7 Feb 2021

நடைமுறைகளை மாத்த முடியாது!


 நடைமுறைகளை மாத்த முடியாது!

செய்யு - 710

            இன்னிக்கு எப்பிடியும் வழக்குகளோட கட்டுகள திருநீலகண்டன் வக்கீல்கிட்டெயிருந்து வாங்கிடலாங்ற நம்பிக்கையோடத்தாம் விகடு பள்ளியோடம் வுட்டுச் சாயங்காலம் கெளம்பிப் போனாம். ஒலகத்துல ஆச்சரியம் நடக்குறது போல அன்னிக்கு என்னவோ என்னிக்கும் இல்லாத திருநாளா வக்கீல் ஆபீஸத் தொறந்து வெச்சி உக்காந்திருந்தாரு. அவரோட அப்பாரையும் அழைச்சாந்து ஆபீஸ்ல உக்கார வெச்சிருந்தாரு. ஆளு பாக்க நல்ல தெட காத்திரமாத்தாம் கல்லு புள்ளையாரு கணக்கா இருந்தாரு. இவரைப் போயா ஒடம்புக்கு முடியலன்னு சொல்லி பொய் சொல்லியிருந்தார்ன்னு விகடுவுக்கு அவரு மேல எரிச்சலா வந்துச்சு.

            "தங்காச்சி ஒஞ்ஞகிட்டெ நேத்திக்கே போன் பண்ணி சொல்லிடுச்சு கட்டுகள கொடுக்கச் சொல்லி. இன்னிக்காவது கட்டுகளக் கொடுப்பீயளா? மாட்டியளா?"ன்னாம் விகடு கொடுத்த கடனெ வாங்க முடியாம நிக்குறவேம் போல. வக்கீல்ட்டேயிருந்து வழக்குக் கட்டுகள திரும்ப வாங்கறதுங்றது வைகுந்தம் போறேம்ன்னு ஆசெப்பட்டுப் போனா திரும்ப எங்க வழியிருக்குங்ற கதெ போலத்தாம். அத்து அத்தனெ சுலுவுயில்ல.   

            "இனுமே ஒங்க கட்டுகள வெச்சி நாம்ம என்ன பண்ணப் போறேம்? வாங்கிட்டுப் போங்க! ஒங்க தங்கச்சிக்கிட்டெயிருந்து வழக்கோட நம்பர், வழக்கோட பேரு எழுதி அதனோட அனைத்து தஸ்தாவேஜூக்களையும் பெற்றுக் கொண்டேன்னு எழுதி வாங்கிட்டு வந்துட்டீங்களா?"ன்னாரு வக்கீல் ஒரு ஓலைப் பாம்பெ அடிக்க நெனைச்சா ஒம்போது பாம்பு பொறப்பட்டு வரும்ங்றாப்புல.

            "இதெப் பத்தி நீஞ்ஞ சொல்லவேயில்லயே?"ன்னாம் விகடு வில்லங்கத்தெ சொல்லாம வெலை பேசி முடிச்சிப்புட்டீங்களேன்னு சொல்றாப்புல.

            "அதெப்படி பிரதர் வழக்குல நாங்க வக்காலத்துக்காக உள்ளார வரப்போ ஒங்க தங்கச்சிக் கையெழுத்துப் போடாம வர்ற முடியாது. அதெ போல வெளியில வர்றப்பயும் ஒங்க தங்கச்சிகிட்டெ கையெழுத்து வாங்காம கட்டுகள கொடுக்க முடியாது. நாளைக்கு நீங்களே வழக்கு சம்பந்தமா தஸ்தாவேஜூக்கள எங்களிடம் முறையாக ஒப்படைக்கலன்னு நம்ம மேல ஒரு வழக்கப் போடலாம் பிரதர்!"ன்னாரு வக்கீலு நொண்டிக்கிட்டு நிக்குறவேம்தாம் தொரத்திக்கிட்டு வந்து அடிக்கப் போறாம்ங்றாப்புல.

