுக்குக் கஞ்சிக்கு அங்கே இடமில்லை.

லாபம் தரும் விஷயம்தான் அறிவு,  சும்மா வீட்டில் வைக்கும் கஞ்சி எல்லாம் வெறும் சமையல் என்ற இந்தத் தர்க்கம்தான் உலகளவிலான சட்டத்தின் முன் இப்போதைய மிகப்பெரிய ஓட்டையாக மாறியுள்ளது.

கஞ்சி என்பது வெறும் உணவு அல்ல, அது நம் முன்னோர்களின் பாரம்பரிய வாழ்வியல் அறிவின் கண்டுபிடிப்பு. எந்த அரிசியைப் பயன்படுத்தினால் உடல் சூடு தணியும்? எந்தக் காலநிலையில் நொதிக்க வைத்த கஞ்சி குடிக்க வேண்டும்? இதையெல்லாம் தீர்மானிப்பது நம் வீட்டுப் பெண்கள்தான்.

ஆனால், நவீன அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்கள் ஒரு தனிநபர் கண்டுபிடிப்பைத்தான் அறிவு என்று அங்கீகரிக்கின்றன. ஒரு சமூகமே சேர்ந்து, தலைமுறை தலைமுறையாக வளர்த்தெடுத்த இந்தக் கூட்டு அறிவை;r  சட்டம் கண்டுகொள்வதில்லை.

இன்று நகர்ப்புறங்களில் பெர்மென்டட் ரைஸ் வாட்டர் என்றும், டீடாக்ஸ் போரிட்ஜ் என்றும் ஸ்டைலாகப் பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள். விலை பல நூறு ரூபாய்!

நம் பாட்டி கஞ்சி வடித்தபோது கிடைக்காத மதிப்பு, ஒரு கார்ப்பரேட் கம்பெனி லேபிள் ஒட்டும்போது கிடைத்துவிடுகிறது. இங்கே லாபம் யாருக்குப் போகிறது? கஞ்சியைப் பாதுகாத்த சமூகத்திற்கா அல்லது அந்த பாட்டிலை டிசைன் செய்த கம்பெனிக்கா? பதில் உங்களுக்கே தெரியும்.

கஞ்சி என்பது வெறும் வறுமையின் அடையாளம் அல்ல; அது நம் உயிர்நாடி. இதை வெறும் டெக்னிக்கல் விஷயமாகப் பார்க்காமல், நம் கலாசார அடையாளமாக  அங்கீகரிக்க வேண்டும்.

நிச்சயமாக முதலில் நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் இந்தப் பாரம்பரிய அறிவுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். இல்லையென்றால், நாளை பழைய சாதம் சாப்பிடுவதற்கும் நாம் ராயல்டி கட்ட வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்!

*****

No comments:

Post a Comment