சமகால தேவதைகளுக்கு அழகுக் குறிப்புகள்
அவர்கள் ஆசைப்படுகிறார்கள். அவர்கள்தான் சமகால தேவதைகள். இருந்து
விட்டுப் போகட்டும். வேறு யாரேனும் ஆசைப்பட்டால் அதே பொருள்பட சமகால அப்சரஸ் என்ற ஒரு
பட்டம் கையிருப்பில் இருக்கிறது, பார்த்துக் கொள்ளலாம்.
அவர்கள் தேவதைகள்தான். பெண்கள் என்ற சொல் தேவை கிடையாது. தேவதைகள்
என்ற சொல் போதுமானது. இரண்டில் ஒரு சொல் குறைவது அவர்களுக்குச் சிலாகிப்பையும் ஞாபத்தில்
ஒன்றை விடுவதற்கு வசதியாகவும் இருக்கும்.
எவ்வளவு சொற்கள் மனதில் போட்டுப் பூட்டிக் கொள்ள. சமகால தேவதை
எனும் போது முற்கால தேவதை, பிற்கால தேவதை போன்ற தேவையற்ற குழப்பங்கள் உண்டாகத்தான்
செய்யும். சமகால என்ற சொல்லே அனைத்துக் காலத்திற்குமான சொல்லாகப் பாவிப்பது எவ்வளவோ
நல்லது.
அதென்ன முற்கால, பிற்கால? அவரவர் வாழும் காலத்தில் எல்லாம் சமகாலம்தான்.
அதனால் அந்தந்தக் காலத்து அவர்கள் அந்தந்த காலத்து சமகால தேவதைகள்.
ஆண்டு பிரச்சனை ஒன்று இருப்பதால் நாம் சமகால தேவதை 2000, சமகால
தேவதை 2001, சமகால தேவதை 2022 என்று கூட வைத்துக் கொள்ளலாம். உலக அழகி, பிரபஞ்ச அழகி
போன்றவற்றில் இது போன்ற நடைமுறையைத்தான் பின்பற்றுவதால் அவர்கள் தொடர்பான தேவதை என்பதிலும்
இந்த முறையைப் பின்பற்றலாம். வேறு சிறந்த முறைகளையும் பரிசீலிக்கலாம்.
அவர்கள் ஒவ்வொருவரையும் சமகால தேவதை என்று குறிப்பிடும் போது
ஒரே ஆண்டை வைத்து அனைவரையும் குறிப்பிடப் போய் அது காலக் குழப்பத்தின் குழப்பமற்ற தன்மைக்காகப்
பெயர்களின் குழப்பமான நிலைக்கு தண்டவாளத்தை அமைத்துக் கொடுத்து விடலாம்.
இதற்கு சமகால தேவதை என்று குறிப்பிட்டு வருடத்தைக் குறிப்பிட்டு
அத்துடன் அவர்களின் ஆதார் எண்களையும் குறிப்பிட்டு விடலாம். இதில் இன்னொரு அந்தரங்க
சுத்தியுடன் கூடிய நன்மை இருக்கிறது. அதாவது பிற பாலினர் யாரேனும் சமகால தேவதை என்று
அழைக்கப்படுவதை ஆதார் எண்களைக் கொண்டு தடுத்து விடலாம்.
தேவதைகள் போல்தான் அவர்கள் என்பதை விட அவர்கள் தேவதைகள்தான்.
ஆண்கள் எனும் விறகு வெட்டிகளாம் பொருளாதாரம் எனும் மரத்தை வெட்டும் போது நம் திறமை
எனும் கோடரி தவறி சமுதாய குளத்தில் விழுந்து விடுகிறது. அதைத் தங்க கோடரிகளாகவும்,
வெள்ளி கோடரிகளாகவும், பித்தளை கோடரிகளாகவும் சமயங்களில் பயன்படுத்திய அதே இரும்பு
கோடரிகளாகவும் எடுத்துத் தருபவர்கள் அவர்கள். கோடரிகள் என்பதை மரம் வெட்டும் பல்வேறு
நவீன கருவிகளின் ஏதோ ஒன்றின் வடிவமாகவும் பாவித்துக் கொள்ளலாம். அது சமகாலத்தை நோக்கிய
முன்னேற்றத்தைக் காட்டக் கூடியது. இருந்தாலும் கோடரி என்பது எக்காலத்துக்குமான குறியீடு.
