5 Feb 2021

வாதி சொல்லாம வழக்குக் கட்டுகள தர மாட்டேம்!


 வாதி சொல்லாம வழக்குக் கட்டுகள தர மாட்டேம்!

செய்யு - 708

            வக்கீல் திருநீலகண்டன் அவரு ஒரு புதுக் கதெயச் சொல்ல ஆரம்பிச்சாரு. "நாமளே கொடுக்கலாம்ன்னு நெனைச்சதே நீங்களே கேக்குறீங்க! நெஜமான சில காரணங்கள ஒங்ககிட்டெ சொல்ல முடியல. அதுக்குத்தாம் எங்கப்பாவுக்கு ஒடம்பு சரியில்ல, எங்கம்மாவுக்கு ஒடம்பு சரியில்லன்னு சொல்ல வேண்டியதாப் போச்சுது. நமக்கு மூணு பார் கெளன்சில்லேந்து பிரஸர். கங்காதரன் பதிவு பண்ணிருக்கிற தஞ்சாவூரு பார் கெளன்சில் ஒண்ணு, இங்க திருவாரூரு பார் கெளன்சில், அங்க ஆர்குடி பார் கெளன்சில்ன்னு மூணுலேந்தும் நெருக்கடி. நம்மள இந்த கேஸ்ல ஆஜராவக் கூடாதுன்னு நமக்கு நாலு நாளா நெருக்கடி. நம்மள விடுவேனான்னு வைக்குறானுங்க. அவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலயுந்தாம் நாம்ம ஒங்க கேஸ் கட்டெ விடாம பிடிச்சி வெச்சிருக்கிறேம். நீங்க நெனைக்குற மாதிரியில்ல பிரதர் இதுல விசயம். நாளுக்கு நாளு ரொம்ப சீரியஸாயிப் போயிட்டெ இருக்குது. அதெல்லாம் ஒங்களுக்குத் தெரியக் கூடாதுன்னு நெனைச்சி மெளனமா இருக்கிறேம். கொஞ்ச நாளாவட்டும். இந்தப் பிரச்சனெ மறைஞ்சி இன்னொரு பிரச்சனெ உருவாவட்டும். அது வரைக்கும் அமைதியா இருங்க. அதெ மட்டுந்தாம் இப்ப நாம்ம சொல்லுவேம்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் கூட்டுக்குள்ள பதுங்கி இருக்குற புழுத்தாம் வண்ணத்துப் பூச்சியா பறக்குங்றாப்புல.

            "ஏம்ங்கய்யா நம்மளால ஒஞ்ஞளுக்கு நெருக்கடி, பெரச்சனெயெல்லாம்? அந்தப் பிரச்சனைக நெருக்கடிக வர்றதுக்கு மின்னாடியே கட்டெ கொடுங்கன்னு கேட்டது ஒங்க பாஷையில சொன்னா ஆண்டவனோட பிராப்தம். நம்மளோட பாஷையில சொன்னா சரியான நேரத்துல எடுத்த சரியான முடிவு."ன்னாம் விகடு விட்டு விடுதலையாவுறதுக்கு வழி இருக்கிறப்போ புழுங்கிக் கெடந்து சாக வேண்டியதில்லங்றாப்புல.

