2026 – பங்குச்சந்தை ஏன் திக் திக் என்று இருக்கிறது?
நேற்று ஏறியது இன்று இறங்குகிறது,
இன்று இறங்கியது நாளை எகிறுகிறது. அது என்ன? என்ற விடுகதையை உங்களிடம் கேட்டால், அதுதான்
இன்றைய பங்குச் சந்தை, கிரிப்டோ மற்றும் தங்கம்.
பங்குச்சந்தையில் முதலீடு
செய்தவர்கள் நிம்மதியாகத் தூங்கலாம் என்று நினைத்தால், எங்காவது ஒரு மூலையில் ட்ரேட்
வார் அல்லது ஜியோ பாலிட்டிகல் பிளவுகள் வந்து
அவர்களின் தூக்கத்தைக் கெடுக்கின்றன.
இன்றைய நிதி நிலநடுக்கங்களுக்கு
முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.
2025 இல் தொடங்கிய டிரம்ப்
2.0 நிர்வாகத்தின் டேரிப் கொள்கைகள் 2026லும் தொடர்கின்றன. மெக்சிகோ, கனடா, சீனா எனப்
பல நாடுகள் மீது அமெரிக்கா வரி விதிக்க, பதிலுக்கு அந்த நாடுகளும் அமெரிக்கப் பொருட்கள்
மீது வரி விதித்து ஒரு ஈகோ போரே நடக்கிறது. முதலீட்டாளர்கள் எங்கே பணம் போடுவது என்று
தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரிக்ஸ் நாடுகள் இப்போது
டாலரைத் தாண்டிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டன. 2022 இல் ரஷ்யாவின் அந்நியச் செலாவணி
முடக்கப்பட்டதில் இருந்தே இந்த டீ-டாலரைசேஷன் வேகம் எடுத்துவிட்டது. பிரிக்ஸ் நாடுகள்
தங்கள் சொந்த டிஜிட்டல் கரன்சி புரோட்டோடைப்பை உருவாக்கி, டாலருக்கு மாற்றாகச் செயல்படத்
துடிக்கின்றன. டாலரைத் தொடாதே, தொட்டால் 100% வரி, என்று டிரம்ப் எச்சரித்திருப்பது
நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல இருக்கிறது.
டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க
விரும்புவதும், அதற்கு டென்மார்க் மறுப்பு தெரிவிப்பதும் இப்போது ஒரு நேட்டோ பிரச்சனையாகவே
மாறிவிட்டது. கிரீன்லாந்து அல்லது நேட்டோ என டிரம்ப் பேசியது ஐரோப்பிய நாடுகளிடையே
பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 2026 இல் அமெரிக்கா
நடத்திய ஆபரேஷன் அப்சல்யூட் ரிஸால்வ் மூலம் வெனிசுலாவின் மதுரோ கைது செய்யப்பட்டது
பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இது ஒரு பக்கம் எண்ணெய் விலையைக் குறைக்கலாம் என்று
தோன்றியது. ஆனால், ஈரானுடனான பதற்றம் ஹோர்முஸ் நீர்ச்சந்தியை மூடும் நிலைக்குக் கொண்டு
சென்றதால், பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் ஏறுகிறது. பல நாடுகளில் சமையல் கேஸ் லேது
ஆகி விட்டது.
அமெரிக்காவின் பொதுக் கடன்
இப்போது சுமார் 38 டிரில்லியன் டாலரை நெருங்கிவிட்டது. 2020க்குப் பிறகு இது அசுர வேகத்தில்
வளர்ந்துள்ளது. வட்டி கட்டவே ஒரு பெரும் தொகையைச் செலவிட வேண்டியிருப்பதால், பணப்புழக்கம்
அதிகரித்து பணவீக்கம் அமெரிக்காவில் கூடுகிறது.
இன்று முதலீட்டாளர்கள் எல்லாவற்றையும்
வாங்குகிறார்கள், அதாகப்பட்டது தங்கம், வெள்ளி, வீடு, கிரிப்டோ மற்றும் ஏஐ நிறுவனப்
பங்குகள் என்று. இது நம்பிக்கையினால் அல்ல, பயத்தினால்.
எதில் போட்டால் காசு தப்பும்
என்கிற ஒரு விதமான ஹெட்ஜிங்தான் இது.
2026 இல் சந்தை நிலைபெற வேண்டுமானால்,
நாடுகள் கத்திகளை உறையில் போட்டுவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்.
நடக்குமா?
நடக்க வேண்டும்.
நடக்கவில்லை என்றால் உலகப்
பொருளாதாரம் எழுந்து நடக்காது. படுத்தே கிடக்கும்.
*****

No comments:
Post a Comment