6 Feb 2021

நேரத்தோட கெளம்புங்க மொதல்ல!

நேரத்தோட கெளம்புங்க மொதல்ல!

செய்யு - 709

            விகடு வூட்டுக்கு வந்ததும் சுப்பு வாத்தியார்கிட்டெ எல்லா விசயத்தையும் போட்டு ஒடைச்சாம். அவரு எல்லாத்தையும் பொறுமையா கேட்டுக்கிட்டாரு முச்சந்தியில்ல நிக்குற கல்லுச்சாமிக்கு கேக்கறதெ தவுர வேற இல்லங்ற மாதிரிக்கு. "நம்ம எதிரி மட்டுமில்லடாம்பீ நம்ம பக்கம் நிக்குற ஆளுங்க வரைக்கும் நம்மளோட பலவீனத்தெ கண்டுபிடிச்சிட்டானுவோ. நாம்ம எதெயும் பண்ண மாட்டேங்றதும், நம்மாள எதுவும் பண்ண முடியாதுங்றதும் நல்லாவே அவனுகளுக்குப் புரிஞ்சிப் போயிடுச்சு. இதெயெல்லாம் யோஜனெ பண்ணித்தாம் கொஞ்சம் கெளரவக் கொறைச்சலா மின்னாடி வழக்கு மிடிய வந்தப்போ கூட மிடிச்சிக்கிடலாம்ன்னேம். அவ்வே ஒத்துக்கிடல. செரி இத்து இப்பிடியே இருக்கட்டும். நாளைக்கு பொழுதோட ஆர்குடிக்குக் கெளம்பிப் போயி நேர்லத்தாம் பேசணும். நீயி இதெப் பத்தி போன்ல தங்காச்சிக்கிட்டெ எதெயும் பேச வாணாம். போன் பண்ணா செளக்கியமா? டாக்கடரு என்னா சொன்னார்ங்றதெ மட்டும் கேட்டுக்கிட்டு அத்தோட வுட்டுடு. நேர்லப் பேசிக்கிடலாம். அதாங் செரி!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒட்ட வெட்டுனா ஒசர வளராதுங்ற மாதிரிக்கு நறுக்கிப் பேசுனா நாலாவித அர்த்தத்துக்கு எடம் கெடையாதுங்றாப்புல. அந்த படிக்கே அளந்து எடுத்தாப்புல பேசி முடிச்சாம் விகடு போன்ல தங்காச்சிக்கிட்டெ. போன்ல பேசுறதுல அத்து ஒரு சிக்கல்தாம், ஒத்த வார்த்தைக்குக் கேக்குறவேம் ஓராயிரம் அர்த்தம் பண்ணிக்கிடலாம்ங்ற மாதிரிக்கு.

            மறுநாளு விகடுவும், சுப்பு வாத்தியாரும் சாயுங்காலத்துக்கு மேல ஆர்குடி ஆஸ்பிட்டலுக்குக் கெளம்பிப் போனாங்க. நேத்தி தன்னந் தனியா டிவியெஸ் பிப்டியில போறப்ப வர்றாத பயம் இன்னிக்கு அப்பார்ர வண்டியில பின்னாடி உக்கார வெச்சி அழைச்சிட்டுப் போறப்ப வந்துச்சு விகடுவுக்கு. முந்தா நேத்தியப் போல இன்னிக்கும் எங்காயச்சும் சறுக்கிட்டு வுழுந்துடுவோமோங்ற எண்ணத்துல உண்டான பயம் அது. தடுக்கி வுழுந்தது ஒரு மொறைத்தான்னாலும் தடுக்கி வுழுவுறாப்புல வர்ற கனவு பலமுறைம்பாங்க கெராமத்துல. அப்படித்தாம் இருந்துச்சு விகடுவுக்கு வுழுந்தது ஒரு மொறைன்னா வுழுந்துடுவோமேங்ற நெனைப்பு பலமுறையா. அந்த நெனைப்பு கரைய அரிக்கிற அலையப் போல வந்து அலை அலையா மனசுக்குள்ள மோத வண்டிய ரொம்ப மெதுவாத்தாம் ஓட்டிட்டுப் போனாம். இருவது கிலோ மீட்டரு வேகத்த தாண்டியிருக்க மாட்டாம். வூட்டுலேந்து கெளம்பி ஆஸ்பிட்டல்ல சேர்றப்ப ஒண்ணரை மணி நேரத்துக்கு மேல ஆயிருந்திருக்கும். ஆஸ்பிட்டல்ல நெருங்குறப்போ மணி ஆறே முக்கால நெருங்குன்னுச்சு நேரம்.