            "கட்டெ கொடுக்குறதுல நமக்கு ஒண்ணும் ஆட்சேபனெயில்ல. ஆன்னா இந்த வழக்க எடுத்து நடத்துற அளவுக்குத் தெறமையான வக்கீலாப் பாத்து நீங்க கட்ட கொடுக்கணும். அதெல்லாம் சாத்தியமான்னுப் பாத்துக்குங்க. இந்த வழக்க அந்த அளவுக்கு ஸ்ட்ராங் பண்ணி வெச்சிருக்கேம், எந்த நேரத்துல வேணாலும் அவ்வேம் தலையில கத்தி அறுந்து விழுவுறாப்புல. அதுக்காகத்தாம் பிரதர் ஆர்குடியில ரண்டு வழக்குலயும் நாமளே ஆஜரானது. நாம்ம நெனைச்சிருந்தா அங்க ஒரு வக்கீல ஒங்களுக்காக ஆஜராயிருக்க சொல்லியிருக்க முடியும். ஆன்னா சொல்லல. ஏன்னா அங்க ஆர்குடியில இருக்குற வழக்கு, இங்க திருவாரூர்ல இருக்குற வழக்குன்னு எல்லாத்துக்கும் ஒரு லிங்க் இருக்கு. மூணுலயுமே ஒரு சின்குரோனைஸ் இருக்கு பிரதர். ஒண்ணுல ஒரு சின்ன தப்ப பண்ணாலும் அது மத்த மூணையுமே பாதிக்கும். அதெல்லாம் ஒங்களுக்குப் புரியாது. இந்த மூணு வழக்குக்காகவும் நாம்ம எவ்ளவோ செரமங்கள அனுபவிச்சிட்டேம். ஆன்னா எந்த வழக்கையும் விட்டுக் கொடுக்கல. எவ்வளவோ செரமங்களுக்கு மத்தியில, நெருக்கடிக்கு மத்தியில ஆர்குடிக்கும் வந்து ஆஜரானேம். அதெல்லாம் மறந்துடக் கூடாது பிரதர். எல்லாத்தையும் யோசனையில வெச்சுச் சொல்லுங்க. கட்டெ நாம்ம கொடுக்குறதுல எந்தப் பிரச்சனையும் இல்ல. நம்மகிட்டெ கட்டெ கொடுங்கன்னு கேட்ட யாருகிட்டெயும் இவ்ளோ நேரம் உக்கார வெச்சிப் பேசுனதில்ல. ஒங்கள உக்கார வெச்சிப் பேசுறேம்ன்னா வெறும் கிளையண்டா மட்டும் நெனைக்கல நாம்ம. அதையும் தாண்டி ஒங்க‍ பேமிலியோட வெல்விஷர்ரா நாம்ம இருக்கேம்!"ன்னாரு வக்கீலு ஆபத்துல கை வுட்டதெ நெனைக்காம, ஆபத்தில்லாதப்போ கைகொடுத்ததெ மறக்கக் கூடாதுங்றாப்புல.

            "ஒரு பேமிலி வெல்விஷர்க்குத்தாம் இப்பிடி இத்தனெ நாளா எஞ்ஞ குடும்பம் இவ்ளோ பெரச்சனையில இருக்குறப்போ வந்துக் கூட பாக்கணும்ன்னு கூட தோணல யில்ல. கொறைஞ்சபட்சம் ஒரு போன் பண்ணிக் கேக்குறதுல என்னத்தெ செருமத்தெ வந்துடப் போவுதுங்கன்னு சொல்லுங்க?"ன்னாம் விகடு ஆறுதலா ஒத்த வார்த்தெ சொல்றதுக்கு கோடி ரூவாய்யா செலவாயிடும்ங்றாப்புல.

            "பிரதர்! நீங்க நம்மளோட சிச்சுவேஷனையேப் புரிஞ்சிக்கிடாம பேசுறீங்க. ஒங்களுக்கு அங்க உண்மையிலயே பெரிய பிரச்சனைத்தாம். நாம்ம இல்லன்னு சொல்லல. அதெ தாண்டுன பிரச்சனை இங்க நமக்கு. மூணு பார் கெளன்சில்லயும் அடிக்குற போனுக்கு என்னால எடுத்துப் பேச முடியல. ஒண்ணுக்கு எடுத்துட்டுப் பேசி வெச்சா ஒடனே அடுத்த பார் கெளன்சிலேர்ந்து போன். அதெ எடுத்துட்டுப் பேசி வெச்சா இன்னொண்ணுலேந்து நாம்ம ஒரு முக்கோண சொழலுக்குள்ள சிக்கிக்கிட்டெம். இந்த மூணுக்கும் பதிலச் சொல்லி மாளல. போனப் போக்க ஒங்ககிட்டெ சொல்லம்ன்னா மூணு எடத்துலேந்தும் நம்மள கோர்டடுல ஆஜராவ விடாத அளவுக்கு நெருக்கடிய அந்த கங்காதரன் உண்டாக்கிட்டாம்! அதெ சமாளிச்சதப் பத்தி ஒங்ககிட்டெ நாம்ம ஒரு வார்த்தைச் சொல்லியிருப்பேனா?"ன்னாரு வக்கீலு உள்காயமா அடிபடுறது வெளியில தெரியாதுங்றாப்புல.