            "ஏற்கனவே போட்ட வழக்குகள்லயே ரொம்ப சலிச்சிப் போயிருக்கிறேம். இதுல இன்னும் வழக்கப் போடல்லாம் எஞ்ஞளுக்கு ஒடம்புலயும் பெலம் யில்ல, மனசுலயும் தெம்பில்ல!"ன்னாம் விகடு செத்துப் போனவனா வந்து ஒப்பாரி வெச்சு அழப் போறாம்ங்றாப்புல.

            "அது ஒங்க பிரச்சனை பிரதர். நமக்கு ஒங்க தங்கச்சியோட கையெழுத்து இல்லாம எதையும் கொடுக்கக் கூடாது. இதெல்லாம் சில நடைமுறைகள். நடைமுறைகளை மீற முடியாது!"ன்னு ஒதட்டப் பிதுக்குனாரு வக்கீலு செத்தப் பாம்பெ அடிச்சாலும் மொறைப்பாட்டோட அடிக்கணும்ங்றாப்புல.

            "நீங்க கட்டக் கொடுத்தா கூட நாளைக்கு நீஞ்ஞ கேக்குற மாதிரிக்கி கையெழுத்து வாங்கிட்டு வந்துடுறேம்!"ன்னாம் விகடு எப்படியாச்சும் காரியத்தெ முடிச்சிப்புடணும்ங்ற நோக்கத்துல வாக்குன்னு கொடுத்தா அதெ மீற மாட்டேம்ங்றாப்புல.

            "ஒரு வக்கீலப் பொருத்தமட்டில யாரையும் நம்பக் கூடாதுங்றது எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவங்க சொல்லியிருக்கிற வேதம். வேதத்தெ மீற முடியுமோ சொல்லுங்கோ? அதால மொதல்ல கையெழுத்து, பெறவு ஒங்க கையில கட்டுக. இதெயே கிளையண்ட் வர்றாம அவுங்க கையில கொடுக்காம வேற யாரு கையிலயும் நாம்ம கொடுக்கிறதில்ல. இப்போ ஒங்க தங்கச்சி அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்காங்ற ஒரே காரணத்துக்காத்தாம் கையெழுத்த வாங்கிட்டு வாங்க தர்றேம்ன்னு சொல்றேம்! அவ்வளவுதாங் ஒங்களுக்கு ரிலாக்ஸ்டா ஒரு உதவியப் பண்ண முடியும் பிரதர். நீங்க ரொம்ப எதிர்பார்க்கக் கூடாது!"ன்னாரு வக்கீலு என்னவோ ஒத்த ரூவாய்க்காக நடுரோட்டுல நிக்குற பிச்சைக்கார்ரேம் கோடீஸ்வரனா ஆசெப்பட்டு நிக்குறாம்ங்றாப்புல.

            "ஒஞ்ஞளடே நடைமுறைக, விதிமுறைகள்ல நாம்ம குறுக்க நிக்க விரும்பல.என்னத்தெ எழுதி கையெழுத்துப் போடணுங்றதெ நீஞ்ஞளே தயவுபண்ணி ஒரு காயிதத்துல எழுதிக் கொடுத்திட்டீங்கன்னா நாம்ம அதுல கையெழுத்து வாங்கியாந்திடறேம். அதாங் நல்லது. நாளைக்கி நாம்ம எழுதி ‍கையெழுத்து வாங்கியாந்ததுல இந்த எழுத்து கொறையுது, இந்த வாக்கியம் இல்லங்ற கொறை வந்துடப்படாது பாருங்க."ன்னாம் விகடு ஒடைக்கிறவேம் ஒடைச்சா ஒண்ணும் குத்தமில்ல, ச்சும்மா நின்னவேம் ஒண்ணும் தெரியாம ஒடைச்சாலும் குத்தம்தான்னு பின்னாடி ஏதும் சொல்லிப்புடக் கூடாதுங்றாப்புல.

