சில வாழ்வியல் விநோதங்கள்!
பத்திரிகை பயங்கரங்கள்!
தற்போது
பத்திரிகைகளில் செய்திகள் ஒவ்வொன்றும் பயங்கரங்களாகத்தான் இருக்கின்றன. அது ஒரு வகை
என்றால், வீட்டிற்கு அழைப்பிதழ்களாக வரும் பத்திரிகைகளும் பயங்கரமாக வருகின்றன.
ஒவ்வொன்றின்
அளவும் கட் அவுட், ப்ளக்ஸ் வைக்காத குறைக்கு அவ்வளவு பெரிதாக, பிரமாண்டமாக இருக்கின்றன.
போகிறப்
போக்கைப் பார்த்தால் இனி பத்திரிகைகளை ப்ளக்ஸ் போர்டுகளாகவே அடித்துக் கொண்டு வந்து
வீட்டுக்கு வீடு கொடுப்பார்கள் போலிருக்கிறது.
கல்யாணப்
பத்திரிகை, காது குத்தல் பத்திரிகை, மஞ்சள் நீராட்டுப் பத்திரிகை – இவற்றைப் பையடக்கமாகவோ,
கையடக்கமாகவோ அடிக்கக் கூடாதா? இவற்றைப் பையிலும் வைத்துக் கொள்ள முடியவில்லை, கையிலும்
வைத்துக் கொள்ள முடியவில்லை.
வேறு
வழியில்லாமல் பல நேரங்களில் இவற்றை வீட்டிலே வைத்து விட்டு, மண்டபம் தெரியாமல் அல்லாட
வேண்டியிருக்கிறது.
*****
குழந்தைகளைப் பயமுறுத்துவது காலந்தோறும்
எப்படி மாறியிருக்கிறது தெரியுமா?
முன்பெல்லாம்
குழந்தைகள் அழுதால் பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று பயம் காட்டுவார்கள்.
இப்போதெல்லாம்
டீச்சரிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று பயம் காட்டுகிறார்கள்.
*****
பூவுடன் சேர்ந்தால்
நாறும் மணக்கும் என்கிறார்களே!
இது எந்த அளவுக்கு
உண்மை என்றால்…
எந்த விதியாக இருந்தாலும்
அதற்கு விதிவிலக்கு உண்டு.
இதுதான் விதிகளைப் பற்றிய
மாற்ற முடியாத விதி.
மேற்படி பழமொழிக்கும் இந்த
விதி பொருந்தும்.
உதாரணத்துக்கு அறிவாளிகளுடன்
பழகுவதால் அறிவாளி ஆகலாம். பணக்காரர்களுடன் பழகுவதால் பணக்காரர் ஆக முடியாது.
*****
வாழ்க்கையில் நாம் வழமையாகக் கற்றுக்
கொள்வதை மாற்றிக் கொள்ளவும் வேண்டியிருக்கும்.
எப்படித் தெரியுமா?
வாழ்க்கையில்
கற்றுக் கொண்டதை மாற்றிக் கற்றுக் கொள்ளவும் வேண்டியிருக்கும்.
வாழ்க்கையில்
எல்லாம் ‘இப்படித்தான் – அப்படித்தான்’ என்பதாக இருக்கிறது. காலையில் சாப்பிடுவது,
மாலையில் சாப்பிடுவது, இரவில் சாப்பிடுவது, இடையிடையே பஜ்ஜி சொஜ்ஜி, தேநீர் குளம்பி,
இன்னபிற வடை, போண்டா, சமோசா என்று. ஒரு கட்டம் வரையில் இவற்றைத் தவிர்க்க முடியாது.
பசிக்கிறதோ, பசிக்கவில்லையோ? எதையாவது உள்ளே தள்ளாவிட்டால், சர்க்கரையா, கொழுப்பா,
இரத்தக்கொதிப்பா என்று மனஉளைச்சலுக்கு ஆளாக்கி விடுவார்கள் சுற்றும் சூழ இருக்கும்
நலம் விரும்பிகள்.
மூன்று
வேளையும் குழந்தைக்கு உணவூட்ட வேண்டும் என்ற தாயின் அன்பில் தொடங்கும் ‘இப்படித்தான்
– அப்படித்தான்’ என்கிற இம்முறைப்பாடுகள், தவிர்க்க முடியாத சம்பிரதாயங்களாக மாறி விடுகின்றன.
பின்பு ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தாலும்,
உடம்புக்கு ஏதும் சரியில்லையோ என்று அளவுக்கதிகமாக விசாரிக்கும் சுற்றத்தாரின்
அக்கறையில் இந்தச் சடங்கு வளர்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் இதைத்
தளர்த்திக் கொள்ள முடியும். அதுவும் அவரவர் மனது வைத்தால் மட்டுமே முடியும்.
உடல்
உழைப்பு அதிகம் தேவைப்படாத இன்றைய காலகட்டத்தில் இரு வேளை உணவே போதுமானது. அதுவும்
இதற்கு மேல் பசி தாங்க முடியாது எனும் போது சாப்பிடுங்கள். இதற்கு மேல் தாகம் தாங்க
முடியாது எனும் போது தண்ணீர் பருகுங்கள். வாழ்க்கையில் நமக்குத் தேவை எவ்வளவு கொஞ்சம்
என்பதை அப்போதுதான் உணர முடியும். எதையாவது கற்றுக் கொண்டு ஏகத்துக்கும் சம்பாதிக்க
வேண்டும் என்ற எண்ணமும் ஒழிந்து, கற்றுக் கொண்டதை வைத்துக் கொண்டு சம்பாதிப்பதே போதும்
என்கிற மனநிலையும் அப்போதுதான் வரும்.
*****

No comments:
Post a Comment