            "அதுக்காகத்தாம் சொல்றேம்ங்கய்யா! இனுமே எஞ்ஞளாலும் ஒஞ்ஞளுக்கு எந்தச் சிக்கலும் வேண்டாம். ஒஞ்ஞளாலும் எஞ்ஞளுக்கு எந்தச் சிக்கலும் வாணாம்!"ன்னாம் விகடு சிக்குன நூல் கண்டெ ஏம் கையில வெச்சிக்கிட்டு தேவையில்லாம்ம சிக்கெடுக்கணும்ங்றாப்புல.

            "நம்மாள ஒங்களுக்குச் சிக்கல்ன்னா? புரியலையே பிரதர்!"ன்னாரு வக்கீலு சிக்கல் இல்லன்னா அங்க வக்கீலுக்கு என்னா வேலைங்றாப்புல.

            "சொன்னா ஒஞ்ஞளுக்குத்தாம் மனசு சங்கடம்! வேண்டாம் விட்டுடுங்கய்யா!"ன்னாம் விகடு பிடிக்காத பலவாரத்தெ ஏம் திங்கணும்ன்னு ஆசெப்படணும்ங்றாப்புல.

            "சொல்லுங்க பிரதர்! நாம்ம ஒங்ககிட்டெ ஓப்பனா பேசுனேம் இல்லியா! அதெ மாதிரி பேசுங்க. இதுல என்ன இருக்கு? நம்ம நெலமையை நாம்ம சொல்றேம்! அதெ போல ஒங்க நெலமைய நீங்க சொன்னாத்தாம் நமக்குத் தெரியும். சொல்லாம மனசுக்குள்ளயே நீங்களா நெனைச்சுக்கிட்டா நமக்குத் தெரியுமா சொல்லுங்க? எதுவா இருந்தாலும் சிதறு தேங்காயப் போட்டு உடைக்குறாப்புல உடைச்சிடணும். அதுதாம் நமக்குப் பிடிக்கும்!"ன்னாரு வக்கீலு இலையில வெச்சிட்ட பலவாரத்தெ திங்காம இருக்க முடியாதுங்றாப்புல.

            "அப்பிடிச் சொல்லித்தாம் ஆவணும்ன்னு நீஞ்ஞப் பிடிவாதம் பிடிச்சா அதெ சொல்றதுல நமக்கொண்ணும் அட்டியில்ல. ஆர்குடியில ஒஞ்ஞளப் பத்தி என்னத்தெ பேசிக்கிறாங்க தெரியுமா? நீஞ்ஞ வெலப் போயிட்டதா பேசிக்கிறாங்க. அவுங்க தரப்புல பணத்தெ வாங்கிக்கிட்டு அவுங்களுக்கும் விசுவாசமா யில்லாம, எஞ்ஞகிட்டெயும் வழக்கு நடத்துறேன்னு பணத்தெ வாங்கிக்கிட்டு எஞ்ஞளுக்கும் விசுவாசமா யில்லாம ரண்டு பக்கத்துலயும் வம்பக் கோத்து வுட்டுக்கிட்டுக் குளிரு காயுறதா பேசிக்கிறாங்க!"ன்னாம் விகடு குப்பைக் குழிய கௌறுனா நாத்தாம்தாம் கௌம்பும்ங்றாப்புல.

            "நெனைச்சேம் பிரதர்! நீங்க கட்டெ கேக்குறப்பயே நெனைச்சேம். எவ்வளவு இருபதாயிரம் வாங்குனதா பேசிக்கிறாங்களா? அப்பிடித்தானே பேசிப்பாங்க?"ன்னாரு வக்கீலு பக்கத்துலயே வௌக்குப் பிடிச்சுக்கிட்டு நின்னு பாத்தவர்ரப் போல.

            "ரூவா வரைக்கும்தாம் சரியா சொல்றீயளே? பெறவென்ன?"ன்னாம் விகடு தப்புப் பண்ணவங்களே ஒத்துக்கிட்ட பெறவு சாட்சியம் எதுக்குங்றாப்புல.

            "பெருமாள் சத்தியமா சொல்றேம் அதுல எதுவும் உண்மெயே யில்ல. நாம்ம வெலைப் போகுற வக்கீல் கிடையாது பிரதர்!"ன்னாரு வக்கீலு படைச்சவேம் தலையில கைய வைக்குறவனெப் போல.

