13 Apr 2026

ஒரு கிலோ பிரியாணியும், ஐந்து விரல் சாபமும்!

ஒரு கிலோ பிரியாணியும், ஐந்து விரல் சாபமும்!

கூட்டத்தை எப்போது கூட்ட வேண்டும், எப்போது கலைக்க வேண்டும் என்பது தெரிந்தால் நீங்களும் ஓர் அரசியல்வாதிதான்.

மக்களும் முட்டாள்கள் இல்லை. அவர்களுக்கு அனைத்தும் தெரியும்.

அரசியல் கட்சிகள் ஒரு பிசினஸ் மாடலில் ஓடும்போது, மக்கள் மட்டும் ஏன் தர்மகர்த்தா மாதிரி யோசிக்க வேண்டும்?

ஓர் அரசியல் கூட்டத்திற்குப் போனால் இருநூறோ, முந்நூறோ கிடைக்கும் என்று மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதைப் பொருளாதாரப் பகுத்தறிவு எனலாம்.

இன்றைய அரசியலில் புனித பிம்பங்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. காந்தி, காமராஜர் போல யாரும் இப்போது புனிதம் வேடம் போடுவதில்லை.

மக்களுக்கும் தெரியும் இவர்கள் பணம் கொடுத்து ஜெயித்தவர்கள் என்று.  தலைவர்களுக்கும் தெரியும் இவர்கள் காசு வாங்கித்தான் ஓட்டுப் போட்டார்கள் என்று.

இரு தரப்புமே ஒருவருக்கு ஒருவர் நடித்துக் கொள்கிறார்கள். இது ஒரு பரஸ்பர நடிப்பு விழா.

அரசியல்வாதி வெளியில், நான் உங்களுக்குச் சேவை செய்யப் பிறந்தவன் என்று சொல்லிக் கொண்டாலும், மனதுக்குள் போட்ட முதலை எப்படி எடுக்கப் போகிறோம் என்பதை யோசித்தபடி இருக்கிறார்.

மக்களும் நீங்கள்தான் எங்கள் கடவுள் என்று வெளியே சொல்லிக் கொண்டாலும், மனதுக்குள் ஓட்டுக்கு இன்னும் ஒரு ஐநூறு ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்தால் குறைந்தா போய் விடுவார் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்று அரசியல் என்பது ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. இங்கே முதலீடு அதிகம். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலைக் காக்கப் பணம் தருகிறார்கள். கான்ட்ராக்டர்கள் தரமற்ற வேலையைக் கண்டு கொள்ளாமல் இருக்க கமிஷன் தருகிறார்கள். இப்படி அரசியல்வாதிகளுக்குப் பணம் வர, அவர்கள் வேட்பாளர்களாகும் போது ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் கணக்குப் பார்த்து செலவு செய்கிறார்கள்.

கட்சிகள் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதே அவரது செலவு செய்யும் தகுதியை வைத்துத்தான். இவர் நல்லவர் என்பதை விட, இவர் கரன்சியால் மக்களை எந்த அளவுக்குக் குளிப்பாட்டுவார் என்பதுதான் இன்றைய தகுதித் தேர்வு.

அக்காலத்தில் மக்கள் தரையில் உட்கார்ந்து, சொந்தக் காசில் வேர்க்கடலை வாங்கித் தின்றபடி தலைவர்களின் பேச்சைக் கேட்டார்கள். இன்று, இருக்கையில் பிரியாணிப் பொட்டலம் இல்லை என்றால் தலைவரைப் பார்க்கக் கூட ஆள் வருவதில்லை. அந்தப் பிரியாணி பொட்டலத்தோடு தரப்படும் தண்ணீர் பாட்டிலிலும் தலைவரின் முகம் சிரிக்கிறது.

ஆனால் ஒரு தர்க்கம் இடிக்கவே செய்கிறது. வாக்காளர் வாங்கும் அந்த ஆயிரம் ரூபாயோ, ஒரு பொட்டலம் பிரியாணியோ அவர்களது கேள்வி கேட்கும் உரிமையை அப்படியே லபக் செய்து விடுகிறது. ஜனநாயகத்தின் அடிப்படையான இந்தக் கேள்விக் கேட்கும் உரிமை போய் விட்டால், அங்கே மிச்சம் என்ன இருக்கிறது?

வாக்காளர் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் போது இன்னொன்றும் நிகழ்கிறது. அது என்னவென்றால், வாக்காளர் ஒரு விரலை நீட்டி ஊழல்வாதி என்று ஓர் அரசியல்வாதியைச் சொல்லும்போது, மற்ற மூன்று விரல்களும் நீயும் அந்த ஊழலில் பங்கு வாங்கி பிரியாணி தின்றவர்தானே என்று சொல்லும்.

மேலும் நோட்டை வாங்கிக் கொண்டு ஓட்டைப் போடும் போது ஒரு மாயாஜாலமே நடக்கும். அரசியல் என்பது வாரிசுத் தொழில் ஆகி விடும். அதாகப்பட்டது, தேசியத் தலைவர் மகன் அடுத்த தேசியத் தலைவர். மாநிலத் தலைவர் மகன் அடுத்த மாநிலத் தலைவர். மாவட்டத் தலைவர் மகன் அடுத்த மாவட்டத் தலைவர். தப்பித்தவறி வேறு யாராவது உள்ளே வந்தால், அவர்கள் மாலை போடவும் வாழ்க சொல்லவும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இதெல்லாம் சகஜமப்பா என்ற மனநிலைதான் நம் ஜனநாயகத்தின் ஆகப்பெரிய எதிரி. ஓர் அரசு தன் கடமையைச் செய்வதைச் சாதனை என்று விளம்பரம் செய்கிறது. அதை எதிர்க்கட்சி வேதனை என்கிறது. இதற்கு நடுவில் உண்மையான மக்களாட்சி மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது.

ஆனால், மாற்றத்திற்கான முணுமுணுப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேட்கத்தான் செய்கின்றன. எத்தனை காலம்தான் அவர்கள் வாங்கிக் கொண்டே இருப்பார்கள், இவர்கள் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்? அதிலும் ஒரு மாற்றமோ, புரட்சியோ வெடிக்கக் கூடும். அப்போது ஜனநாயகத்தில் தேர்தல் என்பது திருத்தி எழுதப்படும்.

*****

No comments:

Post a Comment