            "அப்பிடில்லாம் சீப்பா பிகேவ் பண்ண மாட்டேம் பிரதர்! வேணும்ன்னா நாமளே எழுதித் தர்றேம்ன்னு கட கடன்னு ஏ4 சீட்டுகள அஞ்சு எடுத்து எழுத ஆரம்பிச்சாரு அடிமெ பத்திரம் எழுதி வாங்குறவேம் நல்லதுக்குத்தாம் அதெ செய்யுறேம்ன்னு விதந்தோதுறாப்புல. ஒவ்வொண்ணா எழுதி, “இது ஜீவனாம்ச அப்பீலுக்கு, இது டிரான்ஸ்பர் ஓப்பி பார் டிவிக்கு, இது டிரான்ஸ்பர் ஓப்பி பார் ஹெச்செம்ஓப்பிக்கு, இது டிவிக்கு, இது ஹெச்செம்ஓப்பிக்கு. இதுல கையெழுத்த வாங்கிக் கொண்டாந்து கொடுத்துட்டு கட்டுகள வாங்கிட்டுப் போங்க. பாத்து நல்ல வக்கீலாப் பிடிங்க. ஜெயிக்க வேண்டிய கேஸ்ஸ தோத்துப் போகச் செஞ்சுடக் கூடாதுல்ல!"ன்னாரு வக்கீல் முதுகுல குத்துறவேம் வாஞ்சையா நெஞ்செ தடவி வுடுறாப்புல.

            "நாளைக்கு நாம்ம கையெழுத்தோட வந்தா கட்டுகளக் கொடுத்துடுவீங்களே? கட்டுகள கொடுக்க முடியாதுன்னு வேறெதுவும் காரணம் சொல்ல மாட்டீங்களே? வேற எதுவும் நாம்ம நாளைக்கிச் செஞ்சிட்டு வாரணம்ன்னா சொல்லிப்புடுங்க. அதெயும் செஞ்சிட்டு வந்துடுப்புடறேம்!"ன்னாம் விகடு எந்தப் புத்துலேந்து எந்தப் பாம்பு பொறப்படுமோங்ற பயத்துல.

            "அப்பிடில்லாம் இல்ல பிரதர். நாளைக்கு கையெழுத்தோட வாங்க. கட்டுகளோட போங்க. ராத்தரி ஏழு மணிக்கு மேல வாங்க. சீக்கிரமாவே வந்து நின்னுப்புட்டு நாம்ம காக்க வெச்சிட்டதா சொல்லாதீங்கோ!"ன்னாரு வக்கீலு பத்தரை மாத்துத் தங்கத்தெ பொசுக்குன்னு ஒரசிப் பாத்துடப்புடாதுங்றாப்புல. செரிங்ற மாதிரிக்கித் தலைய ஆட்டிக்கிட்டுக் கெளம்புனாம் விகடு.

            வூட்டுக்கு வந்துச் சங்கதியச் சொன்னதும் ஆர்குடிக்குப் போயி ஆஸ்பிட்டல்ல கையெழுத்தையும் வாங்கிக்கிட்டு, அப்பிடியே திருவாரூருக்கும்லா போக வேண்டிருக்குன்னு யோசிச்சாரு சுப்பு வாத்தியாரு நாற்பது சுத்து சுத்தாம நாலு சுத்து மட்டும் சுத்துனா நம்ம ஊரு சாமி கோவிச்சும்ங்றாப்புல. நாளைக்குப் போயிக் கையெழுத்து வாங்கிட்டு, நாளா நாளைக்குக் கூட போவலாம்ன்னா அந்த வக்கீலு கிறுக்குப் பிடிச்சாப்புல நாம்ம சொன்ன நாளுக்கு வர்றாம, ஏம் மறுநாளு வர்றேன்னு அதெ ஒரு காரணமாக்கி கட்டெ கொடுக்க முடியாதுன்னு இன்னொரு நாளுக்கு அலைய வுட்டா என்னத்தெ பண்ணுறதுன்னு அப்படியும் இப்படியும் அதுக்கும் யோசிச்சாரு சுப்பு வாத்தியாரு.

            "நாளைக்கு நாம்மப் போயி பகல்லயே கையெழுத்த வாங்கியாந்து வெச்சிடறேம்டாம்பீ! நீயி சாயுங்காலம் பள்ளியோடம் வுட்டு வந்ததும் வாங்கியாந்துடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சொமையில பாதிய தாம் வாங்கிக்கிறேம்ங்றாப்புல.

