நமக்கு நாமே விரோதமாதல்
புதிது புதிதாகச் சாலை போடுகிறார்கள். புதிது புதிதாகக் கட்டடம்
கட்டுகிறார்கள். எல்லாம் மனிதர்களின் தேவைகளுக்காக. மனிதர்கள் என்பதால் எப்போதும் மனித
நெருக்கடிகளை மட்டும் யோசித்துக் கொண்டு அத்தோடு விட்டு விடுகிறார்கள்.
மனிதர்கள் வாழ்வதற்கு இயற்கையின் ஒத்துழைப்பு வேண்டும் என்பதை
மனிதர்கள் மறந்து விடுகிறார்கள். இதற்கான கூட்டுப் பொறுப்பும், ஒருங்கிணைந்த திட்டமிட்ட
செயல்பாடுகளும் அவசியம் தேவையான ஒரு காலக் கட்டத்தில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்களுக்கான சாலைகளும், கட்டடங்களும் நீர் நிலைகளின் பாதைகளை
அடைத்துக் கொள்வதால் நீர் நிலைகள் தங்கள் பயணத்தை நிறுத்தி விடுமா என்ன? மனிதர்களுக்குச்
சாலைகளும் கட்டடங்களும் தேவைப்படும் அளவுக்கு நிலமும் நீரும் காற்றும் தேவை. தேவையென்றால்
மனிதர்கள் வாழத்தக்க வகையில் தூய்மையாகவும் தேவை. மாசடைந்த நிலத்திலும் மாசடைந்த நீரிலும்
மாசடைந்த காற்றிலும் மனிதர்கள் எப்படி வாழ முடியும்?
நீரோடுவதற்கும் நீர் தேங்குவதற்கும் இடம் விட்டு மனிதர்கள் தங்களுக்கான
பாதைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். நீருக்கு உரிய இடம் தந்து தங்கள் கட்டடங்களைக் கட்டிக்
கொள்ள வேண்டும்.
காற்றின் தூய்மையைக் கருதி தேவையான அளவுக்கு மட்டும் எரிபொருட்களைப்
பயன்படுத்த வேண்டும்.
சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்லும் நிலம் மலடாகி விடாத அளவுக்கு
வேதியியல் பொருட்களை அளவறிந்து பயன்படுத்த வேண்டும் அல்லது பயன்படுத்துவதைத் தவிர்க்க
வேண்டும்.
ஒரு பையையும் பாத்திரத்தையும் எடுத்துச் செல்வதால் ஒரு பாலிதீனைத்
தவிர்க்க முடியுமானால் அதைக் கைக்கொள்ள வேண்டும்.
மனிதர்கள் தங்களின் ஒவ்வொரு இலக்குக்காகவும் ஆசைகளுக்காகவும்
அவ்வளவு யோசிக்கிறார்கள், அவ்வளவு முயற்சிகளை எடுக்கிறார்கள். அதில் கொஞ்சமாவது இயற்கையோடு
ஒத்துப் போவது குறித்து யோசித்தும் அந்த யோசனைக்கேற்ற முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
கரையுடைக்கும் வெள்ளமும், சுவாசிக்க முடியாத அளவுக்கு மாசடைந்த
காற்றும், நஞ்சாகி மலடாகிப் போகும் நிலமும்தான் நம்மை யோசிக்கவும் செயல்படவும் வைக்கும்
என்றால் நாம் யோசிக்கும் முறையும் செயல்படும் முறையும் இயற்கைக்கு மட்டுமன்று நமக்கே
விரோதமானவை என்பதை நாம் புரிந்து கொள்வது நல்லது.
*****
No comments:
Post a Comment