29 Mar 2026

பணம் + பிரியாணி = ஓட்டு – பார்முலாக்களின் வரலாறு!

பணம் + பிரியாணி = ஓட்டு – பார்முலாக்களின் வரலாறு!

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் தேர்தல் என்பது ஒரு அரசியல் நிகழ்வு, ஆனால் தமிழகத்தில் அது ஒரு திருவிழா விற்பனை. ஜனநாயகத் திருவிழா என்று இதைப் புகழ்பவர்கள், இதில் புழங்கும் பணத்தைப் பார்த்தால், இதை ஜனநாயக ஏல விற்பனை என்றுதான் அழைப்பார்கள். இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என் மீது கோபப்படக் கூடாது. தொடர்ந்து கீழே படியுங்கள். உங்களுக்கே அந்த உண்மை புரியும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் தேர்தல் என்பது ஓர் அரசியல் நிகழ்வு. அங்கும் அப்படி இப்படி என்று கொஞ்சம் உண்டென்றாலும், அவற்றையெல்லாம் தூக்கி ஸ்வாஹா செய்வதுதான் தமிழ்நாடு.

ஆம், தமிழ்நாட்டில் அது ஒரு ஹை டெக் மார்க்கெட்டிங் கேம்பெய்ன். டெக்னிக்கலாகச் சொன்னால், ஒரு வாக்காளரின் மனநிலையை டிஜிட்டல் முறையில் ஹேக் செய்வது. இவ்வளவு டெக்னிக்கல் நிறைந்த அவற்றைப் பார்முலாக்கள் என்று சொல்லாவிட்டால் அவை நிச்சயம் கோபித்துக் கொள்ளும். எனவே அவை பார்முலாக்கள்தான்.

அந்த வெற்றிகரமான பார்முலாக்கள் பற்றிய ஒரு ரவுண்ட். இவை கற்பனையல்ல, தமிழ்நாட்டில் நிகழ்ந்தவைதான்.

அதில் முதன்மையானது திருமங்கலம் பார்முலா.

தமிழகத் தேர்தல் வரலாற்றில் திருமங்கலம் பார்முலா என்பது ஒரு மைல்கல். 2009 இல் மதுரை அருகே நடந்த அந்தச் சோதனையில், இரவு ஒன்பது மணிக்கு மின்சாரம் போனால், அது மின்வாரியத்தின் தவறு அல்ல, அது பணப் பட்டுவாடாவுக்கான சிக்னல். ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபாய் வரை போய் சேர்ந்த அந்தப் பொற்காலத்தை இப்போதும் மக்கள் சிலாகித்துப் பேசுகிறார்கள்.

அந்தப் பார்முலாவுக்கு முன்பே காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டியில் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்கும் தாராள பிரபு கலாச்சாரம் தொடங்கிவிட்டது வேறு விசயம். இது ஒரு வகை பார்முலா என்றால், இதன் அடுத்த வெர்ஷனான ஆர்.கே.நகர் பார்முலா அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டது. அங்கே 20 ரூபாய் டோக்கன் என்கிற ஒரு வினோதமான கரன்சியே அறிமுகமானது. டோக்கன் கடைசியில் செல்லாமல் போனாலும், வெற்றி என்னவோ செல்லுபடியானது.

கடைசியாகத் தற்போது உருவானதுதான், எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் பகாசுர ஈரோடு கிழக்கு ஃபார்முலா. இதை பட்டி பார்முலா என்றும் அழைக்கிறார்கள். வாக்காளர்களைக் கால்நடைகளைப் போல ஒரு பந்தலில் அடைத்து வைத்து, காலை முதல் மாலை வரை பிரியாணி, சினிமா, பணம் என்று கவனிப்பதுதான் இந்த பார்முலாவின் ஸ்பெஷல். மற்ற கட்சியினர் வாக்காளர்களைப் பார்க்கவே கூடாது என்கிற இந்த மேதாவிலாசம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் இடைத்தேர்தல் பார்முலாக்கள் என்று சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. இந்த பார்முலாக்களின் பட்டி டிங்கரிங் பேட்ச் ஒர்க் பார்க்கப்பட்ட வெர்ஷன்கள்தான் பணம் + பிரியாணி = ஓட்டு எனும் ஈக்குவேசனே.

மக்கள் எப்போது இதைப் புரிந்துகொள்வார்கள் என்று கேட்பதை விட, அரசியல்வாதிகள் எப்போது இதைக் கைவிடுவார்கள் என்று கேட்பது உண்மையில் மாபெரும் ஜனநாயக நகைச்சுவை.

இதில் கொடுமை என்னவென்றால், இந்தப் பார்முலா மேலும் மேலும் அப்கிரேடாகி, இப்போது தேர்தல் தேதி வரும் வரை யாரும் வெயிட் பண்ணுவதில்லை. ஹாட்பாக்ஸ், எவர்சில்வர் அண்டா, கிரிக்கெட் பேட் என அட்வான்ஸ் கிஃப்ட்கள் வீடு தேடி வருகின்றன.

ஆனால் அறிவியல் என்ற ஒன்று இருக்கிறதே. அது என்ன சொல்கிறது?

ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்று நியூட்டன் எப்போதோ எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார். ஆனால் தமிழகத் தேர்தலில், ஒவ்வொரு நோட்டுக்கும் ஒரு ஓட்டு உண்டு என்று அதை மாற்றி எழுதி வைத்து விட்டார்கள்.

நிஜமான மக்கள் பணி என்பது ஒரு ஸ்லோ ப்ராசஸர். ஆனால் இந்தப் பார்முலாக்கள் எல்லாம் குவாண்டம் கம்ப்யூட்டிங் போல வேகமானவை. மக்கள் எப்போது ரீ பூட் ஆவார்கள்? ஒருவேளை ஆகாமலே போய் விடுவார்களா?

*****

No comments:

Post a Comment