            "அடிபட்ட ஒடம்போடாயா?"ன்னாம் விகடு தலைக்காயம் பட்டவேம் எப்பிடி தலைச்சொமையா மூட்டெயெ சொமக்க முடியும்ங்றாப்புல.

            "வேறென்ன பண்ணுறது? அவ்வேம் வரச் சொன்ன தேதியில, நேரத்துல போயிடுறதாங் நல்லது! வவுத்து வலி நமக்குத்தானே தவுர அவனுக்கில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வைத்தியரு சொல்ற நேரத்துலத்தாம் மருந்தெ குடிக்கணும்ங்றாப்புல.

            "அத்து சரிதாங். நாம்ம வண்டிய எடுத்துக்கிட்டு பள்ளியோடம் போறேம்ப்பா. நேரா அப்பிடியே வண்டியிலயே வூட்டுக்கு வர்றாம பள்ளியோடம் வுட்டதும் ஆர்குடிக்கு ஆஸ்பிட்டலுக்குப் போயி ரொம்பப் பேயாம கையெழுத்த வாங்கிட்டு நேரா வக்கீலோட ஆபீஸூக்கு இஞ்ஞ திருவாரூரு வந்துடுறேம்ப்பா. கட்டுகள வாங்கிட்டு அப்பிடியே வூட்டுக்கு வந்துடுறேம்ப்பா!"ன்னாம் விகடு அலையுறதுன்னு எழுதியிருக்கிறதெ ஏம் ரெட்டைத் தலைக்குப் பிரிச்சுக்கிட்டு, அத்து ஒத்தெத் தலையிலயே இருக்கட்டும்ங்றாப்புல.

            "ரொம்ப அலட்டு அலைச்சலால்லடாம்பீப் போவும். மழெ வேற சாயுங்காலம் ஆன்னாக்கா வந்துக்கிட்டு இருக்கு. ரோட்டுல பாத்துச் சூதானாம அம்புட்டுத் தூரத்துக்கும் போயிட்டு வந்துப்புடுவீயா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒத்த மூச்சுல தூக்கிப்புடுறேம்ன்னுகிட்டு மூச்சுப் புடிச்சிக்கிட்டு நின்னுடக் கூடாதுங்றாப்புல.

            "போயித்தானே ஆவணும்ப்பா!"ன்னாம் விகடு பஸ்ஸ ஓட்டுற டிரைவரு பாதியில நிறுத்திட முடியாதுங்றாப்புல.

            "செரி பாத்துப் பத்திரமாப் போயிட்டு வா! காரியத்தெ முடிச்சிட்டு வந்துப்புடு. கட்டெ வாங்குறதுக்கே இம்மா மெனக்கெட்டா பெறவு இன்னொரு வக்கீலப் பாத்துக் கட்டுகளக் கொடுத்து அதுக்கு வேற கதெயச் சொல்லியாவணும். இவளெ வேற சீக்கிரமா தேத்தி வக்காலத்துக்குக் கையெழுத்துப் போட கொண்டுப் போயி ஆவணும். வேல நெறையக் கெடக்கு. ஒவ்வொண்ணா பாத்து வெச்சாத்தாம் செரிபட்டு வாரும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒரு வேலை கொறைஞ்சா நாலு வேலை வரிசையா வந்து நிக்குதுங்றாப்புல.

            "நாளைக்கு எப்படியும் கட்டு நம்ம கைக்குள்ள வந்துடும்ப்பா!"ன்னாம் விகடு ராத்திரி வந்துப்புட்டா இருட்டு தானா வந்துப்புடும்ங்றாப்புல. ஆயிடுங்ற நம்பிக்கையில சுப்பு வாத்தியாரும் சரிங்ற மாதிரிக்கித் தலைய ஆட்டுனாரு வர்ற போற இருட்டுல எதாச்சும் கண்ணுக்கு வெளிச்சம் தெரியுமாங்ற மாதிரிக்கு.