அவர்கள் முதலில் தங்கக் கோடரிகளை எடுத்துத் தரும் போது அது தன்னுடைய
கோடரி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும். அடுத்ததாக வெள்ளிக் கோடரியை
எடுத்துத் தரும் போது அழுத்தம் திருத்தமான உண்மை எதிர்பார்க்கப்படும். பித்தளை கோடரிக்கும்
இதேதான். உண்மையான இரும்பு கோடரி வரும் போதுதான் அது தன்னுடைய கொடரி என்பதை எடுத்துச்
சொல்ல வேண்டும். அதுவும் திரும்ப திரும்ப சொல்ல வேண்டும். நம்முடைய கோடரியைத்தானே நாம்
நம் கோடரி என்று திரும்ப திரும்ப சொல்ல முடியும்.
தேவதைகளுக்குப் பிடித்தது உண்மை என்பதால் அவர்களுக்கும் அதுவேதான்
பிடிக்கும். அவர்களிடம் உண்மையைச் சொல்வது முக்கியம். தங்கக் கோடரிகள் வேண்டுமென்றால்
உண்மையைச் சொல்வது முக்கியம். உங்கள் கோடரியே உங்களுக்குப் போதுமென்றால் நீங்கள் பொய்யைச்
சொல்லிக் கொள்ளலாம்.
உங்கள் கோடரியே உங்கள் கைக்கு வந்து என்ன பயன்? ஆதலால் பொய்மையைத்
தவிர்த்து பெண்மையிடம் உண்மையைச் சொல்ல பழகுங்கள். தங்கக் கோடரிகள் அங்கேதான் இருக்கின்றன.
சமகாலத் தேவதைகளிடமிருந்து தங்கக் கோடரிகளைப் பெற உண்மையைச் சொல்லுங்கள்.
உங்கள் சமகாலத் தேவதை தேவதையாக இல்லாமலும் போகலாம். அந்த ஓர்
இடத்தில் மட்டும் பொய்மையும் வாய்மை இடத்து என்பது போல பொய்மையைச் சொல்லுங்கள். தேவதைகள்
என்றே சொல்லுங்கள். ஏனென்றால் அது உண்மைக்குச் சமமானது.
எல்லாரும் தேவதைகளாகவே பிறந்தார்கள். பிசாசுகளாக ஆக்கப்பட்டவர்கள்
இருக்கிறார்கள். அழகான தேவதைகளாக இருந்தவர்கள் அவர்கள். மீண்டும் அழகான தேவதைகளாகத்தான்
அவர்கள் காத்திருக்கிறார்கள். உங்களின் அன்பின்மைதான் தேவதைகளைப் பிசாசுகளாக்கியது.
உங்கள் அன்பே அவர்களை மீண்டும் தேவதைகளாக்கும். உங்கள் சிறு துளி அன்பைப் பெற்றுக்
கொண்டு அந்தத் தேவதைகள் வழங்கும் அன்பு பெருமழையைப் போன்றது.
பிசாசுகளாக இருந்தாலும் பிசாசு என்ற உண்மையைப் பிசாசுகள் கூட
விரும்பாது. பிசாசுகளாக இருந்தாலும் தேவதை என்ற பொய் பிசாசுகளையும் தேவதைகளாக ஆக்கும்.
ஆக எல்லாரும் சமகாலத்தின் தேவதைகள்தான். அவர்கள் பிசாசுகளாக இருப்பது கூட தேவதைகளாக
மாறி ஆசீர்வாதம் செய்வதற்காகத்தான். உங்களது சிறு அன்பில் அந்த மாயாஜாலம் நிகழ்கிறது.