            "நீங்க சிவபக்தர்தானே! ஏம் பொய் சத்தியத்தப் பண்ணி பாவத்தத் தூக்கிப் பெருமாள்கிட்டெ போடுறீங்க? இதுல கூட இவ்வளவு வஞ்சகமா?"ன்னாம் விகடு கெடுக்குறப்ப கூட கும்புடுற சாமிய வுட்டுப்புட்டுக் கும்புடாத சாமிய கவுத்து வுடற மாதிரிக்குப் பேசுதீயேங்றாப்புல.

            "நீங்க இன்னமும் புரியாமத்தாம் பேசுறீங்க பிரதர். நம்மள வெலை கொடுத்து வாங்க இனுமே இந்தப் பூமியில ஒருத்தம் பொறந்துதாம் வரணும் பிரதர். அந்த ஆண்டவனே நேர்ல வந்தாலும் செரித்தாம், அது சிவனா இருந்தாலும், பெருமாளா இருந்தாலும் இந்த திருநீலகண்டனெ வெலை கொடுத்து வாங்க முடியாது. இமயமலைய ஒங்களால வெலை கொடுத்து வாங்க முடியுமா பிரதர்? யில்ல இந்து மகா சமுத்திரத்தெ ஒங்களால வெலை கொடுத்து வாங்க முடியுமா பிரதர்? வானத்தெ, சந்திரனெ யார் பிரதர் வெலை கொடுத்து வாங்க முடியும்? அப்பிடிப்பட்ட ஆளு நாம்ம பிரதர். ஒரு வழக்குல வெலைப் போயி வயிறு வளக்கணுங்ற அவசியமேயில்ல பிரதர் நமக்கு. இந்த வழக்குலேந்து ஒங்களயும், நம்மளயும் பிரிக்க யாரோ பண்ணுற மற்றும் பின்னுற சதிதாம் பிரதர் இந்த வேலை. அது புரியாம பேசுறீங்க!"ன்னாரு வக்கீலு மாயவரத்துக்கு வழி வேதாரண்யம் பக்கத்துல இருக்குங்றாப்புல.

            "நீஞ்ஞ வெலப் போகலன்னா ஏம் ஹெச்செம்ஓப்பியில குறுக்கு விசாரணையப் பண்ணாம எஞ்ஞப் பக்கத்துக்கு அபராதம் கட்டுறாப்புல பண்ணீயங்றதுக்கு மட்டும் காரணத்தெ சொல்லுங்க. நாம்ம ஒஞ்ஞள முழுசா நம்புறேம்!"ன்னாம் விகடு மறைச்சு வெச்ச பூசணிக்காயி முழி பிதுங்கி நிக்குதுங்றாப்புல.

            திருநீலகண்டன் சட்டுன்னு அதுக்குப் பதிலச் சொல்லல. அது வரைக்கும் கேட்ட எல்லா கேள்விக்கும் சட்டு சட்டுன்னுப் பதிலச் சொன்னவரு, அதுக்கு மட்டும் கண்கள மூடி கொஞ்சம் யோசிச்சாரு. உதட்டெ ஒரு மாதிரி சுளிச்சாரு. சிவ சிவான்னு முணுமுணுத்தாரு சாமி பேர்ர உச்சரிக்கிறவேம் தப்பு பண்ண மாட்டாம்ங்றாப்புல.

            "பிரதர் நீங்க சத்திய சோதனைன்னு ஒண்ண கேள்விப்பட்டு இருக்கீங்களா? நாம்ம இப்ப அதெ நேர்ல பாக்குறேம்! இதுதாங் பிரதர் அந்தச் சத்திய சோதனை! வேறென்ன நாம்ம சொல்ல?"ன்னாரு வக்கீலு சமாளிக்குறதுன்னு முடிவு பண்ண பெற்பாடு சத்தியமாவது சர்க்கரைப் பொங்கலாவதுங்றாப்புல.

            "சத்தியச் சோதனைய எழுதுன காந்தியாரும் ஒரு வக்கீலுதாம். சத்தியத்துக்கே சோதனெயெ கொடுக்குற நீஞ்ஞளும் ஒரு வக்கீலுதாம்!"ன்னாம் விகடு மரத்துலேந்து வெட்டுறதுதாம் கோடரிக் காம்புங்றாப்புல.