மறுநாளு பள்ளியோடத்துலேந்தே நேரா விகடு ஆர்குடி ஆஸ்பிட்டலுக்குக் கெளம்பிப் போனாம். அஞ்சரைக்கெல்லாம் ஆஸ்பிட்டல்ல இருந்தாம். வெங்கு ஆரஞ்சுப் பழங்கத்தாம் செய்யு சாப்புடறதா சொன்னதால அதெ ஒரு அஞ்சு கிலோவுக்கு வாங்கிப் போயிருந்தாம். செய்யுவப் பாக்குறதுக்கு ரொம்ப ஒடைஞ்சிப் போனாப்புலத்தாம் இருந்தா. அவளோட மனசுல திரும்பவும் ஆயிரத்தெட்டுக் கொழப்பங்க வந்து மண்டியிருக்கணும். வக்கீலு ஆபீஸ்ல நடந்த சங்கதிளச் சொல்லி, அவரு கொடுத்து வுட்ட காயிதத்துல கையெழுத்தப் போட்டுத் தர்ற சொன்னாம் விகடு.

            "வேணுக்கும்ன்னே அந்த வக்கீலு இழுத்தடிக்கிறாருண்ணா! நம்மாள அவருக்கு இனுமே எந்தப் பிரயோஜனமும் ல்லங்றதால இப்பிடிப் பண்ணுறாரு. இந்தச் சங்கதிய நேத்தே சொல்லி இந்த மாதிரிக்கி எழுதி கையெழுத்தப் போட்டு அஞ்சுக் காயிதத்துல இன்ன மாதிரிக்கு எழுதிக் கொடுத்து வுடுன்னு சொன்னா நாம்ம செய்ய மாட்டேமா? கொடுக்குறதுதாங் கொடுக்குறேம், அதெ சாதாரணமா கொடுத்துப்புடக் கூடாது, அலைய வுட்டுத்தாம் கொடுக்கணுங்ற குயுக்தியில இப்பிடிப் பண்ணுறாரு அந்த வக்கீலு!"ன்னா செய்யு கொசக்கெட்ட பயெ செய்யாத வேலைக்கு கோடி காரணத்தெ சொல்லுவாம்ங்றாப்புல.

            "ரொம்பப் பேசுறதுக்கில்ல. நாம்ம கெளம்பிப் போனாத்தாம் வக்கீலு சொன்ன நேரத்துக்கு அங்க இருந்து கட்டுகள வாங்கியார்ர முடியும். நாம்ம கெளம்புறேம்!"ன்னு செய்யு கையெழுத்துப் போட்டுக் கொடுத்த காயிதங்கள வாங்கிட்டுக் கெளம்புனாம் விகடு பேசுனா பேச்சு அனுமாரு வாலு போல ஆயிடும்ங்றாப்புல. அவ்வேம் கெளம்புறப்போ செய்யு சொன்னா, "இன்னிக்கும் கோவிந்து அண்ணா, பெத்தநாயகம் அண்ணால்லாம் வந்து பாத்துட்டுப் போனாங்கண்ணே!"ன்னா உள்ளூர்ல இருக்குற கோயில பாக்க வேண்டியவங்க பாக்காம போனாலும் வெளியூர்லேந்து வந்து பாக்குறதுக்கு ஆளு இருக்குங்றாப்புல. அதெ கேட்டதும் நாம்மத்தாம் நெதமும் வந்துப் பாக்க முடியுலங்ற ஒரு குத்த உணர்ச்சி விகடுவோட மனசுல எழும்புனுச்சு. அதெ புரிஞ்சிக்கிட்டவெப் போல, "ஒன்னய நெதமும் வந்துப் பாக்கலங்ற மாதிரிக்கிச் சொல்லிட்டேன்னா?"ன்னா செய்யு நாமொண்ணு நெனைச்சு சொன்னா வார்த்தைக்கு வோறொண்ணு அர்த்தம் அதுவா வந்துச் சேந்துக்கிடுதுங்றாப்புல. அதுக்கு ஆமாங்ற மாதிரிக்கி தலையாட்டுறதா, இல்லேங்ற மாதிரிக்கித் தலையாட்டுறதான்னு தெரியாம ஒரு மாதிரியா மைய்யமா வௌங்கிக்க முடியாத கணக்கா தலையாட்டி வெச்சாம் விகடு.

