கால எந்திரக் கடிதங்கள்
படிக்காத கடிதங்கள் போலில்லை
பேசாத பேச்செல்லாம்
பேச வைத்து விடும் அலைபேசி
சமயத்திற்குத் தகுந்தாற்
போல்
சாமர்த்தியமாய் பேசத் தெரியும்
சமயோசிதம் வேண்டும்
அலைபேசியோடு அலைகையில்
தவிர்க்க விரும்பும் பேச்சுகளை
சைகை சரிவரக் கிடைக்கவில்லையென
கழுவி ஊற்றி நழுவிக் கொள்ள
வேண்டும்
ரொம்ப நாளாய் பேசவில்லை என்றால்
புதிதாய் மாற்றிய அலைபேசியால்
எண்ணைத் தொலைத்து விட்டதை
நாசுக்காய்க் குறிப்பிட வேண்டும்
காரியம் ஆக வேண்டும் என்றால்
நான்கு நாட்களுக்கு முன்பாக
குட் மார்னிங் செய்தி போடத்
துவங்கி விட வேண்டும்
எல்லாருக்கும் அழைப்புகள்
வரும் போது
எனக்கு அதிசயமாய்க் கடிதங்கள்
வரும்
அன்பைக் காற்றில் கலைய விடுவதினும்
காகிதங்களில் உறைய வைப்பது
கால எந்திரமின்றி பின்னோக்கி
பயணித்து விட்டுத் திரும்புவது
போலிருக்கிறது
*****
No comments:
Post a Comment