22 Mar 2026

டொனால்ட் டிரம்ப் – புவிஈர்ப்பு விசைக்கு ஒரு சவால்!

டொனால்ட் டிரம்ப் – புவிஈர்ப்பு  விசைக்கு ஒரு சவால்!

யாரும் பந்தயம் கட்டாதீர்கள், குறிப்பாக டொனால்ட் டிரம்புக்கு எதிராக.

2021 ஜனவரி 6-ல் அவருடைய ஆதரவாளர்கள் கேபிடல் ஹில்லுக்குள் புகுந்து கலாட்டா செய்தபோது, முடிந்தது கதை என்றுதான் உலகம் நினைத்தது. ஆனால், 2024 இல் அதைவிட அதிக வாக்குகளுடன் மனிதர் மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழையும்போது, அரசியல் புவிஈர்ப்பு விசை அவரிடம் மட்டும் வேலை செய்யாதோ என்று தோன்றுகிறது.

ஆனால், இப்போது ஒரு சிக்கல். ஈரானுக்கு எதிராக அவர் ஆரம்பித்திருக்கும் இந்த அவசரக்கோலப் போர், டிரம்ப் எனும் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கப் பார்க்கிறது. இது வெறும் போரல்ல. டிரம்பின் சூப்பர் பவர்களை மழுங்கடிக்கும் ஒரு பொறியாகத் தெரிகிறது.

டிரம்பின் மேஜிக், தனக்கென்று ஓர் உண்மையை உருவாக்கி அதை நம்ப வைப்பது. இப்போதும் நான் ஈரானில் ஜெயித்துவிட்டேன் என்றுதான் சொல்கிறார். ஆனால், தரை எதார்த்தம் வேறு. ஈரானின் உட்கட்டமைப்பு சிதைக்கப்பட்டிருக்கலாம், அலி லாரிஜானி போன்ற தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனாலும், ஈரான் அவர் சொல்வது போன்ற நிலைக்கு வரவில்லை. யுரேனியத்தை வைத்துக்கொண்டு ஈரான் இன்னமும் கண்ணாமூச்சி ஆடுகிறது.

கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலரைத் தாண்டிவிட்டது. மார்ச் 18 இல் கத்தார் எரிவாயு மையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல், சந்தையை உலுக்கிவிட்டது. இவற்றையெல்லாம் அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை.

டிரம்பின் பிரம்மாஸ்திரம், மற்றவர்களைத் தன் பிடிக்குள் வைத்திருப்பது. ஆனால் இப்போது உலக நாடுகள் உஷாராகிவிட்டன. ஹோர்முஸ் நீர்ச்சந்தியைத் திறக்க நேட்டோ நாடுகளின் உதவியை அவர் கேட்டபோது, அவர்கள் நோ சொல்லிவிட்டார்கள். உடனே, எனக்கு யார் உதவியும் தேவையில்லை என்று அந்தர் பல்டி அடித்தார் டிரம்ப்.

ஈரானும் இப்போது லிவரேஜ் அரசியலில் இறங்கிவிட்டது. எங்களுக்குப் பிடித்த நாடுகளின் கப்பல்களை மட்டும் விடுவோம் என்கிறார்கள். ஒருவேளை ஏப்ரல் இறுதி வரை இந்தப் போர் நீடித்தால், பெட்ரோல் விலை 150 டாலரைத் தொடலாம். இது ஒரு கணிப்புதான். நிலைமை அதைத் தாண்டியும் போகலாம். அதை இப்போது முன்கூட்டியே சொல்வது சிரமம். அமெரிக்கப் பொருளாதாரம் சரிந்தால் டிரம்ப் என்ன செய்வார்? ஈரானின் கார்க் தீவைக் கைப்பற்றுவாரா அல்லது பணிவாரா? இவையெல்லாம் டிரில்லியன் டாலர் கேள்விகள். அதென்ன மில்லியன் டாலரை விட்டு விட்டு இப்போது டிரில்லியன் டாலருக்கு கேள்வியை உயர்த்தி விட்டாயே என்றால், உலகப் பொருளாதாரம் அப்படி இருக்கிறது.

டிரம்பின் அசுர பலம், குடியரசுக் கட்சி அவர் கைக்குள் இருப்பது. ஆனால், போர் வரும்போது விலைவாசியும் எகிறுகிறது. அமெரிக்காவில் பெட்ரோல் விலை கலிபோர்னியா வெயிலைப் போல சுட்டெரிக்கிறது. டிரம்பின் தீவிர ஆதரவாளரான டக்கர் கார்ல்சனே இப்போது துரோகம் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். ஆகக் கட்சியில் அவரது பலத்தைப் பற்றி நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

வரும் நவம்பர் இடைத்தேர்தலில் செனட் சபையைக் குடியரசுக் கட்சி இழக்க 50 சதவீத வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. அப்படி நடந்தால், டிரம்ப் ஓர் அதிகாரமற்ற தலைவர் ஆகிவிடுவார்.

ஆனால், தோற்பது டிரம்புக்குப் பிடிக்காத விஷயம். போர் தோல்வியில் முடிந்தால், அவர் தன் கோபத்தை வேறு பக்கம் திருப்புவார். உக்ரைனைக் கைவிடலாம், நேட்டோவை விட்டு வெளியேறலாம், அல்லது மெக்சிகோ எல்லையில் அதிரடி காட்டலாம்.

உள்நாட்டிலும் மீடியாக்கள் மீது பாயத் தயாராகிவிட்டார் டிரம்ப். டிவி உரிமங்களை ரத்து செய்வேன் என்று இப்போதே மிரட்டல் ஆரம்பித்துவிட்டது. ஈரான் விவகாரத்தில் டிரம்ப் ஜெயிப்பது கடினம் என்பது போலத்தான் தெரிகிறது. உண்மை வெளிப்பட நாட்களாகும். அவர் உண்மையையும் வேறு விதமாகத் திரிப்பார்.

கடந்த காலத்தைப் பார்க்கையில் டிரம்ப் ஒரு கெட்ட வெற்றியாளராக இருந்திருக்கிறார். ஆனால் ஒரு 'மோசமான தோல்வியாளராக அவர் மாறினால், அது உலகிற்கு இன்னும் ஆபத்து. டிரம்ப் என்ன செய்யப் போகிறார்? அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைக் கணிப்பது அவருக்கே சிரமமாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

*****

No comments:

Post a Comment