            "அவ்வேம் ன்னாடி பண்ணுவாம்? அஞ்ஞ இஞ்ஞன்னு அலைஞ்சிட்டுக் கெடக்காம். போதாக் கொறைக்கு வண்டியப் போட்டு வுழுந்து ஒடம்பெல்லாம் வேற தேய்ச்சி வெச்சிருக்காம்."ன்னுச்சு வெங்கு செய்யுகிட்டெ தத்தளிச்சு நிக்குறவனெப் போயி காப்பாத்த வாரலன்னு கோவிச்சிக்கக் கூடாதுங்றாப்புல. பெறவு விகடுவப் பாத்து திரும்பி, "நீயி ஒண்ணும் நெனைச்சுக்காதாடாம்பீ! அவுங்களுக்கு இப்பிடி அலையுறதெ பொழப்பு. வந்துப் பாக்குறாங்க. நீயி யிப்போ இந்தக் காரியத்தெ பாரு. முடிஞ்சப்போ வந்துப் பாரு!"ன்னுச்சு வெங்கு கோயிலு பூசாரி சாமியக் கும்புடுறது ஒண்ணும் பெரிசில்ல சம்சாரி சாமியெ நெனைச்சிப் பாக்குறதே பெரிசுங்றாப்புல.

            "எப்போ ஆஸ்பிட்டல வுட்டு வெளியில வுடுறதா டாக்கடருமாருக சொல்லிருக்காங்க?"ன்னாம் விகடு குந்த வெச்ச எடத்துலயே அந்திச் சாயுற வரைக்கும் உக்காந்துகிட்டு இருக்க முடியாதுங்றாப்புல.

            "இவ்வே வலி இருக்குன்னு சொல்லிட்டு இருக்கா. ஒரு நேரத்துல வலியில்லங்றா. இன்னொரு நேரத்துல வலி உசுருப் போவுதுன்னு மாத்திரையப் போட்டு முழுங்கிட்டு படுத்துத் தூங்குறா. அதாங் ஒண்ணும் புரிய மாட்டேங்குதுடாம்பீ. இந்த ஆஸ்பிட்டல்ல வுட்டு பிரைவேட்டா ஒரு ஆஸ்பிட்டல்லயாச்சும் கொண்டு போயிக் காட்டித்தாம் ஆவணும் போலருக்குடாம்பீ!"ன்னுச்சு வெங்கு கோளாறு கொணமான்னா கோயிலுக்குப் போயி அழுவப் போறேம்ங்றாப்புல.

            "டாக்கடருங்க என்னத்தாம் சொல்றாங்க?"ன்னாம் விகடு சாமி எப்போ காட்சி தரும், சாமியாரு எப்போ விபூதி கொடுப்பாருங்றாப்புல.

            "கொஞ்ச நாளுக்கு அப்பிடித்தாம் இருக்கும்ன்னு சொல்றாவோ. அவுங்ககிட்டெயும் இதெயே கோவத்துலக் கேட்டுப்புட்டுட்டேம்டாம்பீ! ஆன்னா அந்த டாக்கடருங்க பொறுமையா சொன்னாங்க. பிரைவேட்டு ஆஸ்பிட்டல்ல போனாலும் இதெத்தாம் காசிய வாங்கிட்டுப் பண்ணுவாங்க. நாஞ்ஞ இதெ இலவசமா பண்ணித் தர்றேம்ங்றாங்க. இருந்தாலும் இவளுக்கு வலி போவ மாட்டேங்குதுன்னுல்லா சொல்றா. அதாம்டாம்பீ நமக்குப் பயமா இருக்கு."ன்னுச்சு வெங்கு காசு செலவு பண்ணாம பண்டுற பரிகாரம் பலிக்குமாங்றாப்புல.

            "அவுங்க சொல்றாப்புல கொஞ்ச நாளும் இருந்துப் பாப்பேம். கொணம் காங்கலன்னா நீயி சொல்றாப்புல செஞ்சிப்புடலாம்ம்மா!"ன்னாம் விகடு பொறுத்துப் பாத்தா வெம்புதா கனியுதாங்றதெ தெரிஞ்சிக்கிடலாம்ங்றாப்புல.