ஆயிரம் பொய்களால் ஒரு பிசாசு தேவதையாகலாம். ஒரே ஒரு பொய்யினால்
ஒரு தேவதை கூட பிசாசு ஆகி விடக் கூடாது. ஆகவே யாவரும் சக காலத்தின் தேவதைகளே. அவர்களுக்கு
வார்த்தைகள் காணிக்கை. வாழ்க்கை சமர்ப்பணம்.
ஆண்களை உபயோகமானவர்களாகவும் உருப்படியானவர்களாகவும் ஆக்குவது
அந்தச் சமகால தேவதைகளின் கைகளில் இருக்கின்றன. அவர்களின் கைகளில் ஒப்படைத்துக் கொள்ளுங்கள்.
மற்றவற்றை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
அவர்களை அவ்வபோது சமகால தேவதை என்று அடிக்கடி குறிப்பிடுவது
அவசியமானதாகும். இதற்கென உங்கள் வீட்டைக் கூட என் சமகால தேவதையின் வீடு அல்லது மாளிகை
என்று எழுதி வைக்கலாம். இது உங்கள் வீட்டிற்கு விநோதத்தைத் தரும். கூடவே எல்லையற்ற
ஆனந்தத்தையும்.
நீங்கள் கவிதை எழுதத் தெரிந்தவர்களாக இருந்தால் இன்னும் நல்லது.
இந்த கவிதைப் புத்தகம் என் சமகால தேவதைக்கு சமர்ப்பணம் என்று முதல் பக்கத்தில் அச்சடிக்க
வைக்கலாம்.
உங்கள் வாகனங்களில் கூட என் சமகால தேவதை ரீது குட்டி, கீது குட்டி
என்பது மாதிரி எழுதி வைக்கலாம்.
அவர்களின் எதிர்பார்ப்பெல்லாம் நம் சமகால தேவதை அவர்கள்தான்
என்பதை இந்த உலகுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும் என்பதுதான். நீங்கள் கூச்ச சுபாவம்
இல்லாதவர் என்றால் இதற்கென ஒரு அறிவிப்பைக் கூட ஊர் முழுக்க செய்ய சொல்லி ஏற்பாடு செய்யலாம்.
கூச்ச சுபாவம் இருப்பவர்கள் முக்கிய இடமெங்கும் சுவரொட்டியோ
பிளக்ஸோ வைத்தோ கூட தங்கள் உள்ளிருப்பதை உலகுக்கு வெளிப்படுத்தலாம்.
நான் பார்க்குமிடம் எங்கும் என் சமகால தேவதையே என்று கூறிக்
கொண்டே இருக்கிறேன். இதனால் தேவதைகளை விட இன்னும் அழகானவர்களாக ஆகி விடுகிறார்கள்,
பியூட்டி பார்லருக்கான செலவு இல்லாமல்.
நம் பாராட்டுகளே தேவதைகளை அழகு படுத்துகின்றன. அதை விட நமக்கு
வெறென்ன வேலை இருக்கிறது? அதாவது அழகுபடுத்துவதை விட அற்புதமான வேறு வேலை இந்த உலகில்
என்ன இருக்கிறது?
ஆண்களைப் போலவா? ஆண்களை அழகுபடுத்துவது அந்தத் தேவதைகள். அவர்கள்
அந்தத் தேவதைகள் அழகுபடுத்த வேண்டியவர்கள். ஒரே முறை அழகுபடுத்தினாலும் அந்த அழகின்
நினைவில் வாழ்க்கை முழுவதையும் அழகுபடுத்துபவர்கள் அவர்கள். அழகுபடுத்த படுத்த அவர்கள்
பேரழகு, பேரழகின் தேவதைகள் என்றாலும். தேவதையே என்றழைக்கும் ஒற்றைச் சொல்லில் அவர்கள்
அவ்வளவு அழகு.
*****
No comments:
Post a Comment