பலூனும் காரும் விமானமும் ஒரு விலை
பலூன்களை வாங்கச் சொல்வதைப் போலத்தான்
குழந்தைகள்
கார்களையும் வாங்கச் சொல்கிறார்கள்
அவர்களின் உலகில்
பலூன்களின் விலையும் கார்களின் விலையும்
ஒன்றென்பதை
கார்க்காரர் நம்ப மறுக்கிறார்
ஒரு பஞ்சு மிட்டாய்க்காரர் வந்து
பலூன் விலைக்கு
பிங்க நிற பஞ்சு மிட்டாயைத் தந்து விட்டுப் போகிறார்
கார் வாங்க முடியாத ஏக்கத்தில்
நின்றிருக்கும் குழந்தைக்கு அருகில்
பொம்மைக்காரர் வந்து
சற்றே பேரம் பேசி படிந்த விலையில்
காரொன்றைக் கொடுத்து விட்டுப் போகிறார்
நம்பிக்கைப் பிரவாகிக்க
குழந்தையின் மனதில் இப்போது
வானில் பறக்கும் விமானத்தை வாங்கும்
ஆசை பிறக்கிறது
சட்டெனத் தோன்றி மறையும் மின்னலென
*****
No comments:
Post a Comment