12 Apr 2022

ஓர் ஆசிரியருக்குப் புகழ் மாலைச் சூடுங்கள்

ஓர் ஆசிரியருக்குப் புகழ் மாலைச் சூடுங்கள்

            எல்லாருக்கும் புகழ் மேல் ஓர் ஆசை இருக்கிறது. திருவள்ளுவரே “தோன்றிற் புகழோடு தோன்றுக” (குறள். 236) என்று சொல்லி விட்ட பிறகு அந்த ஆசை இல்லாமல் இருக்க முடியுமா?

            அதே நேரத்தில் “அவாவில்லார்க்கு இல்லாகும் துன்பம்” (குறள். 368) என்று திருவள்ளுவர் ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்று புத்தர் கூறியது போலவும் கூறியிருக்கிறார் என்று புகழ் மேல் உள்ள ஆசையைக் கெடுத்தக் கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன். புகழ் மேல் உள்ள ஆசையை ஏற்று அதை வளர்த்துக் கொள்ள நீங்கள் விரும்பா விட்டாலும் உங்கள் உள்மனம் உங்களை அறியாமல் விரும்பும்.

            புகழ் மேல் ஆசை கொள்ளாத மனிதர்களை இந்தப் பூமியில் காண முடியாது. எங்கள் சோமசுந்தரசந்தானம் ஆசிரியர் புகழ் மேல் ஆசையில்லாத ஒரு மனிதர் ஆயினும் அவர் ‘உங்களுக்குப் புகழ் மேல் ஆசையே இல்லை’ என்று புகழ்வதை விரும்புவார் என்பார். இதை அவர் அடிக்கடி சொல்லியிருக்கிறார். பாவம் அந்த மனிதர் யாராலும் புகழப்படாமல் இறந்து விட்டார்.

            பொதுவாக ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் எனும் பணி மாறுதல் பெறும் போது பிரிவு உபச்சார விழா நடத்தி இல்லாத சிறப்பையெல்லாம் இருப்பதாகச் சொல்லிப் புகழ்ந்து தள்ளி விடுவார்கள். சோமசுந்தரசந்தானம் ஆசிரியருக்கு அந்த வாய்ப்பு அமையாத வகையில் அவர் பணியேற்ற நாள் முதல் ஒரே பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

            இரண்டாவதாக ஓர் ஆசிரியர் ரிட்டையர்மென்ட் எனும் பணி ஓய்வு பெறும் போது பாராட்டு விழா எடுப்பார்கள். விழா எடுத்து விழா மேடையில் இல்லாத புகழை எல்லாம் இருப்பதாகப் புகழ்ந்து சொல்லி வீடு வரை ஊர்வலமாக அழைத்துச் சென்று விடுவார்கள். எங்கள் பகுதியில் குறவன் – குறத்தி டான்ஸ் எனும் நடனத்தோடு மேள தாளம் முழங்க வீடு வரை அழைத்துச் சென்று தடபுடலாக விடுவார்கள். அப்படிப்பட்ட கலாச்சார சிறப்புகள் பலகாலம் எங்கள் பகுதியில் புழங்கிக் கொண்டிருந்தது.

            சோமசுந்தரசந்தானம் ஆசிரியருக்கு அந்த வாய்ப்பும் அமையவில்லை. புகழைப் பொருத்த வரையில் அவர் துரதிர்ஷ்ட கட்டை. அவர் விசாகப்பட்டினம் வரை சென்ற போது திடீரென அடித்த புயலில் சிக்கி இறந்து போயிருந்தார். அவர் உடலைக் கூட கண்டுபிடித்து ஊருக்குக் கொண்டு வர முடியவில்லை.

            சோமசுந்தரசந்தானம் ஆசிரியர் இறந்தார் என்ற செய்தி ஊருக்குள் பரவவே ஒரு மாத காலம் ஆயிற்று. அதற்குள் அவருக்குத் தெரிந்த பலரும் அவரவர் வேலைக்குள் மூழ்கி விடவே துக்கம் விசாரிப்பது கூட மறந்துப் போயிற்று.

            என்றாலும் சோமசுந்தரசந்தானம் ஆசிரியர் எங்களைப் போன்ற மாணவர்கள் மனதிற்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். புகழ் என்பதைப் பற்றி நினைவுக்கு வரும் போதெல்லாம் அவர் ஞாபகத்திற்கு வந்து விடுகிறார். நாங்கள் எங்கள் மனதுக்குள் புகழ் அஞ்சலி செய்து கொள்கிறோம். உங்களால் முடியுமானால் தன் வாழ்க்கையில் புகழ் மாலைகளைச் சூடாத அந்த மனிதருக்காக நீங்கள் உங்கள் மனதில் ஒரு புகழ் மாலையைப் போடுங்கள் என்று பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...