13 Jun 2022

நூறு நாள் வேலைத் திட்டம் – ஒரு கனவின் உரைகல்

நூறு நாள் வேலைத் திட்டம் – ஒரு கனவின் உரைகல்

            பெரும்பான்மை மக்களை உழைப்பில் ஈடுபடுத்துவது காந்தியின் கனவு. கனவு எப்போதும் கனவாக இருந்து விடாது. அது ஒரு நாள் நிஜமாகும். அப்படி காந்தியின் கனவு நினைவான திட்டம்தான் நூறு நாள் வேலைத் திட்டம்.

            கிராமத்தின் பெருவாரியான மக்களை உழைப்பில் ஈடுபடுத்தி ஊதியம் கொடுக்கும் திட்டம் நூறு நாள் வேலைத் திட்டம். நூறு நாளில் அந்த மக்கள் செய்யும் பணியை சில நாட்களில் சில இயந்திரங்கள் செய்து விடும். ஆனாலும் மக்களைப் பெரும்பான்மையாகப் பணியில் ஈடுபடுத்தும் உலகின் மிகப் பெரிய திட்டம் இதுவாகத்தான் இருக்கும். அதே போல உலகின் மிகப் பெரிய அளவில் மக்களைத் திரட்டி ஊழலில் ஈடுபடுத்தும் திட்டமும் இதுவாகத்தான் இருக்கும்.

            உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால் நீங்களே இதைச் சோதித்துக் கண்டறியலாம். நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபடும் தலைகளின் எண்ணிக்கைக்கும் ஊதியம் வழங்கப்படும் தலைகளின் எண்ணிக்கைக்கும் ஒரு வித்தியாசம் இருக்கவே செய்யும். ஒவ்வொருவரும் வேலை பார்க்கும் நேரம் மட்டுமல்ல அளவும் வேறுபடும்.

            வாங்குகின்ற சம்பளத்திற்கு உழைக்க வேண்டும் என்று நினைக்கும் மக்களுக்கும் எப்படி சாமர்த்தியமாக ஏமாற்றுவது என்பதை இந்தத் திட்டம்தான் தற்போது இந்தியா முழுக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

            உங்களுக்குச் சாமர்த்தியம் உண்டென்றால் வேலைக்கு ஆஜராகி விட்டு ஒரு வேலையையும் செய்யாமல் ஊதியத்தை வாங்கி வந்து விடலாம். நீங்கள் அதிசாமர்த்தியசாலி என்றால் வேலைக்குச் செல்லாமலே மேற்பார்வையாளருக்கு ஒரு தொகையை வெட்டி விட்டு வீட்டில் இருந்தபடியே ஊதியத்தை வாங்கிக் கொள்ளலாம். சும்மா இருப்பதற்கு ஊதியம் கொடுக்கும் இப்படி ஒரு திட்டம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்.

            எழுந்து நடமாட முடியாதவர்கள் கூட இந்தத் திட்டத்தில்தான் எழுந்து வந்து வேலை பார்த்து விட்டுப் போகிறார்கள். அரசியல்வாதிகள் மட்டும் ஊழல் செய்கிறார்கள் என்று இன்னும் எத்தனை காலத்துக்கும் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறோம், ஆகவே மக்களையும் ஊழல் பங்காளிகளாக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம் போல இத்திட்டத்தை எல்லாரும் சேர்ந்து எப்போதோ மாற்றி விட்டார்கள்.

            அரசாங்கமாக இருந்தாலும் தனியார் துறையாக இருந்தாலும் கொடுக்கின்ற ஊதியத்திற்கு வேலையை வாங்குகின்ற நிர்வாகம் இருக்க வேண்டும். அரசாங்க நிறுவனங்கள் எப்போதும் இதில் காட்டும் மெத்தனம் சொல்லி மாளாது. தனியார் நிறுவனங்கள் என்றால் சொல்ல வேண்டியதில்லை, ஊதியத்துக்கு ஏற்ற வேலை வாங்காத நிறுவனங்கள் தானாகவே திவாலாகி விடும்.

            அரசாங்க நிர்வாகத்தில் பொதுவாகக் காணப்படும் அலட்சியமும் மெத்தனமும் நூறு நாள் வேலைத் திட்டத்திலும் காணப்படுகிறது. மக்கள் உழைக்க தயாராகத்தான் இருக்கிறார்கள். அவர்களைச் சரியாக நிர்வகிக்க தெரியாவிட்டால் அவர்கள் வீணாவதுடன் ஒரு நல்ல திட்டமும் வீணாகக் காரணமாகி விடுகிறார்கள்.