            "நீங்க நம்மள ரொம்ப டீப்பா நேரடியா ஹார்ட்டுக்குள்ளாரயே ஊசியால வெச்சுக் குத்துறீங்க பிரதர். ஒங்கள குத்தமோ, கொறையோ சொல்ல மாட்டேம். ஏன்னா ஒங்க சிச்சுவேஷன் இப்போ அப்படி இருக்கு. ஒங்க மனசெ களைச்சி விட நாம்ம பக்கத்துல இருக்க முடியாத இந்த நேரத்துல நெறைய பேரு மொளைக்குறாங்க. ஒண்ணு சொல்லட்டுமா பிரதர்! ஒங்க தங்கச்சிய செருப்பால அந்த கங்காதரனெ அடிக்கச் சொன்னதே நாம்மத்தாம்ன்னு மூணு பார் கெளன்சிலேந்தும் கேக்குறாங்க. இதுக்கு என்னத்தெ சொல்றீங்க?"ன்னாரு வக்கீலு நாலாந் தெருவுல செத்தாலும் ஆத்தங்கரையிலத்தாம் கருமாதிங்றாப்புல.

            "நாம்ம கேட்டதுக்கு மொதல்ல ஒரு பதிலெச் சொல்லுங்க. அதுக்குப் பதிலெ வர்றாம்ம நீஞ்ஞ வேற வேற விசயத்துக்குத் தாவிக்கிட்டு இருக்குறீயே! ஒரு வக்கீலோட புனிதமான கடமெயிலேந்து நீஞ்ஞ தவறிட்டிங்றது உண்மெத்தானே? ஒஞ்ஞள நம்பி வந்த எஞ்ஞளுக்காக நீஞ்ஞ அவனெ வெச்சி பண்ண வேண்டிய குறுக்கு வெசாரணைய மொறையா பண்ணணுமா யில்லியா? அதெக் கூடவா நாஞ்ஞ சொல்லணும்ன்னு எதிர்பாக்குறீயே? நீஞ்ஞ ஆயிரந்தாம் அதுக்கு வெளக்கத்தெ சொன்னாலும் செரித்தாம், சொல்லாமப் போனாலும் செரித்தாம் நீஞ்ஞ சத்தியத்தெ மட்டுமில்லங்கய்யா, எஞ்ஞளயும் சேத்தே சோதிச்சுப்புட்டீங்கய்யா!"ன்னாம் விகடு எடத்தெ கொடுத்த சொவத்தையே மொளைக்குற வெதை ரண்டா பொளக்கும்ங்றாப்புல.

            "நீங்க எந்த அளவுக்கு மனசு புண்பட்டு இருந்தா இப்பிடிப் பேசுவீங்கங்றது நமக்குப் புரியுது!"ன்னு ஆரம்பிச்சாரு வக்கீலு ஓங்கி அடிச்சாலும் ஏங்கி மட்டும் அழுதுடப்படாதுங்றாப்புல.

            "மறுக்கா மறுக்கா நம்மள வழுவட்டையா ஆக்குறாப்புல எதாச்சும் எடுத்து விடாதீங்கய்யா! நமக்கு எரிச்சலா யிருக்கு. ஏம் குறுக்கு வெசாரணையப் பண்ணலங்றதுக்கு நாம்ம ஒரு குறுக்கு வெசாரணைய ஒஞ்ஞகிட்டெ வெச்சிக்கிட்டு இருக்க முடியாது!"ன்னாம் விகடு கோபமா, வெல்லம் இல்லன்னா வௌக்கெண்ணெய்ய எடுத்து நீட்டாதீங்கங்றாப்புல.