            இவுங்க ரண்டு பேரும் போயிப் பாத்தப்பவே வெங்கு ரண்டு நாளா ஏம் ரண்டு பேரும் வந்துப் பாக்கலங்ற காரணத்தெ புரிஞ்சிக்கிடுச்சு மோசெப் புடிக்கிறவேம் மூஞ்செ பாத்தாலே தெரியாதங்றாப்புல. "ஏம்டா வண்ணிடியில யப்பாவ வெச்சி அழைச்சிட்டுப் போற நீயி சூதானமா அழைச்சிட்டுப் போறதில்லையடா? நமக்கே நேரஞ் சரியில்லாமக் கெடக்கு. இதுல நீயி வேற இப்பிடி பண்ணி வெச்சிட்டு வந்து நிக்குதீயடா?"ன்னு காயங்களப் பாத்து அத்து அழுவ ஆரம்பிச்சிடுச்சு நேரங் கெட்ட நேரத்துல கூறு கெட்டுப் போயா திரிவாங்கங்றாப்புல. பெறவு அதுவே கண்ணுத் தண்ணியைத் தொடைச்சிக்கிட்டு, "நீஞ்ஞ வந்து பாக்குறதோட நிறுத்திக்கோங்க. அவளையும், பாப்பாவையும் அழைச்சிட்டு வர்றேன்னு எஞ்ஞயாச்சும் போட்டு ஒடைச்சிட்டு வந்து நிக்காதே!"ன்னுச்சு வெங்கு எதாச்சும் செய்யுறேம்ன்னு ஒட்டிக்கு ரெட்டியா வேலைய வெச்சிப்புடாதேங்றாப்புல.

            "அதெ நாம்ம அப்பவே சொல்லிட்டேம் ஆயிகிட்டெ. வூட்டுல யிருந்த வூட்டப் பாத்துக்கிடுன்னு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வானம் கருக்குறதெப் பாத்தா வெளியில காய்ச்சலுக்குப் போட்டுருக்குற நெல்ல அள்ளிப் பத்திரம் பண்டிட மாட்டேமாங்றாப்புல.

            "அதாங்க செரி! நமக்கு யிப்போ நேரமே சரியில்லங்க! இவ்வே வேற நேத்தி ராத்திரிலேந்து மூஞ்செ திருப்பி வெச்சிக்கிட்டு உக்காந்திருக்கா! நாம்ம இருக்குற நெலையில இவ்வே வேற!"ன்னுச்சு வெங்கு அவ்சரத்துக்கு கருவக்காட்டுல ஒதுங்ற நேரமா பாத்துதாம் காட்டேரி எட்டிப் பாக்குமாங்ற மாதிரிக்கு.

            "என்னவாம் பெரச்சனெ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு என்னான்னு சொல்லாம நோவுக்கு வைத்தியரு எப்படி மருந்து கொடுக்குறதுங்ற மாதிரிக்கு.

            "நேத்திக்கு ராத்திரிக்கி அந்த வக்கீலு போன பண்ணாராம். இவ்வேம் எடுக்காம யிருந்தா. தொடர்ச்சியா பண்ணிக்கிட்டெ இருந்ததுல போன ஆப் பண்ணிப்போட்டு அப்பிடியே பித்துப் பிடிச்சாப்புல உக்காந்துட்டா!"ன்னுச்சு வெங்கு தந்தி வந்துட்டா சாவு சேதித்தாம்ன்னு கலங்கி உக்காந்துப்புட்டாங்ற மாதிரிக்கு.

