எச்சம் சுமந்து நிற்கும் வீடு
எப்படியோ பொருட்கள் வாங்கிக்
குவிக்கப்பட்டு விடுகிறது
ஏன் இப்படி பொருட்களால் நிறைகிறதோ
இந்த வீடு
ஒவ்வொன்றாக ஏதோ தேவை என்றுதான்
வாங்கப்படுகிறது
ஆசைப்பட்டு வாங்குவதும் கணக்கில்
சேரும்
காரணங்கள் ஏதுமின்றி
ஏதோ ஒன்று எப்படியோ தூண்ட
வாங்குவதும் உண்டு
முடிவில் வீடு முழுவதும்
பொருட்களாக நிறைகின்றன
பொருட்கள் பழையதாகும் போது
குப்பைகளாகின்றன
எப்போதோ தேவைப்படலாம் என்ற
நினைப்பில்
குப்பைகளான பின்னும் பொக்கிஷமாய்த்
தேங்கும் பொருட்கள்
இடங்களை அடைத்துக் கொண்டே
போகும் போது
வெளியேற்றுவது குறித்த பலத்த
யோசனை உண்டாகிறது
வெளியேற்றும் பொருள் ஒன்றால்
வீட்டின் அதிர்ஷ்டம் வெளியேறி
விடக் கூடாதே என்ற அச்சத்தால்
எந்தப் பொருளை வெளியேற்றுவது
என்ற குழப்பம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
போல் சூழ்கிறது
முடிவில் ஏதோ சில பொருட்களுடன்
கரையைக் கடக்கிறது
கரையேறிய பொருளொன்றில்தான்
மூதாதையின் நினைவுகள் வாசம்
செய்ததாக
பழம் நினைவுகளைத் தோண்டியெடுத்துப்
போட்டு
அழத் தொடங்குகிறாள் பேரிளமை
கடந்த பெண்ணொருத்தி
கனத்த நினைவுகளின் கண்ணீர்
மழையால் நனையத் தொடங்குகிறது
எஞ்சியிருக்கும் பொருட்களைச்
சுமந்து நிற்கும் வீடு
*****
No comments:
Post a Comment