மீண்டும் மலரும் மலர்கள்
அப்போதிருந்த உச்சபட்ச விலை
இப்போது இல்லை
பொழுது கடக்க கடக்க
இறங்கு முகத்தைச் சந்திக்கிறது
விலை
இன்னும் பொழுதானால்
குறைந்தபட்ச விலையினின்றும்
சரிந்து விடும்
விலைச் சரிவிற்காகக் காத்திருப்பவர்கள்
பொழுதை நம்பிக் குத்துக்காலிட்டு
அமர்ந்திருக்கிறார்கள்
பேரங்களுக்குப் படியாத பொருட்களை
பொழுதின் முடிவில் கேட்கும்
விலைக்குத் தர
வியாபாரிகள் தயாராகும் போது
அதற்காகவே காத்திருந்த சிறுமி
ஒருத்தி
கையிலிருக்கும் காசைத் தந்து
ஒற்றை ரோஜாவைக் கேட்கிறாள்
ஒன்றுக்கு நான்காய் பூக்களை
சிறுமியின் கைகளில் கொடுக்கிறார்
வியாபாரி
மீண்டும் ஒரு முறை சிரித்து
மலர்கின்றன
சிறுமியின் கைகளுக்குச் சென்ற
ரோஜாக்கள்
*****
No comments:
Post a Comment