மூர்க்கர்களின் சண்டைகள்
நாம் நினைப்பது போல
எதிரிகள் மட்டுமா
நண்பர்களும் சண்டை போட்டுக்
கொள்கிறார்கள்
ஒரு புள்ளி விவரம் சொல்வது
என்னவென்றால்
எதிரிகளோடு நடக்கும் சண்டைகள்
குறைவு
நண்பர்களோடு நடக்கும் சண்டைகள்
அதிகம்
எதிரிகளைத் தாக்கும் ஆயுதங்கள்
மூர்க்கம் குறைந்தவை என்கிறார்கள்
ஆயுத வல்லுநர்கள்
அப்படியானால் நண்பர்களைத்
தாக்கும்
ஆயுதங்கள் பற்றி முடிவு செய்து
கொள்ளுங்கள்
நாம் இதைப் பற்றிப் பேசிக்
கொண்டிருந்தால்
உறவுகளோடு நடக்கும் சண்டைகள்
இன்னும் மூர்க்கமானவை என்கிறார்
வாழ்ந்து கெட்ட வயலூர் தாத்தா
ஒரு கையால் வெட்டுப்பட்ட
கையைத் தடவியபடி
உண்மையா என்றால்
அபிமன்யுவிடம் கேட்டுப்பார்
பீஷ்மர் தலையாட்டுவார் பதில்
சொல்ல மாட்டார் என்கிறார்
*****
No comments:
Post a Comment