6 Mar 2025

நான் ஏன் வலைப்பதிவில் மட்டும் எழுதுகிறேன்?

நான் ஏன் வலைப்பதிவில் மட்டும் எழுதுகிறேன்?

நான் ஏன் வலைப்பதிவில் மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என்னைக் கேட்காத ஆட்களில்லை.

அப்போது எப்படி இருக்கும் என் மனம்?

கவலையெல்லாம் பட மாட்டேன். இப்படி கேட்பதற்காகவே நான்கு பேர் இருக்கிறார்களே என்ற சந்தோசம்தான், உண்மையை எல்லார் முன்னிலையிலும் போட்டு உடைத்து விடுவது என்ற துணிச்சலைத் தந்தது.

நானும் எவ்வளவோ பேரிடம் எழுத வாய்ப்பு கேட்டுப் பார்த்தேன். அவர்களுக்குப் பிடித்த மாதிரியெல்லாம் எழுதித் தருவதாக வாக்களித்தேன்.

எனக்கு எழுத வாய்ப்பு தருவதில் அவர்களுக்குச் சிரமங்கள் இருந்தன. ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்த பிரபல எழுத்தாளர்கள் இருந்தார்கள். என்னைப் போல எழுதுவதற்கு வரிசைகட்டிக் காத்திருந்தவர்கள் ஏரளமாக இருந்தனர்.

யாருக்கு வாய்ப்பு கொடுப்பது? யாருக்கு வாய்ப்பு கொடுக்காமல் தவிர்ப்பது?

பத்திரிகையின் விற்பனை முக்கியமானது. நான் எழுதுவதால் விற்பனை கூட வேண்டும். அதெல்லாம் கனவிலும் நடக்க சாத்தியமில்லாதவை.

பத்திரிகைகள் படிக்க தற்போது யார் விரும்புகிறார்கள்? புலனத்தில் (வாட்ஸ்ஆப்) நான்கு வார்த்தைகள் கூடுதலாக இருந்து விட்டால், அதற்காகவே அதைப் படிக்காமல் புறக்கணித்து விடுவார்கள்.

நான் எழுதுகிறேன் என்று யாரிடம் சொல்லி பத்திரிகை படிக்க வைப்பது? அது சிரமமானது. அதை விட நான் எழுதாமல் இருப்பது சுலபமானது.

பத்திரிகை விற்பனையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லாத இந்தக் கால கட்டத்தில் என்னுடைய இளம் பிராயத்தில் எழுத வாய்ப்பளித்தவர்களை நான் நன்றியோடு நினைத்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்தவர்கள் விவரம் வருமாறு,

ஐந்து வகுப்பு வரை காப்பி நோட்டு எழுத வாய்ப்பளித்த ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கிறேன். வினா விடை எழுதி வர வாய்ப்பளித்த ஆசிரியர்களை எண்ணிப் பார்க்கிறேன். செய்முறை குறிப்பேடுகள் எழுதி வரச் சொன்ன ஆசிரியர்களை மனநிறைவோடு யோசித்துப் பார்க்கிறேன்.

ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வெழுத வாய்ப்பளித்த பள்ளி நிர்வாகங்களை, அரசு தேர்வு துறையை, பல்கலைக்கழகங்களை கண்ணீர் மல்க நினைத்து நினைத்து நெஞ்சு உருகிப் போகிறேன்.

இனி யார் எனக்கு எழுத வாய்ப்பு தரப் போகிறார்கள்?

எங்களூர் சிலுக்குப்பட்டியார் மளிகைக் கடை அண்ணாச்சி கணக்கு வழக்கு எழுதித் தர வாய்ப்பு தருவதாகச் சொல்கிறார். அந்த வாய்ப்போடு பிள்ளைகள் வீட்டுப்பாடங்களை எழுதித் தருமாறு அவ்வபோது எழுதுவதற்கு வாய்ப்பு தருகிறார்கள்.

மனைவி உப்பு, புளி, மிளகாய், சீனி, சீரகம் என ரோக்கா எழுத வாய்ப்பு தருகிறாள்.

அம்மா 1008 முறை ஸ்ரீராமஜெயம் எழுத வாய்ப்பு தருகிறாள்.

அப்பா அவ்வபோது சிநேகிதர்களின் விலாசங்களையும், தொடர்பு எண்களையும் அவரது நாட்குறிப்பில் எழுத வாய்ப்பு தருகிறார்.

யாருக்காவது பிறந்த நாள், திருமண நாள், கருமாதி என்றால் கவிதை எழுத வாய்ப்புகள் வருகின்றன. காதல் கவிதை எழுதித் தரக் கேட்டு வருவதை மட்டும் தயவு தாட்சண்யமின்றி நிராகரித்து விடுகிறேன். அடி வாங்கும் அளவுக்கு நாற்பதைக் கடந்த உடலில் தற்போது தெம்பில்லை.

அதற்கு மேல் என்ன செய்வது என்று யோசித்த போதுதான், கூகுள்காரன் நீ என்ன வேண்டுமானாலும் எழுதித் தள்ளு என்று வலைப்பதிவு (ப்ளாக்ஸ்பாட்) வசதியை ஏற்படுத்திக் கொடுத்தான். நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே நான் ஏன் வலைப்பதிவு எழுதுகிறேன் என்பது.

நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருந்தால் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பது குறித்து பரிசீலியுங்கள். என் நிலையைப் பார்த்து எனக்காகவே நீங்கள் ஒரு பத்திரிகை ஆரம்பிப்பது என்றாலும், அந்த முழு பத்திரிகையையும் தனி ஒருவனாக எழுதித் தரவும் காத்திருக்கிறேன். அதெல்லாம் முடியாது என்றாலும் மனதைத் தளரவிட்டு விடாதீர்கள். நாம் வலைப்பதிவிலேயே பார்த்துக் கொள்வோம்.

*****

No comments:

Post a Comment

நான் ஏன் வலைப்பதிவில் மட்டும் எழுதுகிறேன்?

நான் ஏன் வலைப்பதிவில் மட்டும் எழுதுகிறேன்? நான் ஏன் வலைப்பதிவில் மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என்னைக் கேட்காத ஆட்களில்லை. அப்ப...