தூக்கம் – மூளையின் டீடாக்ஸ்!
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்தத் தூக்கமும் அமைதியும் நானால்
உன்னைத் தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
ஆலயமணி
படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் இவை. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இடம்பெற்ற
இந்தப் பாடலின் ராகம் கூட நீலம்பரிதான். தூக்கத்திற்கு உகந்த ராகம்.
கண்ணதாசனின்
மேற்படி வரிகள் ஷேக்ஸ்பியர் தழுவல். தத்துவத்தைக் கவித்துவமாக வெளிப்படுத்துவதில் ஷேக்ஸ்பியரை
அடித்துக் கொள்ள முடியாது. அவர் தூக்கத்தைச் சாவுக்கும், அமைதிக்கும் ஒப்பிட்டு கூட
நிறைய எழுதியிருக்கிறார்.
திருவள்ளவரும்,
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (குறள், 339)
என்று
எழுதியிருக்கிறார்.
ஆனால்,
நவீன விஞ்ஞானம் சொல்வது வேறு. நாம் குறட்டை விட்டுத் தூங்கும்போது, நம் மூளைச் செல்கள்
ஒன்றும் ஓய்வெடுப்பதில்லை. சொல்லப்போனால், அவை அப்போதும் செம பிஸி.
பகலில்
வேலை செய்த களைப்பில் மூளையில் சேர்ந்த நச்சுப் பொருட்களை இரவு நேரத்தில் மூளை ஒரு
திரவத்தைக் கொண்டு வாஷ் செய்கிறது. ஒரு பெரிய பார்ட்டி முடிந்த பிறகு, ஹாலைப் பெருக்கிச்
சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்களைப் போல நம் மூளை இரவு முழுக்க வேலை செய்கிறது.
இதை டீடாக்ஸ் என்கிறார்கள்.
மூளைக்கும்
தூக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்வதற்காக, ஓர் ஆய்வு செய்தார்கள். இதற்காக
இரண்டு குரூப்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அவர்களிடம் 20 அந்நியர்களின் முகங்களையும்
பெயர்களையும் காண்பித்தார்கள். ஒரு குரூப்பை நன்றாகத் தூங்க வைத்தார்கள். இன்னொரு குரூப்
விழித்துக்கொண்டே இருந்தது.
மறுநாள்
காலையில் செக் செய்தபோது, நன்றாகத் தூங்கிய குரூப் மற்றவர்களை விட 12 சதவிதம் அதிகத்
துல்லியமாகப் பெயர்களைச் சொன்னார்கள்.
இதில்
மேட்டர் இதுதான். நாம் தூங்கும்போது, அந்த கடல் குதிரை வடிவ ஹிப்போகாம்பஸ் பகலில் நாம்
சேகரித்த குப்பையான தகவல்களில் எதைச் சேமிக்க வேண்டும், எதை டெலீட் செய்ய வேண்டும்
என்று தீர்மானிக்கிறது. பிறகு, அந்தத் தகவல்களை மூளையின் பாதுகாப்பான லாக்கரான கார்டெக்ஸ்
பகுதிக்குப் பார்சல் பண்ணி அனுப்பி வைக்கிறது.
இது
பற்றி ஒரு சுவாரஸ்யமான தியரி இருக்கிறது. நாம் தூங்கும்போது மூளை அலைகள் மெதுவாக மாறும்.
அந்தச் சமயத்தில் மூளைக்குள் சின்னச் சின்ன மின்மினிக் கீற்றுகள் போல மின்சாரம் பாயும்.
இதற்கு ஸ்லீப் ஸ்பின்டில்கள் என்று பெயர்.
இது
என்ன செய்கிறது தெரியுமா? நம் மூளையின் ஷார்ட் டெர்ம் மெமரி ஷெல்ஃபுகளைக் காலி செய்துவிட்டு,
முக்கியமான கோப்புகளை லாங் டெர்ம் மெமரிக்கு மாற்றுகிறது. இதனால் காலையில் எழுந்ததும்
புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள மூளையில் ப்ரீயான ஸ்பேஸ் கிடைக்கிறது.
கனவுத்
தூக்கம் இன்னும் விசித்திரமானது. ஒரு சோதனையில், சிலரிடம் மிகவும் வருத்தப்படக்கூடிய
புகைப்படங்களைக் காண்பித்தார்கள். தூங்கிய பிறகு மீண்டும் அதே படங்களைப் பார்த்தபோது,
அவர்களுக்கு அந்தப் படங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லையாம்.
ஏன்
என்கிறீர்களா?
தூக்கத்தில்
மூளை ஒரு ஓவர்நைட் தெரபி செய்கிறது. ஒரு சம்பவத்தின் நினைவை மட்டும் வைத்துக்கொண்டு,
அதோடு ஒட்டியிருக்கும் வலி அல்லது பயத்தை மட்டும் கத்தரித்து எடுத்துவிடுகிறது. அதனால்தான்
தூங்கி எழுந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று முன்னோர்கள் சொன்னார்கள் போல!
ஐந்து
மணி நேரத்திற்குக் குறைவாகத் தூங்குபவர்களுக்குப் பொய் நினைவுகள் உருவாகும் வாய்ப்பு
அதிகமாம். அதாவது நடக்காத ஒரு விஷயத்தைத் தானாகவே கற்பனை செய்து நினைவு என்று மூளை
சேமித்துவிடும். எட்டு மணித் தூக்கம் அவசியம். அப்போதுதான் மூளை வேலையில் கில்லியாக
இருக்கும். நீங்கள் அறிவார்ந்த வேலையில் அதிகம் ஈடுபட்டால் பத்து மணி நேரம் கூட தூங்கலாம்.
அடுத்த
முறை யாராவது உங்களைப் பார்த்து, என்ன எப்பப்பாரு தூங்கிக்கிட்டே இருக்கே? என்று கேட்டால்,
நான் தூங்கலை, மூளையில மெமரி ஹவுஸ்கீப்பிங் பண்ணிக்கிட்டு இருக்கேன், என்று தைரியமாகச்
சொல்லுங்கள்! தட் இஸ் பிரைன் டீடாக்ஸ். எஸ் நீங்கள் டீடாக்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.
அதனால்தான்
ராமாயண யுத்தக் காண்டத்தில் எது நீதி என்பது குறித்து இராவணனுக்கு இல்லாத தெளிவு, கும்பகர்ணனுக்கு
இருந்தது போலும். ஸோ கும்பகர்ணன் அதிகம் தூங்கி நன்றாகவே பிரைன் டீடாக்ஸ் செய்திருக்கிறார்.
*****

No comments:
Post a Comment