            "நாம்மத்தாம்மா நேத்தி வக்கீலோட ஆபீசுக்கு கேஸ் கட்டெ வாங்கலாம்ன்னு போனேம். வக்கீலு தங்காச்சிக் கொடுன்னு சொல்லாம கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு தங்காச்சிக்குப் போன அடிச்சாரு. இத்து எடுக்கலன்னதும் கட்டெ கொடுக்க முடியாதுன்னாட்டாரு. பெறவு நாம்ம ஆபீஸ்ஸ வுட்டு கீழே எறங்கி வந்தேம். எறங்கி வந்ததும் நமக்கு ஒரு யோஜனெ. நாம்ம போன அடிச்சிக் கேட்டு அதெ அப்பிடியே சொல்லுவேம்ன்னு அதுக்குள்ள போன்னு ஸ்விட்ச்சு ஆப்பாயிடுச்சுன்னு சொன்னுச்சு. செரின்னு வுட்டுப்புட்டு வூட்டுக்குப் போயிட்டேம்!"ன்னாம் விகடு சொரைக்காயில உப்பு இல்லாததுக்கு அது வளர்றப்போ உப்புத்தண்ணி ஊத்தலங்றது காரணமில்லங்ற மாதிரிக்கு.

            "நாமளும் அதெத்தாம்ண்ணே நெனைச்சேம். இனுமே அந்த வக்கீல வெச்சி வழக்க நடத்துறதெப் போல அசிங்கத்தனம் வேற எதுவுமில்ல. அதாங் நேத்திப் போன அடிச்சப்பயும் எடுக்க நமக்குப் பிடிக்கல. அந்தப் போனு வந்தப்போ நமக்கு அப்பிடியே அருவருப்பா போயிடுச்சு. சம்பவம் நடந்து எத்தனெ நாளாயிடுச்சு. இப்போ அடிக்கிறேம்ன்னா ஏதோ ஆதாயத்துக்கத்தாம் அடிப்பாம்ன்னு நெனைச்சிட்டேம். இப்பிடியுமா மனுஷனுவோ இருப்பானுவோன்னு நமக்கு ஒடம்பெல்லாம் நமைச்சலா இருந்துச்சுண்ணே. அந்தக் கடுப்புலத்தாம் அந்த ஆளு திரும்ப திரும்ப போன அடிச்சதும் நாம்ம கோவமாயி போன ஆப் பண்ணிப் போட்டுட்டேம்!"ன்னா செய்யு கைய்ய வுடுற புத்துல எல்லாம் பாம்பொண்ணு இருக்கும்ங்றாப்புல.

            "அதாங் அவரு நீயிப் போன பண்ணி வழக்கோட கட்டுகளக் கொடுத்து வுட்டுப்புடுங்கன்னு சொன்னாத்தாம் கட்டுகளக் கொடுப்பாராம். யில்லன்னா கொடுக்க மாட்டாராம். நீயிப் போன்னப் போட்டு ஒரு வார்த்தெ இப்பிடின்னு சொல்லிப்புடு. அப்பவாச்சும் கட்டெ கொடுக்குறாரான்னு பாப்பேம்!"ன்னாம் விகடு ஒத்த அதட்டல்லப் போட்டா தெருவ அளந்துட்டுப் போற மாடு ஒழுங்கா ஓரமா போயிடுமுன்னு அனுபவப்பட்டவங்க சொல்றாப்புல.

            "இந்தா ஒடனே அடிக்கிறேம்!"ன்னு வக்கீல் திருநீலகண்டனுக்குப் போன அடிச்சா செய்யு. போன எடுத்த வக்கீலு செளரியமா இருக்கீயான்னு கேட்டுருப்பாரு போல, அதுக்குச் செய்யு ரொம்ப காட்டமா, "அதெல்லாம் கேக்க ஒஞ்ஞளுக்கு அருகதெய யில்லங்கய்யா! நாம்ம ன்னா நெலையில இருக்கேம்ன்னு தெரியா ஒஞ்ஞளுக்கு ஏம்ய்யா அந்தக் கேள்வி?"ன்னா வெடுக்குன்னு செத்துக் கெடக்குறவேம்ங்கிட்டெ போயி ஏம் சொகம் விசாரிக்கிறீயேங்றாப்புல.