            "செரி நீயி கெளம்பு! நாம்ம வேற ஒக்கார வெச்சிப் பேசிட்டு இருக்கேம்!"ன்னுச்சு வெங்கு பேச்செ கொறைச்சு காரியத்தெ பாக்கலாம்ன்னா வாய் சும்மா வுடாதுங்றாப்புல. விகடு கெளம்புனாம் மூக்கொண்ணு இருக்குற வரைக்கும் சளி பிடிக்குறதும் நிக்காது, வாயொண்ணு இருக்குற வரைக்கும் பேசுறதும் நிக்காதுங்றாப்புல. வர்றப்போ டிவியெஸ் பிப்டியில முப்பதஞ்சு கிலோ மீட்டரு வேகத்துல வந்தவேம், திருவாரூருக்குப் போறப்புயம் அதெ வேகத்துலப் போனாம். தனியா அவ்வேம் மட்டும் போறப்போ அவனுக்கு எந்தப் பயமும் யில்ல ஒத்தையில போறப்ப ஒண்ணுத்தெ பத்தி மட்டுந்தாம் நெனைப்பு இருக்கும், மித்த நெனைப்புல்லாம் எங்கிருக்குன்னு தெரியாதுங்றாப்புல. அப்பாரோட போறப்ப மட்டுந்தாம் சாதாரண வேகத்துல போறதுக்குக் கூட அவனோட மனசுல ஒரு பயம் வந்து கவ்விக்கிட்டு இருந்துச்சு. ஒரு முறை வுழுந்ததும் ஒவ்வொரு முறையும் வுழுந்துடுவேங்ற நெனைப்புல உண்டாவுற கொழப்பம் அது, ஒரு கல்லு எறியுறதுக்கு அலை அலையா விரியுற வட்டத்தெப் போல.

            வக்கீலு ஆபீஸூக்கு அவரு சொன்னாப்புல ஏழு மணிக்கு மேல போயி நின்னாம். மணி ஏழே கால் ஆயிருந்துச்சு. ஆன்னா மேல மொத மாடியில ஆபீஸ் தொறந்தபாடா யில்ல. வக்கீலுக்குப் போன அடிச்சிக் கேட்டாம். அஞ்சு நிமிஷத்துல வந்துப்புடுறதா சொன்னாரு. பத்து நிமிஷத்துக்கு ஒரு மொறெ அஞ்சு மொறெ போனடிச்சப்பவும் அதையே சொல்லிட்டு எட்டரை மணி வாக்குலத்தாம் வந்து ஆபீஸ்ஸத் தொறந்தாரு. இன்னும் கொஞ்ச நேரம் ஆஸ்பிட்டல்ல கூட ஒக்காந்த பேசிட்டாவது வந்திருக்கலாம், ஆறுதாச்சும் இருந்திருக்கும், இஞ்ஞ வந்து இப்பிடித் தண்டமா காத்துக் கெடக்கணும்ன்னு இருக்கேன்னு நெனைச்சிக்கிட்டாம் விகடு சீக்கிரமே வந்தா காக்க வெச்சுத்தாம் வருமாம் வண்டிங்றாப்புலன்னு.

            வக்கீல்கிட்டெ செய்யுகிட்டெயிருந்த கையெழுத்து வாங்குன அத்தனெ காயிதங்களையும் கொடுத்தாம் விகடு. அதெ ஒண்ணுக்கு நாலு மொறெ உத்துப் பாத்துக்கிட்டாரு வக்கீலு. விகடு நெனைச்சாம் அவரு கட்டுகள எல்லாத்தையும் எடுத்து தயாரா வெச்சிருந்திருப்பார்ன்னு. ஆன்னா அவரு ஒவ்வொரு கட்டுகளா அரை மணி நேரத்துக்கு மேல தேடிட்டு இருந்தாரு வெச்ச பொருளெ எங்க வெச்சேம்ன்னு தெரியாதவேம் தேடிட்டு இருக்கிறாப்புல. அதெ வெறிச்சாப்புல பாத்துட்டு இருந்தாம் விகடு மைதானத்துக்கு வெளியில நிக்குறவேம் வேடிக்கெ பாக்குறதெ தவுர வேறென்னத்த செய்ய முடியும்ங்றாப்புல.