            "அதாவது பிரதர் ஆத்திரத்துல உணர்ச்சிவசப்பட்டு அறிவெ இழந்துடக் கூடாது. பிரதர் நாம்ம ஒண்ணு சொல்றேம்ன்னு, திரும்ப அதையே சொல்றேம்ன்னு நெனைச்சி நம்ம மேல கோபப்படாதீங்க. நாம்ம பார் கெளன்சில்ல சொன்னேம், கங்காதரன அடிக்கணும்ன்னு நெனைச்சா ஒங்க தங்கச்சிய விட்டெல்லாம் அடிக்க வேணுங்ற அவசியம் நமக்கில்ல, நாமளே அவனெ வெச்சு அடிப்பேம்ன்னு. அவனெல்லாம் ஒரு ஆளா, ஒங்க தங்கச்சிய விட்டு அடிக்க விட்டுட்டு நாம்ம வேடிக்கைப் பாக்க சொல்லுங்க? இங்க திருவாரூரு கோர்ட்டுப் பக்கமே வர விடாம வெச்சு சுளுக்கு எடுத்துடுவேம். ஆன்னா அந்த அளவுக்கு அதுக்கு ஒர்த்தெ இல்லாத ஆளுத்தாம் அந்த கங்காதரன். ஒரு சிங்கத்தோட மோதி தோத்தாலும் அது ஒரு பெருமெதாம் பிரதர். ஆன்னா ஒரு பன்னியோட மோதி ஜெயிச்சாலும் அதெப் போல ஒரு அசிங்கம் வேறயில்ல. அவனெல்லாம் பன்னிக் கூட்டத்துல ஒருத்தெம். அவனெப் பத்தியெல்லாம் சொல்றதுக்கு ஒண்ணுமில்லே. எவ்ளோ கீழ்த்தரமா நம்மளப் பத்தி ஒங்ககிட்டெ பரப்பி விட்டுருக்காம் பாருங்க பிரதர்!"ன்னாரு வக்கீலு தந்திரக்கார்ரேம் பேச்செ மந்திரம் போல நம்பிடாதீங்கங்றாப்புல.

            "‍ஏம் அவுங்க தரப்புல அப்பிடிப் பரப்பி வுடுற அளவுக்கு நீஞ்ஞ நடந்துக்குறீயே? நாமளும் ஒண்ணு ஒஞ்ஞகிட்டெ சொல்றேம் கேட்டுக்கிடுங்க. கடெசீ வரைக்கும் ஏம் குறுக்கு வெசாரணையப் பண்ணலேங்றதெ நீஞ்ஞளும் சொல்லப் போறதில்லெ, நாமளும் அதெ எங் காதால கேக்கப் போறதில்லெ. அதெப் பத்திக் கேட்டாக்கா சுத்திச் சுத்தி வேற என்னத்தையோ பத்திச் சொல்றீயளே தவுர கேள்விக்கேத்தப் பதில மட்டும் சொல்ல மாட்டேங்றீயளே?"ன்னாம் விகடு தாகத்துக்குத் தண்ணியக் கேட்டா ஒரைப்புக்கு மொளகாய்யச் சாப்புட்டா சரியாயிடும்ன்னு சொல்லுதீங்களேங்றாப்புல.

            மறுபடியும் வக்கீல் திருநீலகண்டன் கண்களை மூடிக்கிட்டு ஒதட்டைச் சுளிச்சிக்கிட்டு மெளனத்துல ஆழ்ந்தாரு. அவரோட வாயி அவர்ரே அறியாமே திரும்பவும் சிவ சிவான்னு முணுமுணுத்துச்சு பேர்ரச் சொல்லி கூப்புட்ட ஒடனே ஆண்டவா வந்துக் காப்பாத்திப்புடுங்றாப்புல.

            "நம்பிக்கெதாம் பிரதர்! வழக்குல வக்கீல் மேல வைக்குற நம்பிக்கெதாம் பிரதர்! இந்த வழக்குலன்னு மட்டுமில்ல, எந்த வழக்குலயும் நாம்ம கட்டெ எடுத்தா கண்டிப்பா ஜெயிப்பேம். எடையில நடக்குற சின்ன சின்ன விசயங்களப் பத்தியெல்லாம் கேக்காதீங்க பிரதர்!"ன்னாரு வக்கீலு தண்ணியில போற கப்பல்ல வுழுவுற சின்ன சின்ன ஓட்டையயெல்லாம் பெரிசு பண்ணிப்புட கூடாதுங்றாப்புல.