            "ஏம் அதெல்லாம் கேட்டுக்கிட்டு! இந்த மாதிரிக்கி நேத்தி யண்ணன் வந்துச்சு. ஏம் கட்டெ கொடுக்கல?ன்னு கேட்டுப்புட்டு, மறுக்கா யண்ணன் வருவாம், கொடுத்து வுடுங்கன்னு பேசிட்டு முடிக்கிறதெ வுட்டுப்புட்டு தேவயில்லாம கோவப்பட்டுகிட்டு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு கமுக்கமாக முடிக்க வேண்டிய காரியத்தெ ஏம் தண்டோரா போட்டாப்புல பேசணும்ங்றாப்புலன்னு செய்யு பேசுறதெப் பாத்துட்டு.

            அதெ வாங்கிக்கிட்டாப்புல செய்யு பேசுனா, "யண்ணங்கிட்டெ ஏம் கட்டெ கொடுக்க முடியாதுன்னீய?"ன்னு. அதுக்கு வக்கீலு அவ்வே கொடுக்கச் சொல்லாம கொடுக்க முடியாதுன்னு பதிலச் சொல்லிருப்பாரு போல. அதுக்கும் செய்யு வெடுக்குன்னு, "காசிய மட்டும் அவுங்ககிட்டெயிருந்துதானே கேட்டு வாங்கிக்கிறீயே! அவுக வந்து கேட்டா கொடுக்க வேண்டித்தானே? ஒஞ்ஞளுக்கு ன்னா எஞ்ஞ கேஸ்ஸ எடுத்துதாம் சாப்புடணும்ன்னு கெடக்கா ன்னா?"ன்னா வவுத்துக்குப் பசின்னா வாயால சாப்புடுறதா, ஓட்டையப் போட்டு வவுத்துக்குள்ள வுடுறதாங்றாப்புல.

            "அதெல்லாம் பேச வாணாம். கட்ட கொடுத்து வுடுங்கன்னு மட்டும் சொல்லேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வண்டிய ஓட்டுறவேம் ஒத்தப் புத்திக்காரனா இருக்கணும்ஙறாப்புல.

            வக்கீலு அது வேற, இது வேறங்றதெப் போல பதிலச் சொல்லிருக்கணும் போல. அதுக்குச் செய்யு அடுத்தாப்புல பேசுனா, "இப்பிடித்தாம் ஒண்ணு கெடக்க ஒண்ணுப் பேசி கொழப்பி வுட்டுக்கிட்டெ இருக்கீயே! இனுமே இந்த வழக்க எப்பிடி நடத்த முடியும்ன்னு நெனைச்சிக்கிட்டுக் கட்டெ கொடுக்காம இருக்கீயே? இனுமே நீஞ்ஞ மட்டும் இந்த வழக்க நடத்துனீயன்னா நம்மட மொகத்துல நாமளே காறித் துப்பிக்கிவேம்!"ன்னா செய்யு என்னவோ ரோஷமா பேசுனா காரியம் ஆயிடும்ங்றாப்புல.

