பறவையாக மாறி பறத்தல்
தானாகப் பறந்து வந்து
ஜன்னல் கம்பிகளில் அமர்ந்த
பறவை
நலம் விசாரிப்பதைப் போலத்
தோன்ற
என்னையும் அறியாது மனதார
நன்றி சொன்னேன்
மற்றொரு நாளில்
இருசக்கர வாகனக் கண்ணாடியைக்
கொத்திக் கொண்டிருந்த பறவையொன்று
என்னைத் தொட்டு நலம் விசாரிப்பது
போலத் தோன்ற
கண்களை மூடி நன்றி சொல்லும்
பிரார்த்தனைக்குள் ஆழ்ந்தேன்
திடீரென ஒரு மழைநாளில்
நடுக்கூடத்தில் கூடிக் கூச்சலிட்ட
குருவிகள்
ஆனந்த நடனம் புரிவதைப் போலத்
தோன்ற
பரவசமாகி நன்றி நன்றியெனப்
புலம்பியபடி இருந்தேன்
பிறிதொரு நாள் தோளில் வந்தமர்ந்த
பறவை
நான் சொல்லிய நன்றிக்கெல்லாம்
நன்றி சொல்வது போலத் தோன்ற
நானுமொரு பறவையாகி வானில்
பறந்து கொண்டிருந்தேன்
*****
No comments:
Post a Comment