ஹோர்முஸ் எபெக்ட் – ஒரு சமையலறை அட்டாக்!
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும்
இடையில் நடக்கும் சண்டையை ஏதோ ஒரு ஹாலிவுட் ஆக்சன் படம் போல சோபா நுனியில் உட்கார்ந்து
பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், அந்தப் படத்தின் கிளைமாக்ஸில் நம் வீட்டுச் சமையல்
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
பெட்ரோல், டீசல், எரிவாயு
என ஒவ்வொன்றாக இனி ஏறப் போகும் விலையைப் பார்க்கையில் போரை நிறுத்துவதுதான் விலை மலிவான
விஷயமாக இருக்கும் போலிருக்கிறது. எரிபொருள் சிக்கனம் என்பது போய், இப்போது மூச்சு
விடுவதைத் தவிர மற்ற எல்லாச் செயல்களிலும் சிக்கனம் தேவைப்படும் காலமாகி விட்டது.
இந்தப் போரைப் பற்றி அப்பாவித்தனமாகச்
சொல்லப்போனால், இது ஏவுகணைகளின் பரிமாற்றம். டெக்னிக்கலாகச் சொன்னால், இது ஒரு சப்ளை
செயின் தற்கொலை. எப்படி என்கிறீர்களா? ஈரானில் ஒரு வெடி விழுந்தால், ஏன் இங்கே என்
சமையலறையில் சிலிண்டர் எரிய மறுக்கிறது?
விசயம் இத்தோடு முடியப் போவதில்லை.
இன்னும் கூடுதல் விசயங்களும் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
விசயம் ஒன்று என்னவென்றால்,
பிளாஸ்டிக் தண்ணீர் கேன் விலை ஏறப்போகிறது. ஏன்? பிளாஸ்டிக் என்பது அடிப்படையில் ஹைட்ரோகார்பன்.
கச்சா எண்ணெய் விலை ஏறினால், அந்த 20 லிட்டர் கேன் விலையும் ராக்கெட் வேகத்தில் ஏறும்.
தாகம் எடுக்கும்போது பெட்ரோல் குடிப்பது மலிவாக இருந்தாலும் ஆச்சரியமில்லை. நாம் குடிநீரை
அடிபம்பு மற்றும் கிணற்றிலிருந்து பெட் பாட்டிலுக்கும், கேன் வாட்டருக்கும் மாற்றியதன்
விளைவு இது.
விசயம் இரண்டு என்னவென்றால்,
உணவைச் சமைக்கத்தான் கஷ்டம் என்று பார்த்தால், விளைவிக்கவே சிக்கல். உரம் தயாரிக்கத்
தேவைப்படும் எல்.என்.ஜி அரபு நாடுகளிலிருந்து வர வேண்டும். அந்த ஹோர்முஸ் நீர்ச்சந்தி
ஒரு குறுகிய வாசல். ஈரான் அதை மூடினால், இந்திய விவசாயம் பபரிங் மோடிற்குப் போய்விடும்.
நாம் இயற்கை விவசாயத்திலிருந்து ரசாயன மோடிற்கு மாறியதற்குக் கொடுக்கும் விலை இது.
விசயம் மூன்று என்னவென்றால்,
பங்குச் சந்தை சரிவது ஒரு பக்கம் என்றால், அந்நிய முதலீட்டாளர்கள் எஸ்கேப் கீ-யை அழுத்திவிட்டு
ஓடுகிறார்கள். டாலர் எகிறுகிறது, ரூபாய் மூச்சு வாங்குகிறது. விளைவு? பணவீக்கம். நாம்
தற்சார்பை விட அந்நிய முதலீட்டை அதிகம் நம்பியதன் விளைவு இது.
தற்சமயம் அங்கே அந்த நீர்ச்சந்தியைச்
சுற்றி என்ன நடக்கிறது என்றால், இஸ்ரேல் ஈரானின் எண்ணெய் வயல்களைத் தாக்குகிறது. பதிலுக்கு
ஈரான் கத்தாரின் எரிவாயு தளங்களைச் சிதைக்கிறது. அமெரிக்கா மின்சார நிலையங்களைத் தூக்குவோம்
என்கிறது. ஈரான் நீர்ச்சந்தியை மூடுவோம் என்கிறது. இது ஒரு முடிவில்லாத லூப் ஆகி விட்டது.
ரிப்பீட் மோடில் எல்லாம் திரும்பதிரும்ப ஒரே மாதிரியாக நடக்கன்றன. இப்படி நடந்து கொண்டே
இருந்தால், சிதைந்த எண்ணெய் வயல்களை ரீபூட் செய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகும். ஆக, இந்த
ரிப்பீட் மோடுக்கு ஓர் என்ட் கார்டு அவசியம்.
இந்த வளைகுடா போரால் நிஜத்தில்
மட்டுமல்லாது, உலக மக்கள் எல்லாருடைய அன்றாட வாழ்க்கையிலும் சேர்த்து கடும் சூறாவளியில்
வாழ்வாதாரம் எனும் கப்பல் சிக்கியிருக்கிறது. கேப்டன்கள் ஆகிய ஆட்சியாளர்கள் லாவகமாகத்
திருப்பினால்தான் கரை சேர முடியும். இல்லையென்றால், நம் பட்ஜெட் சிஸ்டம் கிராஷ் ஆகிவிடும்.
*****

No comments:
Post a Comment