            "இவ்வே ன்னடா ஒந் தங்காச்சி தேவையில்லாம பேசிக்கிட்டுக் கெடக்கறா? யிப்பிடிப் பேசிப் பேசித்தாம் பெரச்சனெ உண்டானது பத்தாதுன்னு இவ்வேங்கிட்டெ வேற பெரச்சனயா? ஆளாளுகிட்டெ யிப்பிடிப் பெரச்சனெ வெச்சக்கிட்டெ போனா அதுக்கு சங்கிலித் தொடரு போல ஒரு முடிவெ யில்லாமப் போயிடும். கட்டெ கொடுத்து வுடுங்க, யண்ணம் வருவாம்ன்னு மட்டும் சொல்லச் சொல்லுடா அவளே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு விகடுவப் பாத்து தலைவலின்னு போயிக்கிட்டு வவுத்துல கைய வெச்சிக்கிட்டு சொல்ல கூடாதுங்றாப்புல. அவரு சொன்னது செய்யுவுக்குக் கேக்குற கொரல்ல சொன்னாலும் இந்த மொறை மவளெப் பாத்துச் சொல்றதுக்கு விருப்பமில்லாமப் போயிடுச்சு சுப்பு வாத்தியாருக்கு. அதெ புரிஞ்சிக்கிட்டவெ போல, "இந்தாருங்கய்யா! நம்ம வழக்கெ இனுமே நீஞ்ஞ நடத்துறல எஞ்ஞ குடும்பத்துக்கு மட்டுமில்ல, நமக்கும் விருப்பம் யில்ல. தயவுபண்ணி எஞ்ஞ யண்ணேம் வாரும் நாளைக்கி. கட்டெ கொடுத்து வுட்டுப்புடுங்க!"ன்னா செய்யு இப்போ ஒத்தளிச்சு வர்ற கதிரெப் போல சொடரா. அதெ தொடந்தாப்புல வக்கீலு ஏதோ பேச முயற்சிப் பண்ணிருப்பாரு போல, செய்யு ஆத்திரமா போன கட் பண்ணி ஒடனே ஆப் பண்ணியும் போட்டா கெளைய கழிச்சிக்கிட்டுக் கெடக்குறதுக்கு வேரறுத்துப் போட்டுப்புடலாம்ங்றாப்புல.

            "சம்மந்தம் சம்மந்தம் யில்லாம பேசுறார்ண்ணே அந்த வக்கீலு! அத்துப் புரியாம யப்பா வேற பேசுறாங்க. நம்ம நெலைய யாரும் புரிஞ்சிக்கிடவே மாட்டேங்றீயே!"ன்னா செய்யு வெளையாடுறவுகளோட கஷ்டம் புரியாம அதெ வேடிக்கெ பாக்குறவேம் குத்தம் கொறை சொல்ல கூடாதுங்றாப்புல.

            "நாம்ம நேத்திக்கிப் போயிப் பேசுனப்பவும் இதெ கதிதாம். அது பாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல பேசியிருக்கேம். கதெ ஆன பாடில்ல. நாம்ம ஒண்ணுத்தெ கேட்டா அந்த வக்கீலு வேற ஒண்ணுத்தெப் பதிலச் சொல்லி, நேர வெரயந்தாம் போ! ஒரு கட்டத்துக்கு மேல நம்மாள மிடியாம, தயவுபண்ணி கட்டெ கொடுத்துப்புடுங்கன்னு கேட்டதுக்குப் பெறவுத்தாம் நீயி கொடுக்கச் சொன்னாத்தாம் கொடுப்பேம்ன்னு சொன்னதால வேற வழியில்லாமப் போன காரியம் ஆவாம திரும்புறாப்புல ஆயிடுச்சு!"ன்னாம் விகடு செய்யுவப் பாத்து. பெறவு சுப்பு வாத்தியார்ரப் பாத்து, "தங்காச்சி மேல குத்தமில்லப்பா! அந்த வக்கீலு அப்பிடித்தாம் எகனைக்கு மொகனையா எதாச்சும் பேசுறாப்புல. நம்மாளயே சமாளிக்க மிடியில. பாவம் அவ்வே என்னப்பா பண்ணுவா?"ன்னாம் விகடு வெளியில நிக்குறவுகளுக்கே தெகைப்பா இருக்குதுன்னா உள்ளார சிக்கிக்கிட்டு நிக்குறவுகளோட நெலமெ எப்படி இருக்கும்ங்றாப்புல.

