பொழுதுகளின் நிறங்கள்
விழிக்கும் ஒவ்வொரு பொழுதிலும்
இரவு போய்
எப்படி பகல் வருகிறதென்று
தெரியாது
விழித்தால் பகல் வந்திருக்கும்
உறங்கும் பொழுதில் இரவு கழிந்திருக்கும்
உறங்காத ஓர் இரவில்
இரவின் மடியில் பகல் உறங்குவதையும்
பகலின் மடியில் இரவு விழிப்பதையும்
பார்க்க நேர்ந்தது
அன்றிலிருந்து இரவென்றும்
பகலென்றும் இல்லை
உறக்கம் வந்தால் உறங்குகிறேன்
விழிப்பு வந்தால் விழிக்கிறேன்
எது இரவு எது பகல் என்று
எனக்கு எதுவும் தெரியவில்லை
பகலின் நிறம் கருப்பாகவும்
இரவின் நிறம் வெள்ளையாகவும்
ஏன் இருக்கக் கூடாது
என்று கேட்பதற்கு முன்
பகலின் நிறத்தையும் இரவின்
நிறத்தையும்
ஒரு முறை தரிசித்துக் கொள்ளுங்கள்
*****
No comments:
Post a Comment