            "நீஞ்ஞ தயவுப்பண்ணி வருத்தப்படாதீயே! ஒஞ்ஞளுக்கு இந்த வழக்குன்னு யில்ல. ஆயிரம் வழக்குங்க கெடைக்கும். அதுக்காக நாஞ்ஞ ஒஞ்ஞளப் போல ஆயிரம் வழக்குகள ஒஞ்ஞளுக்காக நடத்திக்கிட்டுக் கெடக்க முடியாது. எதாச்சும் ஒரு முடிவுக்குக் கொண்டு வாரணும். பார் கெளன்சிலேந்து நெருக்கடி கொடுக்குறதா சொல்றதால நீஞ்ஞளும் இனுமே இந்த வழக்குல ஆஜராவ முடியுமான்னு தெரியல. நாஞ்ஞளும் அதுக்காக கெளரவத்தெ வுட்டுக் கொடுத்துட்டு இந்த வழக்கெ அப்பிடியே அம்போன்னு போட்டுட மிடியாது. எதாச்சும் பண்ணித்தாம் ஆவணும். எத்து நடந்தாலும் பரவாயில்ல நீஞ்ஞ வழக்குக் கட்டுகள எடுத்து வெச்சிடுங்க. நாம்ம எடுத்துட்டுப் போயிடுறேம்!"ன்னாம் விகடு தண்ணி வாராத ஆத்துக்கு ஏம் தேவையில்லாம அணை கட்டிக்கிட்டுக் கெடக்கணும்ங்றாப்புல.

            "அப்போ அதுதாம் ஒங்களோட பைனல் டிசிசனா பிரதர்?"ன்னாரு வக்கீலு முடிவெடுக்கிறதெப் பத்தி முடிவெடுத்திட்டீங்களாங்றாப்புல.

            ஆமாங்ற மாதிரி தலைய ஆட்டுனாம் விகடு முடிவெ பண்ணிட்டுத்தாம் பேசிக்கிட்டு இருக்கேம்ங்றாப்புல.

            "நீங்க கேட்ட ஒடனேயே வழக்கோட கட்டுகளத் தூக்கிக் கொடுத்துட முடியாது. ஒங்க தங்கச்சிக்கிட்டெ போன் பண்ணிக் கேக்குறேம். அவுங்க ஒத்துக்கிட்டா கட்டுகளத் தந்துடுறேம்."ன்னாரு  வக்கீலு கொடுத்தவேம் கேட்டா ஒடனே கடனெ திருப்பித் தந்துப்புடணுமாங்றாப்புல.

            "தயவு பண்ணி இப்பவே போன் பண்ணிக் கேட்டுட்டுக் கட்டுகள கொடுத்துடுங்க!"ன்னாம் விகடு பறிகொடுத்தவேம் கண்டுபிடிச்சு வந்து கேக்குறப்போ திருடுன பொருளெ கொடுக்க முடியாதுன்னு சொல்ல முடியாதுங்றாப்புல.

திருநீலகண்டன் வக்கீல் ஒடனே செய்யுவுக்குப் போன அடிச்சாரு. அவ்வே போன எடுக்கல. திரும்ப திரும்ப வக்கீல் அடிச்சிப் பாத்தாரு. செய்யு போன எடுக்கவே யில்ல. அதாங் கெட்ட நேரத்துலயும் மோசமான கெட்ட நேரங்றது போலருக்கு.

            "ஒங்க தங்கச்சி போன எடுக்க மாட்டேங்றாங்க பிரதர். என்னோட கிளையண்ட் அவுங்கத்தாம். அவுங்க சொல்லணும் இந்தக் கட்டுகள கொடுங்கன்னு. அப்பிடிச் சொன்னா கொடுக்குறேம்!"ன்னாரு வக்கீலு கொடுக்கணும்ன்னு மனசு இல்லாதவேம் எச்சிக் கைய்ய கூட அந்தாண்ட இந்தாண்ட ஒதற மாட்டாம்ங்றாப்புல.

            "நீஞ்ஞப் பேசுறதுல பல விசயங்கப் புரிய மாட்டேங்குதுய்யா! பார் கெளன்சிலேந்து நெருக்கடிங்றீயே! கேஸ் கட்டெயும் கொடுக்க மாட்டேங்றீயே! ஏம் பண்ண வேண்டிய குறுக்கு வெசாரணையப் பண்ணலன்னு கேட்டாலும் பதிலச் சொல்ல மாட்டேங்றீயே! தயவுப்பண்ணி எஞ்ஞ வழக்குலேந்து வெலகிக்கோங்கன்னாலும் வெலகிக்க மாட்டேங்றீயே!"ன்னாம் விகடு நாலா பக்கமும் வழியிருந்தாலும் நாயி நாலு சொவத்தைத்தாம் சுத்திட்டு இருக்கும்ங்றாப்புல.