            நூறு நாள் வேலைத் திட்டத்தின் நிர்வாகங்கள் மெத்த படித்த தகுதி வாய்ந்தோர்களிடமும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை வாய்ந்த பிரதிநிதிகளிடமும்தான் இருக்கின்றன. அவர்கள்தான் இந்தத் திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துவதற்கு முழு பொறுப்பு.

            ஒரு திட்டத்தை நன்முறையில் செயல்படுத்துவதற்கு முழு முனைப்பும் காட்டாமல் ஒவ்வொரு திட்டத்திலிருந்தும் எவ்வளவு உருவலாம் என்பதற்கு முனைப்பு காட்டும் நிர்வாகிகள் அரசியல் தலைமைகள் இருக்கும் வரையில் அந்தத் திட்டம் தொடர்புடைய அத்தனை பேரையும் கறை படிந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்களாக்கி விடும்.

            நூறு நாள் வேலைத் திட்டத்தின் தோல்வியை மக்களின் தோல்வியாக மட்டும் சொல்ல முடியாது. எவ்வளவு வேலை நடந்திருக்க வேண்டும் என்ற கணக்கை விட எவ்வளவு பணம் அவரவர் கல்லாவில் சேர்ந்திருக்க வேண்டும் என்ற கணக்கைத் துல்லியமாகப் போடும் மேற்பார்வை மற்றும் மேல்மட்ட நிர்வாகங்களால் உண்டான தோல்வியாகச் சொல்ல வேண்டும்.

            ஊழல் செய்வது மேல் உள்ளவர்களின் பிறப்புரிமை போல தார்மீக உரிமை போல இந்த நாட்டில் ஓர் எழுதப்படாத சட்டம் இருக்கலாம். இருந்து விட்டுப் போகட்டும். அதற்குப் பங்காளியாக மக்களையும் ஆக்காதீர்கள்.

            மக்களின் நேர்மையையும் உழைப்பையும் ஏமாற்றுத்தனத்துக்கு விலை பேசி தவறான பழக்க வழக்கங்களை உண்டு பண்ணி விடாதீர்கள். ஏற்கனவே ஓட்டை அவர்களிடம் ஏலம் விட்டு விலை பேசியது போதும். ஒரு சமுதாய மாற்றம் மற்றும் முன்னேற்றத்திற்கான திட்டத்தை வளர்ச்சிக்குப் பின்னோக்குத் திட்டமாக, ஊழல்மயத்திற்கு முன்னோக்குத் திட்டமாகச் செயல்படுத்தி விடாதீர்கள்.

            ஒரு திட்டம் நல்லது ஆவதும் கெட்டது ஆவதும் வேறெந்த திட்டத்திற்கு நிகழ்ந்தாலும் பரவாயில்லை. அடிப்படையில் ஒரு நல்ல திட்டமான நூறு நாள் வேலைத் திட்டம் கெட்டது ஆவது இந்தத் தேசத்திற்கு ஒரு போதும் நல்லதில்லை.

            இதுவரை இருந்த குறைகள், நடந்த முறைகேடுகள் போகட்டும். இனிமேல் எவ்வித குறைகளுக்கு இடமில்லாமல், முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லாமல், எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் இந்தத் திட்டத்தை எப்படியெல்லாம் செயல்படுத்தலாம் என்பதைத் தார்மீகப் பொறுப்பாக உணர்ந்து நேர்மையாகச் செயல்படுத்துங்கள் மேல் உள்ள எம் நிர்வாக வர்க்கங்களே.

            ஏழை மக்கள் மேற்பொறுப்பில் உள்ளவர்களை நம்பி இருக்கிறார்கள். அந்த மக்களை நல்லவர்களாக்குவதும் உழைப்பில் வல்லவர்களாக்குவதும் மேற்பொறுப்பு மானிடர்களே உங்களிடம்தான் இருக்கிறது. நீங்கள் நல்ல மனதோடும் நேர்மை திடத்தோடும் இருக்க வேண்டும் இந்த நாடும் இந்த மக்களும் முன்னேற.

            மற்றொன்று சொல்வதற்கு என்னவென்றால் மேல் வர்க்கங்களே உங்கள் ஊழலால் உங்களின் ஒரு தலைமுறை நன்றாக இருக்கலாம். ஆனால் உங்கள் ஊழலற்ற நேர்மையால் பல தலைமுறைகள் பல தலைமுறைகளுக்கு நன்றாக இருக்கும்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...