12 Jun 2022

தலைவியுடன் சண்டையிடுதலும் சமாதானம் ஆதலும்

தலைவியுடன் சண்டையிடுதலும் சமாதானம் ஆதலும்

            சமயத்தில் தலைவிக்கும் எனக்கும் சண்டை வந்து விடும்.

            அது யார் தலைவி? எந்த அரசியல் கட்சியின் தலைவி?

            என் மனைவிதான் தலைவி. அவரை நான் அப்படித்தான் அழைப்பது. நான் மட்டுமல்ல இலக்கியத்திலும் அப்படி அழைக்கிறார்கள். இதனால் நான் மட்டுமே அப்படி அழைப்பதாக நினைத்து விடக் கூடாது.

            குறிப்பாகச் சங்க காலத்தில் தலைவர்கள் (கணவர்கள்) மனைவிமார்களை அப்படி அழைத்திருக்கிறார்கள். நான் அழைப்பதில் தவறென்ன இருக்க முடியும்?

            சண்டை விசயத்திற்கு வந்து விடுவோம்.

            கோபம் ரொம்ப முற்றி விட்டால் எனக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாது என்பாள், கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும் என்பது போல.

            எதற்கெடுத்தாலும் காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டு ஓடுகின்ற என்னிடமே இப்படிக் கேட்கிறாயா என்று நானும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

            நான் அந்த வெந்நீரைச் சொல்லவில்லை என்பாள்.

            வேறெந்த வெந்நீரைச் சொல்கிறாய் என்பேன் நானும் விடாமல். எதற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் சொல்லுங்கள். நம் உரிமையை எப்போதும் விட்டுக் கொடுத்தாக வரலாறு இருக்கக் கூடாது.

            வெந்நீர் தெரியாதா வெந்நீர்? என்று தலையில் அடித்துக் கொள்வாள்.

            நீதானே சொன்னாய் எனக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாது என்று.

            அதான் சூடா கொடுப்பேனே அடிக்கடி என்று கடுகடுப்பாள்.

            டீ மாதிரியா? காப்பி மாதிரியா? புரியும்படி சொல்லக் கூடாதா என்பேன்.

            படுத்தாதீங்க. வெந்நீர் தெரியாத மாதிரி பேசிக்கிட்டு என்று மண்டையில் குட்ட வருவாள்.

            அடுப்புல வைப்பாங்கல்ல அதுவா? என்று சாமர்த்தியமாகத் தப்பிக் கொண்டே நான் கேட்பேன்.

            அட ராமா. கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்பாள்.

            அவ்வளவுதான் சண்டை.

            இப்படியாக கிருஷ்ணகிரியைக் கிழித்து விடுவதுடன் எங்கள் சண்டை முடிவு பெற்று விடும்.

            இது தவிர டீ சண்டை, குழம்பு சண்டை, பொரியல் சண்டை, தயிர் வடை சண்டை, கூட்டு சண்டையும் போட்டிருக்கிறோம். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். இப்போதைக்கு இந்தச் சண்டை போதும் என்று நினைக்கிறேன்.

            நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சித்துப் பாருங்கள். ரெசிபி நன்றாக இருந்தால் நான்கு பேருக்கு ஷேர் பண்ணுங்கள். ஏதோ நம்மால் முடிந்த நல்லது.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...