            "நாம்ம போன அடிச்சிட்டேம். ஒங்க தங்கச்சி எடுக்கல. ஒங்க தங்கச்சிய விட்டுப் போன பண்ணி கட்டுகள கொடுங்கன்னு சொல்ல சொல்லுங்க. அடுத்த நிமிஷமே ஏம் அடுத்த நொடியே கட்டுகள தூக்கி அந்தாண்ட வீசிடுறேம்! என்னா நாம்ம சொல்ற பாயிண்ட்டு சரிதானே?"ன்னாரு வக்கீலு படைச்ச பிரம்மன் சும்மா இருக்கிறப்போ எமன் வந்து உசுர்ரக் கேக்குறதுல என்னா ஞாயம் இருக்குங்றாப்புல.

            "இப்போ இன்னிக்கு நாம்ம வந்து அலைஞ்சிட்டுப் போறது தண்டம்தானா?"ன்னாம் விகடு நாப்பது தெருவ சுத்தி வந்தாலும் பிச்சைக்காரனுக்கு பழஞ்சோறுதாம் கெடைக்குமாங்றாப்புல.

            "சில விசயங்கள்ல பொசுக்குன்னாலும் முடிவெ எடுத்துட முடியாது பிரதர். வருத்தப்படாம போயிட்டு வாங்க. நாளைக்கே ஒங்களுக்கு மனசு மாறலாம். அப்பிடி மாறி திரும்ப வாங்கிட்டுப் போன கட்டுகளோட வந்து நின்னீங்கன்னா வெச்சுங்களேம் கோடி ரூவாயக் கொடுத்தாலும் ஒங்க வழக்க எடுத்துக்கிட மாட்டேம்! அதே நேரத்துல வாதி சொல்லாம வழக்குக் கட்டுகளயும் தர்ற மாட்டேம்!"ன்னாரு வக்கீலு சாவியப் போட்டுத் தொறக்காம ஷட்டரைத் தூக்க முடியாதுங்றாப்புல.

            "ஆம்மா யிப்பிடித்தாம் நீஞ்ஞ சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசுவீயே! இதுக்கு மேல இஞ்ஞ நின்னு ஒஞ்ஞகிட்டெப் பேசுறதுல எந்த அர்த்தமுமில்ல!"ன்னு விகடு கோவமா திருநீலகண்டன் ஆபீஸ்ஸ வுட்டு வெளியில கெளம்பி வந்து, கீழே கெடந்த டிவியெஸ் பிப்டிய எடுத்தாம் வூட்டைப் பூட்டிக்கிட்டு உள்ளார இருக்கிறவேம் செவுடனப் போலத்தாம் ஊமையனா உக்காந்திருப்பாம்ன்னு நெனைச்சிக்கிட்டு. அவனுக்கு ஒரு யோசனெ. நாம்ம போன அடிச்சிப் பேசி தங்காச்சிட்டெ விசயத்தச் சொல்லி, கட்டெ கொடுங்றதெ அவளேயே சொல்ல சொல்லி, அந்தப் போன அப்பிடியேக் கொண்டு போயி வக்கீல்ட்ட கொடுத்து கேக்க வெச்சு கட்டெ கொடுய்யான்னு கேட்டா என்னான்னு. விகடு போனப் போட்டாம். போன் ஸ்விட்சுடு ஆப்ன்னு வந்துச்சு தூக்கக் கலக்கத்துல இருக்குறவனா தீப்பந்தம் பிடிக்கப் போறாம்ங்றாப்புல. மணி வேற ராத்திரி எட்டரையக் கடந்திருந்துச்சு கடியாரத்துல சுத்துற முள்ளுக்கு நேரம் காலம் புரியாம அது பாட்டுக்குச் சுத்திக்கிட்டெ இருக்கும்ங்றாப்புல. அவனுக்கு அடுத்ததா அவ்வேம் போவ வேண்டிய பாதை என்னாங்றது புரிஞ்சாப்புல இருந்துச்சு. மங்கலான வெளிச்சத்தக் காட்டுனபடியே டிவியெஸ் பிப்டி ஊர்ரப் பாக்க ஓடிக்கிட்டு இருந்துச்சு. ராத்திரி இருட்டுக்கு பெரிசா வழி வுட மனசு இல்லாததப் போல விகடு போயிட்டு இருந்த டிவியெஸ் பிப்டியோட லைட் வெளிச்சத்துக்குக் கொஞ்சமே கொஞ்சம் மட்டுமே எடம் வுட்டுச்சு.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...