22 Dec 2025

இந்திய வங்கிகள் ஏன் திவாலாகாது?

இந்திய வங்கிகள் ஏன் திவாலாகாது தெரியுமா?

எத்தனை தொழிலதிபர்கள் இந்திய வங்கிகளை ஏமாற்றி, வெளிநாடுகளுக்குத் தப்பித்து ஓடினாலும், இந்திய வங்கிகளைத் திவாலாகாமல் காப்பாற்ற ஆயிரம் கோடி ஏழைகள் காத்திருக்கிறார்கள். அவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்பதற்காக வங்கிக்குத் தண்டம் கட்டி, வாங்கிய கடனுக்கு அதிகமாக வட்டியைக் கட்டி, இல்லாத அலைபேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பியதற்கான கட்டணத்தைக் கட்டி எப்படியும் இந்திய வங்கிகளைக் காப்பாற்றிக் கொண்டு இருப்பார்கள். இந்தியாவில் ஏழைகள் இருக்கும் வரையில் இந்திய வங்கிகள் ஒரு போதும் திவாலாகாது.

*****

மாதத்தில் ஐந்து முறைதான் ஏடிஎம்மில் கட்டணமின்றிப் பணம் எடுக்க முடியும் என்பது பற்றி என்ன சொல்வது?

மக்கள் எவ்வளவு சிரமம் இருந்தாலும், எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்றாலும் வங்கிக்கு வந்து எவ்வித செலவினமும் இல்லாமல் பணத்தை எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஏடிஎம் அட்டைகளைக் கொடுத்துச் சுலபமாகக் காத்திருப்பு இல்லாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். தேநீரைக் காசுக்கு விற்பதற்கு முன்பாக இலவசமாகக் கொடுத்தார்களாம். ஏடிஎம் அட்டைகளின் கதையும் அப்படித்தான் ஆரம்பமாகியது.

இப்போது ஐந்து முறை மட்டும் கட்டணமின்றி எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். மக்களுக்கு ஐந்து முறைகளுக்கு மேல் பணத் தேவை இருக்காதா? அல்லது இருக்கத்தான் கூடாதா?

போகப் போக மூன்று முறைக்கு மேல் கட்டணமின்றி எடுக்க முடியாது என்பார்கள். பிறகு அது ஒரு முறையாகும். கடைசியில் அது பூஜ்ஜியத்தில் போய் நிற்கும்.

அவ்வளவுதான். இனி ஓசியில் டீ குடித்த காலம் முடிந்து விட்டது. காசு இருந்தால் டீயைக் குடி. இல்லையென்றால் இடத்தைக் காலி பண்ணு என்று பதாகையே வைத்து விடுவார்கள்.

*****

ஒரு நாட்டின் வறுமை நிலையை எப்படி மதிப்பிடலாம் தெரியுமா?

எத்தியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளை அங்கிருக்கும் மக்களுக்கு அடுத்த வேளைக்குச் சோறு கிடைக்கிறதா என்பதை வைத்தும், இந்தியா போன்ற நாடுகளை இங்கிருக்கும் மக்களுக்கு அடுத்த இஎம்ஐக்குப் கட்ட பணம் கிடைக்கிறதா என்பதை வைத்தும், அமெரிக்கா போன்ற நாடுகளை அங்கிருக்கும் மக்களுக்கு அடுத்த மாதம் பார்க்க வேலை இருக்குமா என்பதை வைத்தும் மதிப்பிட வேண்டும்.

*****

No comments:

Post a Comment