            "மறுநாளுக்கு உரிய கட்டுகள மொத நாளு தேடிப் பிடிச்சித்தாம் எடுத்து வெச்சிக்கிறது பிரதர். அதால இப்பிடித்தாம் எல்லாம் அப்படி இப்படின்னு கெடக்கும். ஒங்க கட்டுக எல்லாம் இங்கத்தாம் இருக்கும். கொஞ்சம் பொறுமையா இருந்தீங்கன்னா எடுத்துக் கொடுத்துப்புடுறேம்!"ன்னாரு வக்கீலு பொறுமையா இருக்குறவங்களுக்குத்தாம் எல்லாம் அருமையா கெடைக்கும்ங்றாப்புல.

            "ஒண்ணும் அவ்சரமில்ல. மறுக்கா இஞ்ஞ வராத அளவுக்கு சரியா பாத்து எடுத்துக் கொடுங்க!"ன்னாம் விகடு இன்னிய பொழுது இதுலயே போனாலும் பரவாயில்ல, நாளைய பொழுது இங்க வந்துத்தாம் விடிஞ்சிடணும்ன்னு ஆயிடக் கூடாதுங்றாப்புல.

            "என்னா பிரதர் அப்பிடிச் சொல்லிட்டீங்க? நீங்க எப்ப வேணாலும் இங்க வரலாம். நாம்ம வழக்குன்னு மட்டும் பழகுறதில்ல. அதெத் தாண்டி ஒரு பேமிலி வெல்விஷரா ரிலேசன்னாத்தாம் பழகுறேம். இப்போ இந்த வழக்குகள்ல நீங்க வேற வக்கீல வெச்சிகிட்டாலும் இது சம்பந்தமா நம்மள நீங்க எப்போ வேணும்ன்னாலும் கான்டாக்ட் பண்ணலாம். வேற எந்த சட்ட ரீதியான உதவிகள் வேணும்ன்னாலும் கேளுங்க கண்டிப்பா செஞ்சித் தர்றேம்!"ன்னாரு வக்கீலு குழியில தள்ளி வுட்டாலும் தூக்கி வுட கயித்தெ ஒண்ண தூக்கிப் போடுவேம்ங்றாப்புல.

            "கட்டுகள கொடுக்குறப்பவே இன்னொரு தவா அலைச்சல் யில்லாம எடுத்துக் கொடுத்துட்டாவே அதுவே பெரிய ஒதவித்தாம்!"ன்னாம் விகடு குழியில தள்ளி வுட்டு மண்ணெ போட்டு மூடாம போனா அதுவே பெரிய உதவிங்றாப்புல.

            "காமெடி பண்ணுறீங்க இல்ல! நம்ம ஆபீஸூக்கு வந்து நம்மளோட பேசிப் பேசி நல்லா டிரெய்ன்ட் ஆயிட்டீங்க பிரதர்!"ன்னாரு வக்கீலு சகவாச தோஷம் ஜலதோஷத்தப் போல பிடிச்சுக்கும்ங்றாப்புல.

அவரு எல்லா கட்டுகளையும் எடுத்துக் கையில கொடுத்தப்போ மணி ஒம்பதே முக்கால் ஆயிருந்துச்சு. அதுக்குப் பெறவு அதெ வாங்கிட்டு விகடு அவருக்கு ரொம்ப நன்றின்னு சொல்லிட்டுப் பொறப்பட்டாம் காசக் கொடுத்தாவது உதவாதவனோட நெருக்கத்தெ வுட்டு வெலகி வந்துப்புடணும்ங்றாப்புல. ஒரு வக்கீல்கிட்டெயிருந்து எல்லா கட்டுகளும் கைக்கு வந்த பெற்பாடு இன்னொரு வக்கீலோட கைக்கு அதெ கொண்டுப் போயிச் சேக்க வேண்டிய அடுத்த வேல வந்துச் சேந்துச்சு ஒண்ணு முடியுற எடத்துல இன்னொண்ணு ஆரம்பிக்கும்ங்றாப்புல.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...