5 Mar 2025

தேர்தல் 2620 – யார் ஜெயிப்பார்? யார் தோற்பார்?

தேர்தல் 2620 – யார் ஜெயிப்பார்? யார் தோற்பார்?

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள்ளேயே இந்தத் தேர்தலில் யார் ஜெயிப்பார், யார் தோற்பார் என்ற விவாதங்கள் சூடு பரக்க ஆரம்பித்துவிட்டன.

இந்தத் தேர்தலில் அன்ட்ரோமோடோ முன்னேற்றக் கழகத்துக்கும், சேப்பியன்ஸ் வெற்றிக் கழகத்துக்கும் இடையேதான் போட்டி கடுமையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

மத்தியில் ஆட்சி செய்யும் ஸ்ட்ரெப்போ மெரிடியன் கட்சியும் தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஆண்களின் ஓட்டுகள் முக்கியமாகக் கருதப்படும் இந்தத் தேர்தலில் ஆண்களுக்கான மாதாந்திர உரிமைத் தொகை ஐந்து லட்சத்திலிருந்து பத்து லட்சமாக உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அத்துடன் ஆண்களின் ஓட்டுகளைக் கவரும் விதமாக ஆகாய விமானத்தில் ஆண்கள் இலவசமாகப் பயணிக்கும் வகையிலான பிங்க் நிற விமானங்கள் இயக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

கடந்தத் தேர்தலில் ஓட்டுகளுக்கு வழங்கப்பட்ட ரஷ்யன் ரூபிள்கள் சர்வதேச சந்தையில் பெரும் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து, இந்தத் தேர்தலில் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. வாக்காளர்களின் இப்பண எதிர்பார்ப்பை எந்த அரசியல் கட்சியானது அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பின் (எப்.பி.ஐ) கண்காணிப்புகளையும் தாண்டி சிறப்பாக விநியோகம் செய்கிறதோ, அந்தக் கட்சி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

கடந்த பல்லாண்டுகளாகத் தெருவுக்குத் தெரு திறக்கப்பட்ட மதுபானக் கடைகளால் (டாஸ்மாக்குகள்) ஆண்கள் பலரும் மறுவாழ்வு மையங்களிலும், குடிநோயாளிகளாக மருத்துவமனைகளிலும் நடமாட முடியாத அளவுக்கு வீற்றிருப்பதால், அவர்களுக்கு இருக்கும் இடம் தேடி சென்று தபால் ஓட்டுகளை வழங்க வேண்டும் என்று அன்ட்ரோமோடோ முன்னேற்றக் கழகம் விடுத்திருக்கும் கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமா என்று கேள்வியும் எழுந்திருக்கிறது. அதற்குப் பதிலாக அத்தகையோரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து வர வேண்டும் என்ற சேப்பியன்ஸ் வெற்றிக் கழகத்தின் கோரிக்கை ஏற்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

மத்தியில் ஆட்சி செய்யும் ஸ்ட்ரெப்போ மெரிடியன் கட்சியானது கைரேகை மற்றும் விழிபார்வை கருவிகள் மூலமாகத்தான் ஓட்டு போட வேண்டும் என்ற புதிய விதிமுறையைக் கொண்டு வந்திருப்பதால், அதிகம் குடித்து அதன் காரணமாக ஆல்கஹால் கைகளில் பட்டு விரல் ரேகை அழிந்தவர்களும், கள்ளச்சாராயம் குடித்து கண்பார்வை பறிபோனவர்களும் ஓட்டளிக்க முடியுமா என்ற சந்தேகத்தில் உள்ளனர். அதை விட அவர்கள் தங்களுக்கான ஓட்டுக்கான பணம் கிடைக்கப்பெறுமா என்கிற அதிருப்தியிலும் உள்ளனர்.

இவற்றையெல்லாம் தாண்டி டாக்ஸிக் சுமேரியன் கட்சியினர் ரோபோட்டுகளைக் கொண்டு கள்ள ஓட்டுப் போடுவார்கள் என்று எலியனார் அட்வான்ஸ் கட்சி சந்தேகப்படுவதிலும் நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கூட்டணிக் கணக்குகளையும் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. அன்ட்ரோமோடோ முன்னேற்றக் கழகம் இந்த முறை இங்கிலாந்தின் டெமாக்ரடிக் கட்சியுடன்தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறது. சேப்பியன்ஸ் வெற்றிக் கழகம் அமெரிக்காவின் கன்சர்வேடிவ் கட்சியுடன்தான் கூட்டணி என்று அடித்துப் பேசி வருகிறது.

மத்தியில் இருக்கும் ஸ்ட்ரெப்டோ மெரிடியன் கட்சி ஆஸ்திரேலியாவின் பிராந்திய காங்கிரஸ் உடன் கூட்டணி என்று பகீர் கிளப்புகிறது.

அரசு ஊழியர்களும் தங்களது பழைய ஓய்வூதிய வேண்டுகோளை எல்லாம் விட்டு விட்டு மாதாந்திர ஊதியம் தரும் கட்சிக்கே தங்கள் ஓட்டுகள் என்று பீதியைக் கிளப்பி வருகிறார்கள்.

கருத்துக் கணிப்புகள் செவ்வாய் கிரக மெர்க்குரி மெண்டல் கட்சிக்கே வாய்ப்பு இருப்பதாகச் சொல்கின்றன.

பிரச்சாரங்கள் துவங்கி விட்டன.

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீங்கள் நரகத்தில் இருந்தாலும், நெப்ட்யூனில் இருந்தாலும் வாக்களிப்பது உங்கள் கடமை. உங்கள் ஜனநாயகக் கடைமையை நீங்கள் சரியாக ஆற்றினானல்தான் புளுட்டோவிலாவது நல்லாட்சி அமையும்.

*****

No comments:

Post a Comment

தேர்தல் 2620 – யார் ஜெயிப்பார்? யார் தோற்பார்?

தேர்தல் 2620 – யார் ஜெயிப்பார்? யார் தோற்பார்? தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள்ளேயே இந்தத் தேர்தலில் யார் ஜெயிப்பார், யார்...