            "நாம்ம முடிவா சொல்லியாச்சுண்ணே! நாளைக்குப் போனீன்னா கட்டெ வாங்கிட்டு வந்துப்புடலாம். வாங்கிட்டு வாண்ணே. அதுக்குப் பெறவு பாத்துக்கிடலாம்!"ன்னா செய்யு அணைய தொறந்தா தண்ணி வெளியிலப் போவாம உள்ளாரயா போவும்ங்றாப்புல.

            "நாமளும் இஞ்ஞ ஆர்குடியில சிவபாதங்ற வக்கீல்ட்ட அஞ்ஞ கட்டெ வாங்குறதுக்கு மின்னாடியே போயிப் பாத்துருக்கேம். அவரு வெள்ளிக் கெழமெ வேணும்ன்னாரு. நாளைக்குத்தானே வெள்ளிக் கெழமெ. நாளைக்கு என்னத்தெ ஒடனே வாங்கிக் கொண்டுப் போயிக் கொடுக்க முடியும்? நாம்ம பள்ளியோடம் வுட்டுத்தாம் போயாவணும். யப்பா வேற அடிபட்டதுலேந்து ஒடம்புக்கு மிடியாம கெடக்குறாங்களே!"ன்னாம் விகடு டயரு பஞ்சராயிடுச்சுன்னா கையில இருக்குற ஸ்டெப்னி டயர்ர மாத்திப்புடலாம்ங்றாப்புல.

            "ஒண்ணும் அவசரமில்லண்ணே! நீயி மொல்லமாவேப் போ! இஞ்ஞ ஆஸ்பிட்டல்ல எக்ஸ்ரே எடுத்துப் பாத்ததுல ஒண்ணும் பெரச்சனெ யில்லன்னுட்டாங்க. இன்னிக்கும் சேப்பு லைட்ட வெச்சி அடிச்சி வுட்டாங்க. வலி கொஞ்சம் பரவாயில்ல. இன்னும் ஒரு நாலு நாளைக்கு இருந்துட்டுப் பாத்துட்டுப் போவலாம்ன்னு சொல்லிருக்காங்க!"ன்னா செய்யு நாளைக்கே வெதைச்சு நாளா நாளைக்கே அறுவடை காணப் போறதில்லங்றாப்புல.

            "கவனிப்புல்லாம் நல்லாவே கவனிச்சிக்கிறாங்க. இஞ்ஞ சுத்தி இருக்குறவங்களும் ந்நல்லா அணுக்கமாயிட்டாங்க. இஞ்ஞ கொடுக்குற சாப்பாடே போதும்ன்னாலும் வெளியிலேந்து சாப்பாடு வேணும்ன்னாலும் வாங்கியாந்து தர்றாங்க. டீத்தண்ணி வேணும்ன்னாலும் பக்கத்துல வெளியில போறவங்க ப்ளாஸ்க்கையும், காசியையும் கொடுத்தா நமக்கும் சேத்து வாங்கியாந்துடுறாங்க. அவுகளுக்கு பாக்க வர்றவங்க வாங்கிட்டு வர்ற பழங்கள வரைக்கும் கொடுத்துப்புட்டுத்தாம் சாப்புடுறாங்க. காலம் முழுக்கவே இந்த ஆஸ்பிட்டல்ல கெடந்துப்புடலாம் போலருக்குடாம்பீ! ஆரஞ்சு பழந்தாம் கொஞ்சம் கொறைச்சலா இருக்கு. அதெ மட்டும் ஒரு ரண்டு கிலோ வாங்கியாந்து கொடுத்தீன்னா போதும். அதெத்தாம் ஒந் தங்காச்சி பிடிச்சாப்புல சாப்புடுறா. மித்தபடி சாப்பாடு உள்ள போவ மாட்டேங்குதுடாம்பீ! ஒடம்பெ பாரு எப்பிடி எளைச்சிப் போயிக் கெடக்கா! யிப்பிடிப் பாக்கத்தான்னா நாம்ம இவளெப் பெத்துப் போட்டேம்?"ன்னு கண்ணு கலங்குனுச்சு வெங்குவுக்கு எப்பயோ பண்ண தர்மந்தாம் தர்மாஸ்பத்திரியில நல்ல வெதமா கொண்டாந்து வெச்சிருக்குங்றாப்புல.

