கடவுளாக வரம் தரப்படுவதில்
சாகாதிருக்க வரம் கேட்டார்
பிறகேன் பிறந்தாய் என்றார்
கடவுள்
தோற்காதிருக்க வரம் கேட்டார்
பிறகேன் முயன்றாய் என்றார்
கடவுள்
கலங்காதிருக்க வரம் கேட்டார்
அதையேன் நினைந்தாய் என்றார்
கடவுள்
முப்பொழுதும் மகிழ்வோடிருக்க
வரம் கேட்டார்
அதையேன் மறந்தாய் என்றார்
கடவுள்
பேரின்பமாவது வேண்டும் என்றார்
அப்படியிருப்பதில் கஷ்டமென்ன
என்றால் கடவுள்
கேட்டுக் கேட்டு ஏமாந்த சலிப்பில்
நான் நீயாக வேண்டும் என்றார்
கேட்பதை முதலில் நிறுத்து
என்றார் கடவுள்
வரம் கேட்டவர் புரியாமல்
விழித்தார்
கடவுள் யாரிடமும் வரம் கேட்பதில்லை
கடவுளாக வரம் வழங்கப்படுவதில்லை
என்றார் கடவுள்
*****
No comments:
Post a Comment