            "செரிம்மா அழுவாச்சிய வைக்காதே! நாம்ம ஆரஞ்சு வாங்கியாந்து தந்து கொடுத்துப்புட்டு போறேம்!"ன்னாம் விகடு தர்மம் தலைய மட்டுமில்ல தங்காச்சியும் காக்குங்றதெ நம்புறேம்ங்றாப்புல.

            "துணிக வேற தேங்கிப் போயிக் கெடக்குடாம்பீ!"ன்னு கம்புப் பையில இருந்த உடுத்துன துணிகளக் காட்டுனுச்சு வெங்கு காத்து வாக்குல அடிச்ச மணல்ல மலை போல மணல்மேடு உருவாகியிட்டுங்றாப்புல.

            "அதாங் புது உடுப்புவோ எடுத்தாந்திருக்கேம்லா. இதெ வூட்டுலக் கொண்டுப் போயித் தொவைச்சி காய வெச்சி மடிச்சிக் கொண்டாந்து தர்றேம்!"ன்னாம் விகடு தொவைச்சுத் தர்றதுக்கு விதி இருக்குறப்போ ஏம் அழுக்காக்குறதெப் பத்தி கவலைப்படணும்ங்றாப்புல.

            "செரிடப்பா! நேரத்தோட கெளம்பித் தொலையுங்க. அன்னிக்கு மாதிரி போயி எங்காச்சிம் வுழுந்து கெடக்காதீயே!"ன்னுச்சு வெங்கு என்னவோ வர்றப்பயும் போறப்பயும் வுழுந்து எழுந்திரிச்சுக் கெடக்குறதே வேலையா இருக்குங்றாப்புல.

            "கோவிந்து யண்ணா, மகேந்திரா யண்ணா, பெத்தநாயகம் யண்ணால்லாம் வந்தாங்களா?"ன்னாம் விகடு கோயிலுக்கு வந்துப்புட்டுப் பரிவாரத் தெய்வங்களப் பாக்காம போயிட முடியுமாங்றாப்புல.

            "நீந்தாம்ண்ணே நெதமும் வாரதில்ல. அவுங்க எப்பிடியும் மத்தியானத்து நேரத்துல பன்னெண்டு மணிக்கு மேல வந்துப் பாத்துட்டுப் போயிடுவாங்க. அப்பிடி மத்தியானம் வாரலன்னா மூணு மணிக்கு மேலவாச்சும் வந்துப் பாத்துப்புட்டுப் போயிடுவாங்கண்ணே!"ன்னா செய்யு அய்யரு வாராட்டியும் என்னா அம்மாவாசி வந்துக்கிட்டுத்தாம் இருக்கும்ங்றாப்புல.

            "ரொம்ப சந்தோஷம்! நம்மட ஒறவுலத்தாம், எவனும் சேதி தெரிஞ்சாலும் வந்துப் பாக்காட்டியும், சம்மந்மே யில்லாத அவுங்களாச்சும் வந்துப் பாக்குறாங்களே!"ன்னு சிரிச்சிக்கிட்டெ சந்தோஷப்பட்டுக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு நம்மளப் பாக்குறதுக்கும் நாட்டுல நாலு பேத்து இருக்காங்கங்றாப்புல. "இந்தச் சம்பவத்துல நடந்த ஒரே நல்லது இத்து ஒண்ணுத்தாம்டாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு விகடுவெப் பாத்து நல்லதுலயும் கெட்டது இருக்கு, கெட்டதுலயும் நல்லது இருக்குங்றாப்புல.

            "அப்புறம் வந்துண்ணா! கோர்ட்டுக்குப் போறதுக்கே நமக்குப் பயமா இருக்குதுன்னு சொன்னேம்ண்ணே! என்னிக்கு வழக்கு நடந்தாலும் சொல்லு, அன்னிக்கு நாஞ்ஞ வந்து நிப்பேம்ன்னு சொல்லிருக்காங்கண்ணே!"ன்னா செய்யு யாமிருக்க பயமேன்னு வந்து நிக்குற அண்ணன்மார்களப் பத்தி அசந்து போனாப்புல.

            "ஆமாம்டாம்பீ! இனுமே நாம்ம போறதுல புண்ணியமில்ல. அவுங்களப் போல நாலு பேத்து வந்து நின்னாத்தாம் அவனுகக் கொஞ்சம் பயந்தாப்புல ஆவானுவோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு உதட்டுக்கு மேல சின்னதா உள்ள மீசைக்குப் பயப்படாதவேம் கூட உதட்டுக்கு மேல இருக்குற மொரட்டு மீசைக்கு மெரண்டுத்தாம் போவாம்ங்றாப்புல.

            "யிப்பிடியே பேசிட்டு உக்காந்திருக்கிறதெ வுட்டுப்புட்டு, வெரசா கெளம்புற வழியப் பாருங்க. மழெ வந்தாப் போதும், இந்த ஊருக்குக் கரண்டு யில்லாமப் போயிடும். பெறவு இருட்டுலப் போயி எங்காச்சும் வுழுந்து கெடந்துக்கிட்டு? மொதல்ல கெளம்பித் தொலைங்க. நாளைக்கி சீக்கிரமா வந்துன்னா பேசிட்டு இருங்க!"ன்னுச்சு வெங்கு தொழாவுறதுன்னு முடிவான்னா இருட்டுல தொழவாம பகல்லயே தொழாவலாம்ங்றாப்புல.

            "நாளைக்கி பள்ளியோடம் வுட்டு அஞ்ஞ திருவாரூரு போறதால இஞ்ஞ வர்ற முடியாதும்மா! நாளா நாளிக்கு வேணும்ன்னா வர்றேம்!"ன்னாம் விகடு ஒரே நேரத்துலு ரண்டு பாதையில பயணம் போக முடியாதுங்றாப்புல.

            "செரிடாம்பீ தோதுபடிப் பாத்துக்கோ. அதாங் போன்னு இருக்குல்ல. போன்ன பண்ணிப் பேசிக்கோ. நீயி நாளைக்கிக் கொஞ்சம் சூதானமாப் போயி கட்டெ வாங்கிட்டு வந்துப்புடு. மொதல்ல யிப்போ கெளம்புற வழியப் பாருங்க!"ன்னு கெளப்பி வுடப் பாத்துச்சு வெங்கு வெளிச்சம் இருக்குறப்பவே கௌம்பி இருட்டுக்கு மின்னாடி ஊருப் போயிச் சேந்துடுங்கங்றாப்புல.

            "இதுக்கு மேல இஞ்ஞ உக்கார வாணாம்! கெளம்புடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரும் சிக்னல்ல பச்செ வௌக்கு எரிஞ்சிட்டா வண்டிய கௌப்பிடாம இருந்திடக் கூடாதுங்றாப்புல. அன்னிக்குக் கெளம்பி எங்கயும் வுழுவாம போன மேனிக்கு போட்ட சட்டெ கூட அசங்காம கசங்காம நல்ல வெதமா விகடுவும், சுப்பு வாத்தியாரும் வூடு வந்து சேந்தாங்க. வூடடையறதோட வெற்றி அதுலத்தாம் இருக்குங்றாப்புல வூடு வந்ததும் நின்னு நெதானிச்ச ஒரு பெருமூச்சே வுட்டுக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. வண்டியெப் பாத்ததும் கையெடுத்துக் கும்புடணும்ன்னு போல தோணுனுச்சு அவருக்கு. கைய கும்புட எடுத்துக்கிட்டுப் போனவரு அப்படியே அந்தக் கைய வண்டியோட சீட்டு மேல வெச்சி கன்னுக்குட்டியோட நெத்திய தேய்ச்சி வுடுறாப்புல பாந்தமா பதிவிசா தேய்ச்சி வுட்டாரு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...